Header Ads



ஜனாதிபதிக்கான செலவினங்கள் குறைப்பு, பிரதமருக்கான செலவினங்கள் அதிகரிப்பு

2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல இதனை சமர்ப்பித்ததோடு 2016 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவீனமாக 1941 பில்லியன் 450 மில்லியன் 438 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறையும் பாதுகாப்பு அமைச்சிற்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, சுகாதார, கல்வி என்பவற்றுக்கு கடந்த வருடங்களைவிட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரத்து 665 கோடியே 78 இலட்சத்து 24 ஆயிரம் (30,665,78,24,000) ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கான கடன் எல்லை ஓராயிரத்து முந்நூற்றி நாற்பத்தொன்பது பில்லியன் நூற்றி இருபத்தி மூன்று மில்லியன் நாநூற்றி இருபது ஆயிரம் ரூபாவை விஞ்சாததாக இருக்க வேண்டும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2014 ஆம் மற்றும் 2015 ஆம் நிதியாண்டுகளுக்கான மொத்த அரச செலவினங்களை விடவும் 2016 ஆம் ஆண்டுக்கான அரச செலவினத்துக்கான தொகை அதிகரிக்கப் பட்டிருப்பதுடன் கடந்த ஆட்சியில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செலவினத்துக்கென ஒதுக்கப்பட்ட தொகைகளிலும் பார்க்க இம்முறை பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.

எனினும் கடந்த வருடங்களைவிட 2016 ஆம் ஆண்டில் ஜனாதிபதிக்கான செலவினம் குறைக்கப்பட்டுள்ள அதேநேரம், பிரதமர் அலுவலகத்துக்கான செலவின மதிப்பீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கான செலவீனங்களுக்காக 239 கோடியே 20 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ்வரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 2016 ஆம் நிதியாண்டுக்கான செலவினமாக 1,219 கோடியே 23 இலட்சத்து 50 ஆயிரம் (1,219,23,50,000) ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி அமைச்சுக்கு 107,833,235,500 ரூபாவும் சுகாதார அமைச்சுக்கு 174,077,998,000 ரூபாவும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு 946,92,05,000 ரூபாவும், போக்குவரத்து அமைச்சுக்கு 5,953,06,50,000 ரூபாவும், பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு 17,141,98,80,000 ரூபாவும், கமத்தொழில் அமைச்சுக்கு 5,420,12,12,000 ரூபாவும், உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு 3,263,80,00,000 ரூபாவும்.

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 545,44,80,000 ரூபாவும். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சுக்கு 282, 34,00,000 ரூபாவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சுக்கு 18,597,60,30,000 ரூபாவும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்கு 68,68,00,000 ரூபாவும், புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சுக்கு 378,01,30,000 ரூபாவும் கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சுக்கு 567,51,80,000 ரூபாவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

2014 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டத்தின் பிரகாரம் அரசின் மொத்த செலவினம் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 825 கோடியே 25 இலட்சத்து 18 ஆயிரம் (159,825,25,18,000) ரூபாவாக இருந்துள்ளதுடன் 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் பிரகாரம் அந்த ஆண்டுக்கான மொத்த அரச செலவினமாக ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 229 கோடியே 27 இலட்சத்து 18 ஆயிரம் (181,229,27,18,000) ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.