Header Ads



அமெரிக்காவின் தேசப்பற்றுச் சட்டம் போன்று, இலங்கையில் வரவுள்ள புதிய சட்டம்

பயங்கரவாதச் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அமெரிக்காவின் தேசப்பற்றுச் சட்டத்தை மாதிரியாகக் கொண்ட புதிய சட்டமொன்றைக் கொண்டுவர, அரசாங்கம் திட்டமிட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

புலிகளின் பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கான ஆயுதமாக பயங்கரவாதத் தடைச்சட்டம், அப்போது பயன்படுத்தப்பட்டது. யுத்தம் முடிந்த பின்னால், இந்தச்சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருப்பது விமர்சனத்துக்குள்ளானது. 

ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கை மீது நிறைவேற்றிய தீர்மானமும் இந்தச் சட்டத்தை நீக்கக் கோருகின்றது. வெளிவிவகார அமைச்சு, நீதியமைச்சு, சட்ட வரைஞர் திணைக்களம் ஆகியன, பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலான புதிய சட்டத்தை வரைந்து வருவதாக தெரிவித்துள்ளன. இதனைப் பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவர் உறுதிப்படுத்தினார். 

இது, அமெரிக்க தேசப்பற்றுசட்டத்தை ஒத்ததாக இருக்குமென அவர் கூறினார். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், எந்தவொரு பயங்கரவாதத்தையும் எதிர்க்க சர்வதேச தரத்திலான சட்டமாக இது அமையும். 

பயங்கரவாத தடைச்சட்டம், 1979 இல் தற்காலிக ஏற்பாடாக கொண்டுவரப்பட்டாலும் 1982 இல் இது நிரந்தரச்சட்டமாயிற்று. இந்தச் சட்டம், குற்றஞ்சாட்டாமல் ஒருவரைத் தடுத்துவைக்க வகை செய்கின்றது. இது, புலிச் சந்தேகநபர்கள் மீது பயன்படுத்தப்பட்டது. 

No comments

Powered by Blogger.