"இலங்கையில் இனச்சுத்திகரிப்புக்குள்ளான ஒரு இனம்மென்றால், அது வடக்கு முஸ்லிம்கள்தான்"
(றிப்கான் கே. சமான்)
வடபுல முஸ்லிம்களின் இழப்பீடுகள் மீள்குடியேற்றத்தில் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பில் அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடமும் உள்ள தகவல்கள் யாவற்றையும் ஒன்றுபடுத்தி ஆராயக்கூடிய வகையில் விஸேட ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்துஅதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டத்தில் கொள்கை வகுத்து செயற்படுவது மாத்திரமே வடபுல முஸ்லிம்களின் நிறைவான மீள்குடியேற்றத்திற்கு வழிவகுக்கும் என முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரம் வடபுல முஸ்லிம்களின் வரலாற்றில் இருள் சூழ்ந்ததும் வாழ்நாளில் மறக்க முடியாததுமான ஒரு கால கட்டமாகும்.
ஒக்டோபர் 1990 எனது மாணவப் பருவம், பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மக்களை பள்ளிவாசலுக்கு அழைக்கிறார்கள். வீட்டில் இருக்கும் வாகனங்களை எடுத்துக் கொண்டு வீட்டிலுள்ள அத்தனை பேரும் அரைமணித்தியாள அவகாசத்தில் பள்ளிவாசலில் கூடுமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது.
அங்கு சென்று பார்க்கும் போது அந்தந்த முஸ்லிம் கிராமப் பள்ளிவாசல்கள் மக்களால் வழிந்து நிரம்பிக்காணப்பட்டது. எமக்கு 24மணித்தியாள கால அவகாசம் வழங்கப்பட்டது. 24மணித்தியாளத்துக்குள் உடனடியாக வடபுலத்தை விட்டு வெளியேற வேண்டும். இது எமக்குப் போட்ட கட்டளை. தவரும் பட்சத்தில் உங்கள் உயிருக்கு எங்களால் உத்தரவாதம் தர முடியாது. ஆனால் நிபந்தனை, உங்களிடம் இருக்கும் வாகனம், பணம், பொருள் அத்தனையும் வடபுலத்துக்குச் சொந்தமானவை, எனவே அதனை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்றனர்.
உயிர் தப்பினால் போதும் என்று சிலர் கால் நடையாக புத்தளம் இலவன்குளம் மன்னார் பாதை ஊடாகச் சென்றனர். இப்பாதையால் செல்லும் போது கரடிக்குழியைச் சேர்ந்த ஒரு குடும்பம் மிதிவெடியில் சிக்குண்டு கணவன் - மனைவி இருவரும் சிதறுண்டனர். இன்னும் பலர் இதில் காயப்பட்டனர். திரும்பிச் சென்றால் விடுதலைப்புலிகள் கொலை செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் எஞ்சியவர்களும் புத்தளம் நோக்கி வந்தார்கள். மேலும் சிலர் கடல் வழியாக கல்பிட்டிக்குச் சென்றனர் இந்த காலத்தில் பலத்த காற்றும் மலையும் பெய்ததால் கடலில் சிறுகுழந்தைகள் தவரி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சந்தர்ப்பமும் உண்டு.
இந்நிலையில் அப்போது, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தது, ஊர் பெரியார்கள் இரானுவத்தினரின் உதவியைக் கேட்டார்கள் இரானுவம் மக்களைப் பாதுகாப்பதையோ அல்லது வெளியேற்றதைத்தைத் தடுப்பதிலோ எந்த அக்கரையும் காட்டவில்லை என்பது வடபுல முஸ்லிம்களின் கசப்பான உண்மையாகும்.
மேலும் கடல் வழியாக தரைவழியாக செல்பவர்கள் விடுதலைப்புலி உறுப்பினர்களால் சோதனைக்கு உற்படுத்தப்பட்டே அனுப்பப்பட்டார்கள். 500ரூபாய்ப் பணம் மற்றும் பயணப்பை, இது தவிர மேலதிகப்பணம், தங்க ஆபரணங்கள் பலவந்தமாக சோதனைச் சாவடியில் பறிக்கப்பட்டன. கல்பிட்டிநோக்கி வள்ளத்தில் ஏறியவர்களிடம் உங்கள் கால்களில் உள்ள மண்ணைத் தட்டிவிட்டு ஏறுங்கள் இது தமிழ் ஈழத்துக்குச் சொந்தமான மண் என்று கூட கடமையில் இருந்த புலி உறுப்பினர்கள் சொன்னது இன்றும் வடபுல முஸ்லிம்களின் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்திலும் ஏனைய இடங்களிலும் சுமார் 160இற்கும் அதிகமான அகதி முகாம்களிலும் நண்பர்களின் வீடுகளிலும் தங்களது வாழ்நாளை மிகவும் கஸ்டம், துன்பத்துக்கு மத்தியில் 25 வருடங்களாகக் கழித்து வந்தனர். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அப்போதைய அரசாங்கம் அக்கரை காட்டவில்லை. அதன் பின்னர் புத்தளத்தில் உள்ள உள்@ர் அரசியல் வாதிகள் சிலரின் அழுத்தம் காரணமாக அப்போதைய ஜனாதிபதி கட்டாயமாக வடபுல முஸ்லிம்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அதுவரை அரசாங்கத்தாள் வழங்கப்பட்ட உலர் உணவுக்கான உதவிகளும் நிறுத்தப்பட்டன.
ஆனால் சொந்த மண்ணுக்கு மீள்குடியேற வேண்டும் என்ற ஆவலுடனும், அக்கரையுடனும் தங்களின் சொந்த இடங்களுக்கு முஸ்லிம்கள் திரும்பினார்கள். அங்குள்ள பிரதேச செயலகங்களில் தாங்கள் மீள்குடியேற விருப்பம் தெரிவிப்பதையும் தெரிவித்தனர். ஆனால் அங்கோ பல சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய துர்ப்பாக்கிய நிலை இவர்களுக்கக் காத்துக் கொண்டிருந்தது.
வடபுலத்திலுள்ள அரச இயக்கங்கள் (பெரும்பாலானோர்) முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு மறைமுகமாக எதிராகச் செயற்பட்டனர். மேலும் சிலரது காணிகள் சிலகிராமங்கள் முற்றுமுழுதாக படையினர் ஆக்கிரமித்துள்ளனர். இன்னும் சிலரது கணிகள் விடுலைப்புலிகளின் காலத்தில் மாவீரர் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. எஞ்சியிருக்கும் சிலரது காணிகள்கூட வாழ முடியாத அளவு காடுகளாகக் காணப்பட்டன. இன்னும் சில கிராமங்கள் வன திணைக்களத்தினால் 2012ம் ஆண்டு காடுகள் என பிரகடணப் படுத்தப் பட்டிருந்தன. மேலும் விலங்குப் பிரதேசம், யானைகள் செல்லும் பாதை என்று முஸ்லிம்கள் வெளியேற்றப்படும் போது அவர்களால் பயன்படுத்தப் பட்ட நிலங்களை அரச படைகள் வன திணைக்களம் வன விலங்குத் திணைக்களம் சுவீகரித்து இருந்தனர்.
இந்நிலையில் 20, 25 வருடங்களுக்குப்பின் மூன்று, நான்காக அதிகரித்த சனத்தொகையாகும். மீளக்குடியேறச் சென்ற மக்களுக்கு காணிப்பிரச்சினை பெரிய சவாலாக மாறியது. சன்னார், மறிச்சுக்கட்டி, முறிப்பு, முல்லைத்தீவு போன்ற இடங்களில் காணியற்ற முஸ்லிம்களுக்கு முiறைப்படி காணி வழங்கிய போது உள்ளுர் அரசியல் வாதிகள், ஏனைய அரசியல் இலாபம் தேடும் சிலர் அதற்கு முட்டுக்கட்டையாக செயற்பட்டனர். இதே போன்று உதவி வழங்கும் தனியார், வெளிநாட்டு நிறுவனங்கள் கூட உதவிகள் வழங்குவதில் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டத் தொடங்கினர். இதனால் விரக்தியடைந்த பல முஸ்லிம் குடும்பங்கள் வடபுலத்தை விட்டு மீண்டும் புத்தளத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.
முஸ்லிம்கள் உண்மையில் இனத்துக்காகத்தான் வெளியேற்றப்பட்டார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உள்நாட்டுக்குள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு இனம் என்றால் அது வடபுல முஸ்லிம்கள் தான். மேலும் இவர்கள் பரம்பரை பரம்பரையாக தேடிய சொத்துக்கள், தோட்டங்கள் என்பன விடுதலைப்புலிகளால் பறிக்கப்பட்டு வாழ்விட உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது. இந்நிகழ்வு இடம் பெற்று 25 ஆண்டுகளாகியும் இதற்கான எல்.எல்.ஆர்.சி போன்றவற்றின் அறிக்கையில் உள்ள சிபாரிசு கூட அரசாங்கத்தால் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இன்று நல்லாட்சியைப் பற்றி நாடும், சர்வதேசமும் பேசிக் கொண்டிருக்கும் போது, வடபுல மஸ்லிம்களின் விடயத்தில் வடமாகாண சபை, இந்த அரசாங்கம் மற்றும் எதிர்கட்சியினர் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். வெறும் கலந்துரையாடல்கள், அறிக்கைகள், மேடைப் பேச்சுக்கள் காத்திரமான தீர்வை வடபுல முஸ்லிம்களுக்குப் பெற்றுத்தராது.
எனவே ஜனாதிபதி விஸேட ஆணைக்குழு ஒன்றை அமைத்து முஸ்லிம்களின் இழப்பீடுகள் மீள்குடியேற்றத்தில் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பில் அரசியல் தலைமைகளிடமும், சிவில் அமைப்புகளிடமும், கல்வியாளர்களிடமும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடமும் உள்ள தகவல்கள் யாவற்றையும் ஒன்றுபடுத்தி ஆராய்ந்து அதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டத்தில் கொள்கை வகுத்து செயற்படுவது மாத்திரமே வடபுல முஸ்லிம்களின் நிறைவான மீள்குடியேற்றத்திற்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் வழிகோலும் என்றும் அவரது அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
Post a Comment