Header Ads



''பிரான்ஸ் மிகப் பெரிய ஆபத்தில் இருக்கிறது, காப்பாற்ற வெறும் அதிருஷ்டம் போதாது''

இயந்திரத் துப்பாக்கி ஏந்திய இரக்கமற்ற பயங்கரவாதிகளும், மரணத்துக்கு அஞ்சாத மனித வெடிகுண்டுகளும் பிரான்ஸின் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்களைக் கொன்று குவிக்கிறார்கள்...

இந்தக் காட்சிதான் கடந்த பல மாதங்களாகவே பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளின் சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது.

அதிகாரிகளின் அந்தப் பயம், தற்போது நிஜம் ஆகிவிட்டது.

அவர்கள் பயந்ததைப் போலவே, அத்தகையை கொடூரமான தாக்குதலை பயங்கரவாதிகள் பாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு அரங்கேற்றியிருக்கிறார்கள்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் பாணியில் பிரான்ஸிலும் தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்பதை என்பதை அந்த நாட்டு உளவு அமைப்புகள் முன்கூட்டியே கணித்து விட்டன.

எனினும், அத்தகைய தாக்குதலைத் தடுப்பது எவ்வாறு என்பதுதான் பாதுகாப்பு அமைப்புகளின் முன்னிருக்கும் மிகப் பெரிய சவால் என்கிறார்கள் பாதுகாப்பு நிபுணர்கள்.

பிரான்ஸ் உளவு அமைப்பான டி.ஜி.எஸ்.ஈ-யின் முன்னாள் அதிகாரி வெஸ் டிராடிக்னன் கூறுகையில், ""உயிரை விடுவதற்குத் தயாராக உள்ள, தாக்குதல் இலக்குகளைக் குறித்த தெளிவான அறிவும், பயங்கரவாதத் தாக்குதலில் சிறந்த தேர்ச்சியும் கொண்ட நபர்களால் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்த முடியும். அவர்களைத் தடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல'' என்கிறார்.

பிரான்ஸில் இந்த ஆண்டு மட்டும் இரண்டு முறை பயங்கரவாதத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அந்த இரண்டு தாக்குதல்களுமே பாதுகாப்புப் படையினரின் சாமர்த்தியத்தால் தடுக்கப்படவில்லை என்பதுதான் சோகம்.

பாரீஸ் புறநகர்ப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தாக்குதல் நிகழ்த்த முயன்ற சித் அகமது குலாம் என்பவர், எதிர்பாராத விதமாக தன் காலில் தானே சுட்டுக்கொண்டு போலீஸாரிடம் பிடிபட்டார்.

இதனால் அந்தத் தாக்குதல் தவிர்க்கப்பட்டது.

அதையடுத்து, நூற்றுக்கணக்கான பயணிகளுடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து பாரிஸ் நோக்கி கடந்த ஆகஸ்ட் மாதம் சென்றுகொண்டிருந்த அதிவிரைவு ரயிலில், இயந்திரத் துப்பாக்கி, கத்திகள் மூலம் அயூப் கஸானி என்பவர் தாக்குதல் நிகழ்த்த முயன்றார். எனினும் தாக்குதலுக்கு முன்னதாகவே, விடுமுறைக்காக பாரிஸ் சென்று கொண்டிருந்த இரு அமெரிக்க ராணுவ வீரர்களும், பயணிகளும் அவரை மடக்கிப் பிடித்தனர்.

அதனால் ஒரு மாபெரும் பயங்கரவாதத் தாக்குதல் தடுக்கப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரீஸ் தாக்குதலில் அதிகாரிகளுக்கு வழக்கம் போல் அதிருஷ்டம் கைகொடுக்கவில்லை.

""சிரியாவிலும், யேமன், லிபியா போன்ற நாடுகளிலும் களப் பயிற்சி பெற்று நாடு திரும்பும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிவிட்டது.

அதனால் அதிகாரிகளால் அவர்களை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்தச் சூழலில், பிரான்ஸ் முன்னெப்போதும் உள்ளதைவிட மிகப் பெரிய ஆபத்தில் இருக்கிறது. பிரான்ûஸக் காப்பாற்ற வெறும் அதிருஷ்டம் போதாது'' என்கிறார் முன்னாள் உளவுத்துறை அதிகாரி வெஸ் டிராடிக்னன்.

பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்தை எதிர்கொள்ள பிரான்ஸ் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments

Powered by Blogger.