மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு, கட்டியம் கூறும் பாரிஸ் பயங்கரம்...!
-kalaiy-
மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறும் பாரிஸ் பயங்கரம். பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 - 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்து.
உதைபந்தாட்ட மைதானத்தில் கிரனேட் வீசப் பட்டது. கம்போடிய ரெஸ்டாரன்ட் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பலர் பலியானார்கள். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கு ஒன்றில் இருந்த பார்வையாளர்கள் தான் பெருமளவில் பலியாகி உள்ளனர்.
இசை நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழைந்த ஆயுதபாணிகளை, நேரில் கண்ட சாட்சிகள் பல உள்ளன. முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டு, கருப்பு உடையணிந்து, AK-47 தானியங்கி துப்பாக்கிகளால் பதற்றப் படாமல், ஆறுதலாக சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். இடையிடையே மூன்று, நான்கு தடவைகள் ரவைக் கூடுகளை மாற்றினார்கள். நிலத்தில் படுத்திருந்த பார்வையாளர்களை, குருவி சுடுவது போன்று சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடந்த நேரத்தில், ஆயுதபாணிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை!
அதிகாலை வரையில், பிரெஞ்சு ஊடகங்கள், தாக்குதல் நடத்தியவர்களை பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை. இனந்தெரியாத ஆயுதபாணிகள் என்றே பிற ஐரோப்பிய ஊடகங்களும் தெரிவித்தன. இதற்கிடையே, ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள் சிலர், வழமை போல தமது இஸ்லாமிய விரோத பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.
வழமை போலவே, சில தமிழ் வலதுசாரிகளும் ஐரோப்பிய நிறவெறியர்களின் பிரச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டனர். அடுப்பு சட்டியைப் பார்த்து கருப்பென்று சொன்ன கதை இது. ஐரோப்பிய நிறவெறியர்கள் (தீவிர வலதுசாரிகள்), இஸ்லாமியருக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டு மொத்த அகதிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில், அகதி முகாம்களுக்கு பலத்த பொலிஸ் காவல் போடப் பட்டுள்ளது.
பாரிஸ் தாக்குதலுக்கு முன்தினம், லெபனான், பெய்ரூட் நகரில் ISIS நடத்திய குண்டுத்தாக்குதலில், நாற்பது இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர். கடந்த ஐந்து வருடங்களாக நடக்கும் சிரியப் போரில், ISIS பயங்கரவாதிகளால் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.
பாரிஸ் தாக்குதல் நடந்து பல மணி நேரமாகியும், யாரும் உரிமை கோரவில்லை. சமூக வலைத்தளத்தில் ISIS உரிமை கோரியிருப்பதாக, காலையில் யாரோ அறிவித்தார்கள். அதற்குப் பின்னர், சில நிமிடங்கள் கூடத் தாமதிக்காமல், பிரெஞ்சு அதிபர் ஹோலந்த் "இது ஒரு போர்ப் பிரகடனம்" என்று அறிவித்தார். ISIS கூட, "பாரிஸ் தாக்குதலானது பிரான்ஸ் மீதான போர்" என்று தான் அறிவித்திருந்தது. அதாவது, இரண்டு தரப்பினரும், வரிந்து கட்டிக் கொண்டு போரில் குதிக்கப் போகிறார்கள்.
சமீப காலமாக, ரஷ்யா தான் தனது பிரதான எதிரி என்று ISIS அறிவித்திருந்தது. எகிப்து, சினாய் பகுதியில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதற்கும், தாமே சுட்டு வீழ்த்தியதாக ISIS உரிமை கோரியது. அப்போது "விமானத்தில் குண்டு வைக்கப் பட்டிருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக...." பயமுறுத்திய மேற்குலக அரசுகள், தமது சுற்றுலா பயணிகள் எகிப்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தின.
"ரஷ்ய விமானத்தில் குண்டு இருந்தது தெரியும்" என்று அறிவித்துக் கொண்டிருந்த, அமெரிக்காவும், பிரிட்டனும், ISIS நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கவில்லை! இருநூறுக்கும் அதிகமான பயணிகள் பலியான போதிலும், எந்த நாடும் போர்ப் பிரகடனம் செய்யவில்லை. (ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை பிரான்ஸ், அமெரிக்கா ஆதரிக்கவுமில்லை.)
இப்போது எதற்காக ஒரு புதிய போர்?
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ISIS தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கிறது. வாரக் கணக்காக நடந்து கொண்டிருக்கும் ரஷ்ய விமானக் குண்டுத் தாக்குதல்களால், ISIS நிலைகுலைந்து போயுள்ளது. ISIS நிர்வகிக்கும் நடைமுறை (de facto) "இஸ்லாமிய தேசத்தின்" மேற்குப் பகுதிகளை சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.
பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு முன்தினம் தான், ஈராக்கில் உள்ள சிஞ்சார் மலைப் பிரதேசத்தை கைப்பற்றியுள்ளதாக, ஈராக்- குர்திஸ்தான் படையணிகள் அறிவித்தன. சிரியா - ஈராக் எல்லையோரம் அமைந்துள்ள சிஞ்சார் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. குர்திய படைகள் அதைக் கைப்பற்றியதன் மூலம், ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் நடுவில் ஊடுருவி உள்ளது. மேலும், அடுத்ததாக எண்ணை வளம் நிறைந்த மொசுல் நகரை கைப்பற்றப் போவதாக, குர்திய படைகள் அறிவித்தன.
முன்னர் எப்போதும் இல்லாதவாறு, ISIS பலவீனமடைந்துள்ள நிலையில், இப்போது எதற்காக ஒரு புதிய போர்?
ISIS தனது பிரதான எதிரிகளான ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளை விட்டு விட்டு, எதற்காக பிரான்ஸ் மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்? அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற மேற்குலக நாடுகளால் உருவாக்கப் பட்ட இயக்கம் தான் ISIS. இதற்கான ஆதாரங்களை ஏற்கனவே பலர் எடுத்துக் காட்டி விட்டார்கள். விக்கிலீக்ஸ் கூட அது சம்பந்தமான இரகசிய ஆவணங்களை பிரசுரித்திருந்தது. மேற்குலகம் ISIS என்ற பூதத்தை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினார்களோ, அது நிறைவேறாமல் போய் விடும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.
"அரேபியர்களுக்கு உலகில் பத்துக்கும் குறையாத நாடுகள் உள்ளன... தமிழனுக்கு என்றொரு நாடில்லை...!" என்று வலதுசாரி- தமிழ்த் தேசியவாதிகள் அடிக்கடி சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு வரலாறு பற்றிய எந்த அறிவும் கிடையாது. உண்மையில், மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் யாவும், ஐரோப்பிய காலனிய எஜமானர்களின் படைப்புகள் ஆகும். பிரிட்டிஷ் காலனி ஈராக் என்றும், பிரெஞ்சுக் காலனி சிரியா (மற்றும் லெபனான்) என்றும் பிரிந்தன. அதை நினைவுபடுத்தும் வகையில் தான் ISIS தனது இயக்கத்திற்கு பெயரிட்டுக் கொண்டது.
தற்போது, சிரியாவையும், ஈராக்கையும், மீண்டும் பிரிப்பதற்கான திட்டம் மேற்குலக கொள்கை வகுப்பாளரிடம் உள்ளது. காலனிய கால பிரித்தாளும் தந்திரம் மீண்டும் அரங்கேறுகின்றது. ISIS தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரதேசம் "இஸ்லாமிய தேசம்" என்று அழைக்கப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலர் அறியாத ஓர் உண்மை இருக்கிறது.
சிரியாவின் மேற்குப் பகுதியும், தெற்குப் பகுதியும் ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கே ஷியா அல்லது அலாவி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுடன் கிறிஸ்தவ சிறுபான்மையினரும் ஆசாத் அரசை ஆதரிக்கின்றனர். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினரின் பிரதேசம் உள்ளது. அதனை PKK-YPG போன்ற குர்திய இயக்கங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
மத்தியில் உள்ள "இஸ்லாமிய தேசம்", சுன்னி - முஸ்லிம் சமூகத்தினரின் தாயகமாக உள்ளது. அதாவது, இஸ்லாமிய தேசத்தினுள் சுன்னி முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும். கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, ஷியா, அலாவி முஸ்லிம்களை கூட, ISIS இனச் சுத்திகரிப்பு செய்து விரட்டி விட்டது. ஈராக்கிலும் அதே கதை தான். வடக்கில் குர்து மொழி பேசும் சிறுபான்மையினர். தெற்கில் ஷியா முஸ்லிம்கள். மத்தியில் சுன்னி முஸ்லிம்கள்.
பாரிஸ் நகரில் நடந்த தாக்குதலின் மூலம், ISIS தனது மேற்குலக எஜமானர்களுக்கு பேருதவி புரிந்துள்ளது. பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு, சில தினங்களுக்கு முன்னர், CIA தலைமை நிர்வாகி John Brennan பாரிஸ் வந்திருந்தார். அவர் தன்னைப் போன்று, பிரெஞ்சு புலனாய்வுத் துறையான DGSE தலைமையில் உள்ள Bernard Bajolet உடன் சந்தித்துப் பேசி உள்ளார். மொசாட் பிரதிநிதி ஒருவரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது. (இந்தத் தகவல் பெல்ஜியத்தில் இயங்கும் பிரெஞ்சு மொழி இணையத் தளமான RTL info, 28 அக்டோபர் 2015 அன்று பிரசுரித்தது. (http://www.rtl.be/info/monde/international/-le-moyen-orient-d-avant-ne-reviendra-pas--766109.aspx#)
"சிரியாவின் வரைபடம் இனி ஒருபோதும் முன்னரைப் போல இருக்கப் போவதில்லை..." என்று, புலனாய்வுத் துறை தலைவர்களின் உயர்மட்ட சந்திப்பின் போது Bernard Bajolet கூறினார். "தற்போது சிரியாவின் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே ஆசாத் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. வடக்கில் குர்தியர்கள் ஆட்சி செய்கிறார்கள். நாங்கள் சிரியாவின் மத்திய பகுதியை கைப்பற்ற வேண்டும்." என்று தெரிவித்தார்.
அனேகமாக, பிரான்ஸ் நடத்தப் போகும் புதிய போரானது, "இஸ்லாமிய தேசத்தை" தனி நாடாக்கும் போராக இருக்கலாம். அதற்கு இஸ்லாமிய தேசம் என்ற பெயர் இருக்க வேண்டுமென்றோ, அல்லது அதை ISIS தான் ஆள வேண்டும் என்றோ, எந்தக் கட்டாயமும் இல்லை. மேற்கத்திய வல்லரசுகள் புதிதாக உருவாக்கப் போகும், "ஜனநாயக ISIS கட்சி" அந்தப் பிரதேசத்தை நிர்வகிக்கலாம். எது எப்படி இருப்பினும், மத்திய கிழக்கின் வரைபடம் மாற்றியமைக்கப் படவுள்ளது என்பது மட்டும் நிச்சயம்.
இவை எல்லாவற்றையும் விட டிசம்பர் இரண்டாம் திகதி பலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதற்கு பிரான்ஸ் பாராளுமன்றம் வாக்களிக்க இருக்கிறது. அதற்கான ஆப்பாக இது இருக்குமோ என்பதனையும் சிறிது சிந்திக்க வேண்டியுள்ளது.
ReplyDelete