பிரதமர் ரணிலுக்கு எதிராக, ஜனாதிபதி மைத்திரியிடம் முறைப்பாடு
அமைச்சரவை கூட்டங்களின்போது சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் முன்வைக்கும் அமைச்சரவைப் பத்திரங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உதாசீனப்படுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையிலான சந்திப்பின் போது இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,
சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் முன்வைக்கும் அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பில் பிரதமர் ஆதரவளிப்பதில்லை. அவற்றை நிராகரிப்பதற்கு அல்லது பிற்போடுவதற்கே அவர் முயற்சிக்கின்றார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களின் அமைச்சரவைப் பத்திரங்களை உடனடியாக அனுமதி வழங்கி செயற்படுத்த இடமளிக்கின்றார்.
இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெற்றால் இணக்க அரசியல் என்பதன் அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஜனாதிபதியிடம் முறைப்பட்டுள்ளார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்த கருத்தை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவும் ஆமோதித்துள்ளார்.
எனக்கும் பல தடவைகள் இந்தப்பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. வெளிக்கு இணக்க அரசியல் பேசினாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மனதில் இணக்கப்பாடு இல்லை என்று அமைச்சர் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து பதிலளித்த ஜனாதிபதி அடுத்தவார அமைச்சரவைக் கூட்டத்தின்போது இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதாக வாக்களித்துள்ளார்.
Post a Comment