முஸ்லிம் பாடசாலைகளில், அரபு மொழியினை கற்பிக்க வேண்டும் - இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்
அரபு மொழியின் முக்கியத்துவம் கருதி முஸ்லிம் பாடசாலைகளில் அரபு மொழியினை கற்பிக்க கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் எம். அனஸ் தெரிவித்ததாவது,
உலகளாவிய ரீதியில் ஏறக்குறைய 160 கோடி முஸ்லிம்கள் வாழுகின்றனர். இவர்களில் 255 மில்லியன் மக்கள் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆசிய பசுபிக் மற்றும் தென் ஆபிரிக்க நாடுகளில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஏறக்குறைய 30 நாடுகளில் அரபு மொழி அரச கருமமொழியாகவுள்ளது. உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்படும் மொழிகளின் வரிசையில் 6வது இடத்தில் அரபு மொழியுள்ளது.
இவ்வாறு அரபு மொழி சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்ற நிலையில், இலங்கையில் முஸ்லிம்கள் அரபு மொழியின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளமால் இருப்பது கவலையளிக்கிறது.
இலங்கை முஸ்லிம்களின் பெரும்பாலானோரின் தாய்மொழி தமிழாக உள்ளபோதிலும், அரபு மொழி முஸ்லிம்களின் வேதநூலான புனித அல்குர்ஆன் இறக்கப்பட்ட மொழியாகும். இந்த அரபுமொழியைக் கற்பதில் அல்லது கற்பிப்பதில் ஆர்வமின்றி இருப்பது ஒரு துரதிஷ்டவசமான நிலையாகும்.
இலங்கையில் உள்ள ஏறக்குறைய 10,000 பாடசாலகளில் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகள் உள்ளடங்கலாக 800க்கு மேற்பட்ட பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகளாக உள்ளன. இருப்பினும் இப்பாடசாலைகளில் அரபு மொழி கற்பிக்கப்படாதுள்ளது.
பாடசாலைகளில், க.பொ.த சாதாரண வகுப்புக்களுக்கான பாடத் தொகுதியில் 3வது நிலைப் பாடத் தொகுதியில்; அரபு மொழி உள்ளது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் தெரிவுப் பாடமாக அரபு மொழி இருந்தும், மாணவர்கள் அரபு மொழியைக் கற்பதற்கு ஆர்வம் கொண்டுள்ளபோதிலும் இப்பாடத்தினை கற்பிப்பதற்கான முயற்சிகள் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிவில்லை.
குறைந்தபட்சம் அதிகளவிலான முஸ்லிம் பாடசாலைகள் உள்ள கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கூட அரபு மொழியினைக் கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அதிகாரிகள் முன்னெடுக்காமல் இருப்பது வருந்தத்தக்க விடயமாகும்.
1978ஆம் ஆண்டளவில் நடைமுறையில் இருந்த பாடசாலைக் கலைத்திட்டத்தில் ஆரம்ப வகுப்புக்களில் அரபு மொழி போதிக்கப்பட்டது. சிங்களம், தமிழ், ஆங்கிலம், ஆகிய மொழிகளுடன் அரபு மொழியும் கட்டாய பாடமாக இருந்தது. பின்னர் ஏற்படுத்தப்பட்ட பாடசாலைக் கலைத்திட்டத்தில் அரபு மொழியானது பின்னிலைக்குத்தள்ளப்பட்டது.
இவ்வாறு கலைத்திட்டத்தில் அரபு மொழி பின்தள்ளப்பட்டது தொடர்பில் எந்தவொரு அரசியல் வாதியும் அல்லது புத்திஜீவிகளும் அக்காலத்தில் கவனத்திற்கொள்ளாது செயற்பட்டதன் விளைவு அரபு மொழியானது கட்டாயப் பாடம் என்ற நிலையிலிருந்து தற்போது 3ஆம் தொகுதித் தெரிவுப் பாடம் என்ற நிலைக்குத் தள்ளப்படுள்ளது.
சமஸ்கிருதம், பாளி மொழிகளுக்கான அந்தந்துக்கள் பேணப்பட்டு வருகின்ற நிலையில் அரபு மொழிக்கான அந்தஸ்து குறைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அரபுமொழி பாடமானது பாடசாலைக் கலைத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அவர் தெரிவித்தார்.
இலங்கையர்களில் அதிகளவிலானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர். இவர்களில் 99 வீதமானோர் அரபு மொழி தெரியாதவர்களாகவே செல்வதனால் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். அத்துடன்; உரிய பதவிகளையும் அந்நாடுகளில் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
பாடசாலைகளில் அரபு மொழி கற்பிக்கப்படாமையும் கற்றுக்கொள்ளாமையும் இவர்களில் இந்நிலைக்கு பிரதான காரணம் என்றும் கூறலாம்.
அத்தோடு, இப்பாடத்தினை பாடசாலைகளில் போதிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு உரிய அதிகாரிகள் சிரத்தைகொள்ளாதுள்ளமையும் அரபு மொழியின் தற்போதைய நிலைக்குக் காரணமாகவுள்ளது.
மொழியறிவு மாணவர்களின் ஆளுமையின் மிகப் பெரிய வகிபங்கை வகிக்கிறது. அந்தவகையில், அரபு மொழியின் முக்கியத்துவம் கருதி, அரபு மொழியினை சகல பாடசாலைகளிலும் கற்பிக்க முடியாத விடத்து, முஸ்லிம் பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புக்களிலிருந்து கட்டாயப் பாடமாக போதிப்பதற்கு மத்திய கல்வி அமைச்சும், மாகாணக் கல்வி அமைச்சுக்களும் மற்றும் கல்வித் திணைக்களங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இவற்றிற்கு கல்வி அதிகாரிகள் தங்களது ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டுமெனவும் கோருவதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம். அனஸ் மேலும் தெரிவித்தார்.
Post a Comment