எகிப்தில் ரஷ்ய விமானம் விபத்து, துணை விமானியின் மனைவியின் பரபரப்பு தகவல் - நடந்தது என்ன..?
எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பத்தில் ரஷ்ய பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகி 224 பேர் பலியான சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் காரணமாக இருக்க முடியாது என ரஷ்ய போக்குவரத்து துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
எவ்வாறு விபத்து நிகழ்ந்தது?
எகிப்தில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் விமான நிலையத்திலிருந்து ரஷ்யாவிற்கு சொந்தமான Kolavia 7K9268 என்ற விமானம் நேற்று காலை 3.58 மணி நேரத்திற்கு புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் ரஷ்ய மற்றும் துருக்கி நாடுகளை சேர்ந்த 217 பயணிகள் மற்றும் 7 விமான குழுவினர் பயணம் செய்துள்ளனர்.
விமானம் புறப்பட்ட 23 நிமிடங்களுக்குள், அதாவது 4.14 மணி நேரத்தில் விமானம் ரேடார் திரையிலிருந்து காணாமல் போயுள்ளது.
இதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, ‘விமானத்தில் தொழில் நுட்ப குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், மிக அருகில் உள்ள ஏதாவது ஒரு விமான நிலையத்தில் உடனடியாக தரையிறங்க வேண்டிய நிர்பந்ததில் உள்ளதாக’ விமானிகள் அவசர தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், தகவல் அனுப்பிய சில நிமிடங்களில், அதாவது 4.17 மணியளவில் விமானம் தரையை நோக்கி வேகமாக விழுந்துள்ளது. விமான வழிப்பாதைகளை ஆய்வு செய்து வரும் நிறுவனம் ஒன்று கூறுகையில், பழுதான அந்த விமானம் தரையை நோக்கி வினாடிக்கு 1,500 மீற்றர்கள் வேகத்தில் வந்ததாக தெரிவித்துள்ளது.
விமானத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினார்களா?
விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகி 224 பேரும் உயிரிழந்ததை உறுதி செய்யப்பட்ட பிறகு, சினாய் பகுதியில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் ‘விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம். சிரியாவில் உள்ள தங்களது முகாம்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் புரிவதற்கு பதிலடியாக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக’ சமூக வலைத்தளத்தில் பரபரப்பு தகவல் வெளியிட்டனர்.
ஆனால், ரஷ்ய போக்குவரத்து துறை அமைச்சரான Maksim Sokolov இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அவர் பேசியபோது, நடுவானில் விமானம் சுமார் 9,450 மீற்றர் (31,000 அடிகள்) உயரத்தில் பறந்துக்கொண்டுள்ளபோது, அதனை தரையில் இருந்து ஏவுகணை மூலம் தாக்கும் சக்தி சினாய் பகுதியில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இல்லை.
மேலும், விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்தபோது, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என உறுதியாக கூறியுள்ளார்.
இந்நிலையில், எகிப்திய பிரதமர் விபத்து குறித்து பேசியபோது, ‘விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக தான் விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது’ என பதிலளித்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் செய்தியை நிராகரித்துள்ளார்.
துணை விமானியின் மனைவி கூறிய பரபரப்பு தகவல்
விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானியின் மனைவியான Natalya Trukhacheva என்பவர் விபத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பரபரப்பு தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
அப்போது, ‘விபத்துக்குள்ளான விமானத்தில் ஏற்கனவே சில தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாக கூறி தனது கணவர் வருத்தப்பட்டார்’ என கூறியுள்ளார். எனினும், இவர் கூறிய கருத்திற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இரண்டு கருப்பு பெட்டிகளும் கண்டுபிடிப்பு
விபத்து நிகழ்ந்த இடத்தில் விசாரணை குழுவினர் 2 கருப்பு பெட்டிகளையும் கண்டுபிடித்து ஆய்விற்காக அனுப்பியுள்ளனர். இந்த கருப்பு பெட்டிகளில் பதிவாகியுள்ள தகவல்கள் வெளியானால் மட்டுமே விமானத்தில் என்ன நிகழ்ந்தது என்பதற்கான சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும்.
இந்நிலையில், விமான விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் வரையில், அந்த வழிப்பாதையில் விமான சேவைகளை தடை செய்துள்ளதாக Emirates, Air France மற்றும் Lufthansa விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment