சவூதி அரேபியாவில் இந்தாண்டில், தலையைவெட்டி 153 பேருக்கு மரண தண்டனை
பாதிக்கப்பட்ட சூடான் நாட்டு குடும்பத்தினருக்கு ஒரு மில்லியன் டொலர் இரத்தப் பணத்தை சேகரிக்க தவறிய கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான பிலிப்பைன்ஸ் நாட்டவர் மீது சவூதி அரேபியாவில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தலைநகர் ரியாதில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜெஸ்லிடோ லிடசான் சபன்டா மீதான மரண தண்டனை பொது இடத்தில் வைத்து நிறைவேற்றப்பட்டதாக சவூதி உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சபன்டாவை மீட்பதற்கு அவரது குடும்பத்தினர் மற்றும் பிலிப்பைன்ஸ் அரசு பணம் சேகரித்தபோதும் மொத்தமாக 488,000 டொலர்களையே சேர்க்க முடிந்ததாக பிலிப்பைன்ஸ் வெளிவிவகார திணைக்கள பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மில்லியன் டொலர் தராத பட்சத்தில் சபன்டாவுக்கு மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் கைச்சாத்திட முடியாதென சூடான் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இந்த இரத்தப் பணத்தை கொடுப்பதற்கு இம்மாத ஆரம்பத்தில் இரண்டு வார காலக் கெடு வழங்கப்பட்டிருந்தது.
35 வயதான சபன்டா கடந்த 2010 ஆம் ஆண்டு ரியாத் நீதிமன்றத்தில் கொலை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். பணப்பிரச்சினை தொடர்பான மோதலின்போதே சபன்டா சூடான் நாட்டவரை தாக்கிக் கொன்றுள்ளார்.
சவூதி அரேபியாவில் இந்த ஆண்டில் இதுவரை 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து ஓர் ஆண்டில் அதிகம் பேர் மரண தண்டனைக்கு உள்ளானதாக அமைந்தது.
100 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்ஸில் சுமார் 10 வீதத்தினர் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களாவர். இதில் சவூதியில் மாத்திரம் 2.2 மில்லியன் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் பணிபுரிகிறார்கள்.
Post a Comment