Header Ads



மைதானத்திற்கு வந்த மனித வெடிகுண்டு..! ஐரோப்பிய கால்பந்து தொடர் பிரான்ஸில் நடைபெறுமா..?

பிரான்சில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தீவிரவாதிகளின் முக்கிய இலக்கா ஜெர்மனி- பிரான்ஸ் அணிகள் மோதிய ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானம்தான் இருந்துள்ளது. இந்த போட்டியை காண, 80 ஆயிரம் மக்கள் திரண்டிருந்த நிலையில், மைதானத்திற்குள் ஒரு மனித வெடிகுண்டு நுழைய முயன்று தடுக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் போட்டியை காண வந்திருந்ததால்,  மைதானத்தின் அனைத்து நுழைவு வாயிலிலும் போலீசார்  கண்கொத்தி பாம்பாக இருந்துள்ளனர். போட்டி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், உடல் முழுக்கு வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு மைதானத்திற்குள் நுழைய முயன்ற நபர் ஒருவரை பாதுகாவலர்கள் பிடித்துள்ளனர். அவரிடம் போட்டியை காண்பதற்கான நுழைவுச் சீட்டு இருந்துள்ளது. பிடிபட்ட அந்த மனித வெடிகுண்டுவை உடனே அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு போலீசார் அப்புறப்படுத்தினர். 

அதாவது இந்த தொடர் தாக்குதலின் முதல் இலக்கு அதிக கூட்டம் கூடும் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானம் இருந்துள்ளது. மைதானத்திற்குள் மட்டும் வெடிகுண்டு வெடிக்கச்ச வைத்து விட்டால், கூட்ட நெரிசலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருப்பார்கள். இதுதான் தீவிரவாதிகளின் முதல் நோக்கமாக இருந்துள்ளது. நல்ல வேளையாக இது நடக்கவில்லை. 

ஆனால் பிரான்ஸ் நேரப்படி இரவு 9.20 மணியளவில் ஸ்டேட் டி பிரான்ஸ்  மைதானத்திற்கு வெளியேதான் முதல் மனித வெடிகுண்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. அங்குள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் முதல் மனித வெடிகுண்டு வெடித்தில், 3 பேர் இறந்துள்ளனர்.இந்த வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் மைதானத்திற்குள்ளும் கேட்கிறது. ஆனால் பிரான்சில் கால்பந்து போட்டிகள் நடக்கும் போது இது போன்று பட்டாசுகள் வெடிக்கச் செய்வது வழக்கமென்பதால் யாரும் பொருட்படுத்தப்படவில்லை. ஆனால் அதற்கு பின், அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் வி.ஐ.பி பாக்சில் இருந்து மைதானத்தின் பாதுகாவலர் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அடுத்து 9.25 மணிக்கு லா கார்லின்,லா பெடிட் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். தொடர்ந்து 9.29 மணியளவில் டி லா ரீபப்ளிகா பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் இறந்தனர். 9.38 மணிக்கு லா பெல்லா மதுபாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். அடுத்து 9.43 மணியளவில் ஒரு கடையில்  வெடிகுண்டு வெடித்ததில் ஒரு பலியானார்.

பின்னர் 9.49 மணியளவில் பதாச்சன் இசை ஹாலில் நுழைந்த 4 தீவிரவாதிகள் கண்முடித்தனமாக சுட்டதில் 80 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தொடர் தாக்குதலில் அதிக உயிரிழப்பு நிகழ்ந்தது இந்த இடத்தில்தான். பின்னர் இரவு 10 மணியளவில் நடந்த கடைசி தாக்குதலில், துப்பாக்கி சூட்டுக்கு 4 பேர் இறந்து போனார்கள். இப்படியாக 121 பேர் இறந்துள்ளனர். 

பாரிசில் இது போன்ற தாக்குதல் நடப்பது குறிப்பாக கால்பந்து மைதானத்தை தீவிரவாதிகள் குறி வைத்திருப்பது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில்தான் நடைபெற உள்ளது. இதுவரை 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டித் தொடரில் முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்க உள்ளன.

கடந்த 1998ஆம் ஆண்டு உலகக் கோப்பை 2000ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை போட்டிக்கு பின், பிரான்சில் நடைபெறும் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா இது. இதனால் இந்த போட்டியை மிக பிரமாண்டமாக நடத்த பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.  பிரான்சில் உள்ள 10 மைதானங்களில் போட்டி நடைபெறுகிறது. இதில் தலைநகர் பிரான்சில் உள்ள 'ஸ்டேட் டி பிரான்ஸ் 'மற்றும் 'செயின்ட் டி பிரின்சஸ் ' ஆகிய இரு மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. 

தற்போதுள்ள சூழலில்,  ஒரு மாத காலம் நடைபெறவுள்ள இந்த கால்பந்து தொடருக்கு பிரான்ஸ் நாட்டால் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது. இன்னும் ஒரு அசம்பாவித சம்பவம் நடந்தாலும் ஐரோப்பிய கோப்பைத் கால்பந்து தொடர் வேறு நாட்டுக்கு மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது.

No comments

Powered by Blogger.