இனவாதிகளுக்கு இடமில்லையென, ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்..!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் கூட்டணியில் விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு இடமில்லை என்று முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இனவாதிகளுக்குத் தமது கூட்டணியில் இடமில்லை என்று கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பிட்டது.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் சரத் அமுனுகம இந்த விடயத்தைத் தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகளை ஏற்று அதற்கமைய செயற்படுபவர்களுக்கு மட்டுமேகூட்டணியில் இடமுள்ளது.
இனவாதிகளுக்கு எமது கூட்டணியில் இடமில்லை. விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோர் எமது கூட்டணியில் இல்லை. மேலும், பொது எதிர்க்கட்சியை நாமும், சபாநாயகரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
நாடாளுமன்றத்திற்குத் தெரிவான கட்சிகளை மட்டுமே சபாநாயகர் ஏற்பார். இதற்கமைய வெற்றிலை சின்னத்தில்தான் இந்தக் கட்சிகள் தெரிவாகியுள்ளன. எனவே, அந்தச் சின்னத்தின் கீழ்தான் அவர்கள் செயற்படமுடியும். 10 பேர் சேர்ந்து கட்சி உருவாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது'' - என்றார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டணி அமைக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்காத ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தினேஷ் குணவர்தன எம்.பி. தலைமையில், விமல் வீரவன்ஸ, ஜீ.எல்.பீரிஸ், திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, பந்துல குணவர்தன உள்ளிட்ட மஹிந்த ஆதரவு தரப்பினர் பொது எதிர்க்கட்சி எனக் கூறிக்கொண்டு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment