அப்பாவிகளின் உயிரை பறிக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள் இல்லை - சுவிஸ் இமாம்
அப்பாவி மக்களின் உயிரை பறிக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் உண்மையான இஸ்லாமியர்கள் இல்லை என்றும், பாரீஸ் தாக்குதலுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என சுவிஸ் மதகுரு ஒருவர் அதிரடியாக பேசியுள்ளார்.
சுவிஸின் பெர்ன் மாகாணத்தில் உள்ள Muslim Association of Bern அமைப்பின் தலைவரான Mustafa Memeti (53) என்பவர் தான் இந்த அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.
மதகுருவின் தலைமையில் நேற்று தொழுகை முடிவுபெற்ற நிலையில், பாரீஸ் தீவிரவாத தாக்குதல் குறித்து அவரிடம் சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது பேசிய மதகுரு, பாரீஸில் நிகழ்ந்துள்ள தீவிரவாத தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த நிலையில் நாம் அனைவரும் பிரான்ஸ் நாட்டிற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.
பாரீஸில் நிகழ்ந்துள்ள இந்த தாக்குதலுக்கும் இஸ்லாமிய மத கொள்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என உறுதிபட கூறுவதாக அவர் பேசியுள்ளார்.
ஆனால், ‘தீவிரவாத தாக்குதலை நிகழ்த்தியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாம் மதத்தின் பெயரிலேயே தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறியுள்ளனரே’ என அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த மதகுரு, ”அப்பாவி உயிர்களை பறித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் உண்மையான இஸ்லாமியர்கள் அல்ல. அவர்கள் மிகவும் கொடூரமானவர்கள்.
மக்களை கொல்ல வேண்டும் என எந்த மதமும் போதிக்கவில்லை. சுவிஸ் நாட்டிற்கு வரும் இஸ்லாமியர்களை கூட தீவிரவாத கொள்கைகளுடன் உருவகப்படுத்துவதும் தவறானது.
இஸ்லாமியர்கள் என்றாலே கொடூரமானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது முற்றிலும் தவறானது. உண்மையில், இஸ்லாமியர்கள் அனைவரும் அனைத்து விதமான தீவிரவாதத்திற்கு எதிராக போராட முன்வர வேண்டும் என Mustafa Memeti கருத்து தெரிவித்துள்ளார்.
Post a Comment