Header Ads



பிரெஞ்சு தேசியக் கொடியை, புரபைலில் மாற்றுவது நியாயமா..?

-Kalaiyarasan Tha-

பிரான்சில் அநியாயமாக கொல்லப் பட்ட அப்பாவி மக்களுக்கு மரியாதை செலுத்தும் அதே நேரம், பிரெஞ்சு தேசியக் கொடியை புரபைலில் மாற்றுவது நியாயமான செயலாகத் தெரியவில்லை.

நூற்றுக் கணக்கான வருடங்களாக, ஏகாதிபத்திய வடிவில், காலனித்துவ எஜமானாக, பல உலக நாடுகளின் மக்களை ஒடுக்கிய சின்னமாக பிரெஞ்சுக் கொடி உள்ளது. முன்னாள் பிரெஞ்சுக் காலனி நாடுகள், இன்றைக்கும் பிரான்சுக்கு காலனிய வரி கட்டிக் கொண்டிருக்கின்றன.

பிரெஞ்சுக் கொடியை உயர்த்துவற்கும், உலகம் அறிந்த அமெரிக்க ஏகாதிபத்திய கொடியை உயர்த்துவதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வியட்நாமிய யுத்தத்தில், பிரான்சின் இடத்தை தான் அமெரிக்கா பிடித்துக் கொண்டது. கடந்த பல தசாப்த காலமாக, பிரான்ஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுத்து வந்துள்ளது.

யாராவது சிறிலங்காவின் சிங்கக் கொடியை உயர்த்தும் பொழுது, அது பெரும்பான்மை தமிழ் மக்களால், ஒரு அவமானச் சின்னமாக கருதப்படுகின்றது. அதே மாதிரி, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் கொடிகளும், ஒடுக்கப் பட்ட மக்களை அவமதிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாரிஸ் தாக்குதலில் கொல்லப் பட்ட அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், பிரெஞ்சுக் கொடியால் புரபைல் படத்தை போர்த்திக் கொள்வதை தவிர்ப்பதற்கும் அது தான் காரணம்.
பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசின் செயல்களை பற்றி எதுவும் அறியாமல், தமது உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களின் தியாகம் மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக தவிர்த்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்புவோர், பிரெஞ்சு அரச பயங்கரவாதிகளின் கொடியை உயர்த்துவதால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

இந்த இடத்தில், பிரான்சின் கடந்த கால வரலாறு பற்றி எதுவும் அறிந்திராத காரணத்தால், தமது புரபைலில் பிரெஞ்சுக் கொடியை போட்டுக் கொண்ட அப்பாவி மக்களை குற்றஞ் சாட்டவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். பிரான்ஸில் கொல்லப் பட்ட மக்களுக்காக மட்டுமல்லாது, பிரெஞ்சு அரசினால் கொல்லப் பட்ட ஒடுக்கப்பட்ட காலனிய நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம்.

1 comment:

  1. அது போர்த்தப்படும் சந்தர்ப்பத்தைப் பொறுத்து மாறுபடும்.

    இலங்கையில் இதேபோல அப்பாவி மக்கள்மீது பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்பட்டால், அப்போது இலங்கைக்கொடியை போர்த்துக்கொள்வது ஒன்றும் சிங்கள ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதாகாது.

    பிரான்ஸில் நடாத்தப்பட்ட தாக்குதல் ஒன்றும் பிரெஞ்சு இராணுவத்தின் மீதானதல்லவே. அது அப்பாவிச் சிவிலியன்கள் மீதான திட்டமிட்ட கோழைத்தனமான தாக்குதல். இதேபோன்று எங்கு நடந்தாலும் - பாலஸ்தீனத்தில் இராக்கில் மட்டுமல்ல இஸ்ரேலில் நடாத்தப்பட்டாலும் - அதைக் கண்டித்தே ஆகவேண்டும்.

    பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடாத்தப்படும்போது பாலஸ்தீனியக் கொடியைப் போர்த்த விரும்பினாலும் பேஸ்புக் அனுமதிப்பதில்லை என்பது உண்மையெனில் அதற்கு எதிராக நாம் ஒன்று திரண்டு நமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்க / தெரிவிக்க வேண்டும். அதற்காக பாரிஸ் தாக்குதலை நியாயப்படுத்தக் கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.