தலைக்கு ஆதரவு கொடுங்கள்!
கவுண்டமணியிடம் செந்தில் கேட்பது போல, ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம்… ‘தலையணை வைப்பது சுகமான தூக்கத்துக்கு மட்டும்தானா? அதைத் தாண்டி வேறு ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா?’இயன்முறை சிகிச்சையாளர் ப்ரீத்தா மற்றும் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் குமார் ஆகியோரிடம் கேட்டோம்.
‘‘தலையணை வைப்பது நம்முடைய பழக்கம் மட்டுமே என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், நம் உடல்நலத்தைத் தீர்மானிப்பதில் தலையணைக்கு முக்கியப் பங்கு உண்டு. தூங்கும்போது, நம்மை அறியாமலேயே கைகளைத் தலைக்கு ஆதரவாக மடக்கி வைத்துக் கொள்வோம். அந்த அளவுக்கு நம்முடைய உடலே தலைக்கு ஓர் ஆதரவு வேண்டும் என்று கேட்கிறது. தூக்கத்தில் நம் தலைக்கு ஆதரவாக இருப்பதால்தான் அதை ‘தலை அணை’ என்கிறோம்.
நாம் விழித்திருக்கும் நேரங்களில் தலையின் நிலையை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். தூங்கும்போதோ தலை நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. பேருந்துகளிலோ, ரயில்களிலோ உட்கார்ந்து கொண்டே தூங்குகிறவர்கள், பக்கத்தில் உள்ளவர்கள் மீது சாய்வதைப் பார்க்க முடியும். திடீரென கீழே முட்டிக் கொள்வதையும் பார்க்கிறோம். இதற்குக் காரணம், தலைக்குச் சரியான ஆதரவு இல்லாததுதான். சிலர் தலையணை வைத்தால் கழுத்துவலி வரும் என்றும் தவறாக நினைக்கிறார்கள். சில மருத்துவர்களிடமும் இந்த தவறான கருத்து இருக்கிறது.
உண்மையில், தலையணை வைக்காவிட்டால்தான் கழுத்து வலி வரும், தூக்கம் கெட்டுப் போகும்... இன்னும் பல விதமான பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. தலையின் எடை ஒருவரின் உடலின் எடையில் 8 சதவிகிதம். இந்த எடையை சரியான நிலையில் வைத்துக் கொள்ளாவிட்டால் தசைகள், நரம்பு, ரத்த ஓட்டம், மூச்சுத்திணறல் என பல பாதிப்புகள் ஏற்படலாம். காலையில் எழுந்தவுடன் தலை வலிப்பது, மயக்கம் வருவதுபோல இருப்பது, வாந்தி, கைகளில் வருகிற வலி உணர்வு ஏற்படுவது இதனால்தான். கைகளில் அழுத்தம் அதிகமாவதால் நரம்புத்தளர்ச்சியும் சீக்கிரம் வருகிறது.
கழுத்தில் இருந்து வருகிற செர்விக்கோ வகை தலைவலிகளில் 90 சதவிகிதத்துக்கு தலையணையை சரியாகப் பயன்படுத்தாததே காரணம் என்று International headache society கூறியிருக்கிறது. நாமோ, இதை அறியாமல் தலைவலிக்கு வலி நிவாரணி மாத்திரைகளைத் தேடி ஓடுவோம். மருத்துவப் பரிசோதனைகள் செய்து பார்த்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும். பிரச்னைக்கான காரணம் தெரியாது. தலையணை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றே நாம் நினைத்திருக்க மாட்டோம்.
வெளிநாடுகளில் தலையணையைப் பற்றிய நிறைய விழிப்புணர்வு இருக்கிறது.
குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் தலையணையைப் பற்றிய நிறைய ஆய்வுகள் நடந்து வருகிறது.விற்பனையாகும் தலையணைகளே மருத்துவரீதியாகத்தான் தயாராகின்றன’’ என்கிறார் ப்ரீத்தா.தலையணையை சரியாக வைக்காவிட்டால் என்னென்ன பாதிப்புகள் வரும்? எலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் குமார் விளக்குகிறார். ‘‘உட்கார்வதற்கும் நிற்பதற்கும் சரியான நிலைகள் (Posture) இருக்கின்றன. தூங்குவதற்கும் ஒரு சரியான Posture இருக்கிறது. குறிப்பாக, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடலின் ஃப்ளெக்ஸிபிலிட்டி குறையும் என்பதால் தலையணை விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
பொதுவாக, நாம் தலையணை பற்றி பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. கழுத்து வலி, தலைவலி வந்தால்தான் தலையணை பற்றி யோசிக்கிறோம். சரியான தூக்கம் இல்லாததற்கும் தலையணை காரணியாக இருக்கிறது. தலையணை சரியாக வைக்காததால், விரும்பத்தகாத அளவு முதுகுத்தண்டுவடம் வளைகிறது. சரியான தலையணை வைக்கும்போது தண்டுவடத்தின் நிலை மாறாமல் நேராக இருக்கும். இந்தத் தவறான தலையணை அமைப்பால்தான் தலை சுற்றல், கழுத்துவலி, தலைவலி போன்றவை வருகிறது.
கழுத்தில் தேய்மானமும் சீக்கிரம் வரும். குறிப்பாக, உடலின் நரம்பு மண்டலங்களின் கட்டுப்பாடு தலையில்தான் இருக்கிறது. மூளையில் இருக்கும் ரத்தநாளங்களும் பாதிக்கப்படும். இதனால் பலருக்கு அறுவை சிகிச்சை வரைகூட செல்ல வேண்டியிருக்கலாம்.தலையணை மிகவும் மென்மையாக இருக்கக் கூடாது என்பதைப் போலவே கடினமாகவும் இருக்கக் கூடாது. முதுகுவலி வருவதற்கு தலையணையைவிட நாம் படுக்கும் மெத்தையும் முக்கிய காரணம். அதனால், மெத்தையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்!’’ என்கிறார் டாக்டர் குமார்.
சரியான தலையணையை தேர்ந்தெடுப்பது எப்படி?
இலவம்பஞ்சு தலையணையைப் பயன் படுத்துவதே நல்லது. தலையணையை வருடம் ஒருமுறையாவது மாற்ற வேண்டும். குறைந்தபட்சம், தலையணையின் இலவம்பஞ்சையாவது மாற்ற வேண்டும். காற்றால் அடைக்கும் பலூன் போன்ற தலையணைகளை சிலர் பயன்படுத்துகிறார்கள். இந்த காற்றடைத்த தலையணைகள் பார்ப்பதற்குத்தான் உயரமாக இருக்கும்... தலை வைத்ததும் அமுங்கி, கீழே தரையைத் தலை தொடும். இந்த குஷன் வகை தலையணைகளைப் பயன்படுத்தக் கூடாது. அதற்குத் தலையணை வைக்காமலேயே தூங்கிவிடலாம்.
தலையணை மென்மையாக இருக்க வேண்டியது முக்கியம்தான். ஆனால், கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையே இருக்கும் அளவு, உயரம் குறையாத தலையணையாக இருக்க வேண்டும். இந்த அளவு குறைவதால்தான் அந்த இடைவெளியை நிரப்புவதற்காக, கைகள் தானாகவே தலைக்குச் செல்கின்றன. கழுத்துக்கும் தோள்பட்டை முடியும் இடத்துக்கும் உள்ள அளவில்தான் தலையணையின் உயரம் இருக்க வேண்டும். அதாவது, கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் 12 செ.மீ. நீளம் என்றால், நாம் தேர்ந்தெடுக்கும் தலையணையின் உயரமும் அதே 12 செ.மீ. உயரத்துடன்தான் இருக்க வேண்டும்.
கழுத்து வலிக்கு ஸ்பெஷல் பில்லோ!
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கிருஷ்ணகுமார் மாறுபட்ட கருத்து ஒன்றைக் கூறுகிறார். ‘‘தலையணை வைத்துத் தூங்குவதற்கும் இல்லாமல் தூங்குவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதிலும் மல்லாந்த நிலையில் தூங்கும்போது தலையணை இல்லாமல் இருப்பது நல்லதுதான். ஒருபக்கமாகத் திரும்பிப் படுக்கும்போதுதான் தலையணை இல்லாவிட்டால் கழுத்துக்கு அழுத்தம் ஏற்பட்டு வலி வரும். காரணம், உடலுக்கு நேர்க்கோட்டிலேயே தலை இருக்க வேண்டும். ஒருபக்கமாகத் திரும்பிக் கொள்ளும்போது ஒருபக்கமாக சாய்ந்து
கழுத்தில் அழுத்தம் ஏற்பட்டு வலி வரும். கழுத்து வலி வருகிறவர்களுக்கு செர்விக்கல் டிஸ்க்கின் செயல்திறன் குறைந்திருக்கும்
என்பதால் தலையணையை தவிர்க்க சொல்வோம். இல்லாவிட்டால் டிஸ்க்கில் ஏற்படுகிற உராய்வு காரணமாக மேலும் கழுத்து வலி அதிகமாகும். தலையணையை தவிர்க்க முடியாத பட்சத்தில் செர்விக்கல் வகை தலையணைகளை(Cervical pillow) பயன்படுத்திக் கொள்ளலாம். இது முன்னணி மெத்தை விற்பனைக் கடைகளில் கிடைக்கிறது!’’
Post a Comment