இலங்கையில் 17 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் - மருத்துவ சேவை பாதிப்படையலாம்
-மர்லின் மரிக்கார்-
இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்திலும், 17 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளனர்.
தேசிய சம்பள கொள்கைக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும். இம்முறை வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் நிறுத்தப்பட்டுள்ள சிரேஷ்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் மீண்டும் வழங்கப்படவேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் முன்வைத்தே இத் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று ஆரம்பிப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நளிந்த ஹேரத் நேற்றுத் தெரி வித்தார்.
இத் தொழிற்சங்க நடவடிக்கையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கை பொறியியலாளர்கள் சங்கம், இலங்கை நிர்வாக சேவையாளர்கள் சங்கம், இலங்கை கல்வி சேவை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை பட்டய கணக்காளர்கள் சங்கம், இலங்கை பல் வைத்தியர்கள் சங்கம், இலங்கை மிருக வைத்தியர்கள் சங்கம், இலங்கை ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம், இலங்கை விவசாய நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை கட்டட கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட 18 தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார். எமது கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்னவுடன் நேற்று முன்தினமிரவு மூன்று மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடாத்தினோம்.
இருப்பினும் இப்பேச்சுவார்த்தையில் திருப்திகரமான பதில் கிடைக்கப் பெறாததாலே தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நாம் இன்று காலை 8.00 மணிக்கு வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளோம். அதனைமுன்னெடுக்கும் விதம் தொடர்பாக இன்று கூடும் எமது சங்கத்தின் மத்திய குழுவே தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் எமது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் திடீர் விபத்து சேவை மற்றும் அவசர மருத்துவ சேவைகளில் வழமை போன்று ஈடுபடுவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை இத்தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந் துள்ள தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழில்சார் நிபுணர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு-செலவு திட்டத்திற்கு அதிருப்தியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment