Header Ads



கல்லெறிந்து கொல்ல வேண்டியது இலங்கைப் பெண்ணையல்ல, இன்னும் 10 பேருக்கு மரணதண்டனை

சவுதியில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ள இலங்கைப் பெண் தவறை ஒப்புக்கொண்டார் என்பதற்காக நாம் அப்படியே விட்டுவிடமுடியாது எனத் தெரிவித்த ஜே.வி.பியின் எம்.பியான விஜித ஹேரத்,

கல்லெறிந்து கொலைசெய்ய வேண்டியது அந்தப் பெண்ணையல்ல. அவரை இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ள நாட்டின் பொருளாதாரக் கொள்கையைத்தான் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,

52 சதவீத பெண்கள் நாட்டில் இருக்கின்றனர். ஆனால், பெண்களைப் பாதுகாக்க இதுவரை ஆட்சியிலிருந்த அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆசையின் காரணமாக பெண்கள் வெளிநாடு செல்வதில்லை. பொருளாதார பாதிப்பே இதற்குப் பிரதான காரணமாகும்.

இன்று எமது நாட்டுப் பெண் ஒருவர் சவுதியில் கல்லெறிந்து கொலைசெய்யப்பட தீர்மானிக்கப்பட்டதற்கு காரணம் என்ன? கல்லெறிந்து கொலை செய்யப்படவுள்ள அந்தப் பெண் சட்டவிரோத தொடர்புவைத்திருந்தார் எனக் கூறப்படுகின்றது.

உண்மையில் கல்லெறிந்து கொலைசெய்யப்படவேண்டிவர் அந்தப் பெண்ணல்ல. அந்தப் பெண்ணை இவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளியுள்ள இந்தப் பொருளாதாரக் கொள்கையை. இந்தக் கொள்கையை மாற்ற அரசு எடுக்கும் தீர்வு என்ன?

ஏனெனில், இன்னும் 10 பேர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இதற்குத் தீர்வு காணாவிட்டால் இந்நிலை நீடித்துக்கொண்டே இருக்கும். அந்தப் பெண் தனது தவறை ஒப்புக்கொண்டார் என்பதற்காக நாம் அப்படியே விட்டுவிடமுடியாது.

2011இல் 99 ஆயிரம் பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றனர். 2013இல் இந்தத் தொகை ஒரு இலட்சத்து 58 ஆயிரமாக அதிகரித்தது.

2014, 2015இல் இந்தத் தொகை மேலும் அதிகரித்துள்ளது. பொருளாதாரப் பாதிப்பின் காரணமாகவே இவர்கள் வெளிநாடு செல்கின்றனர். இதைத் தடுக்க அரசிடம் என்ன நடவடிக்கை இருக்கிறது?

வரவு - செலவுத்திட்டத்தில் என்ன முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன? கடவுச்சீட்டுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. சர்வதேச தொலைபேசிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதைத்தான் அரசு செய்துள்ளது. இந்த நிலைமையை மாற்றவேண்டும்.

பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதைத் தடுக்க நாட்டில் பெண்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சரியான கொள்கை உருவாக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.