ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது ஊழல், மோசடி, கொலை உள்ளிட்ட 750 குற்றச்சாட்டுக்கள் - அமைச்சர் மங்கள
ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்ட ஊழல், மோசடி மற்றும் கொலைக்குற்றச்சாட்டுக்கள் 750 உள்ளன என்றும், அவை தொடர்பான விசாரணைகள் 4 வருடங்களுக்கு முடிவுக்குக் கொண்டு வர அரசு முயற்சி செய்வதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
பாரிய ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் இன்னும் தண்டிக்கப்படாமை தொடர்பில் பொதுமக்கள் அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர். சிறு குற்றவாளிகள்
என்றால் உடனே தண்டிக்க முடியும். இருப்பினும் இவர்கள் பாரிய குற்றவாளிகள்என்பதால் குற்றங்களை நிரூபிக்க காலதாமதம் ஏற்படலாம்.
இருப்பினும், நான்கு வருடங்களுக்குள் அனைத்து விசாரணைகளையும் நிறைவுசெய்து குற்றவாளிகளைத் தண்டிக்கவே முயற்சி செய்து வருகின்றோம்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதனை நான் பொறுப்புடன் கூறுகின்றேன். ராஜபக்ஷ சகாக்கள் மீது ஊழல், மோசடி மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் 725 பதிவு செய்யப்பட்டுள்ளன.
அக்குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றிலும் ராஜபக்ஷ குடும்பத்தவர் ஒருவரேனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டுள்ளார். அதேவேளை, ஊழல், மோசடி மற்றும் கொலைக்குற்றச்சாட்டுக்கள் 25 உடன் மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது. இவை தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.
எனினும், எம்மிடமுள்ள வளப்பற்றாக்குறை காரணமாக விசாரணைகள் தாமதமாகின்றன. குறைந்தளவினான அதிகாரிகளே விசாரணைகளை முன்னெடுக்கின்றனர். அதேபோன்று, இக்குற்றச்சாட்டுக்களுடன் சர்வதே தொடர்புகளும் உள்ளமையினால் ஒரு குற்றச்சாட்டை விசாரிக்க 7, 8 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது என்றார்.
இதன்போது, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேலுக்கு வீசா வழங்கப்படுமா என்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிகும்போது, "நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்கள் அனைவரும் நாட்டுக்கு மீண்டும் வர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
2014ஆம் ஆண்டு தேர்தலை இலக்காக வைத்து பல அமைப்புக்களுக்கு மஹிந்த ஆட்சியில் புலி முத்திரை குத்தப்பட்டு தடைவிதிக்கப்பட்டது. அதில் இறந்தவர்களது பெயர்களை உள்வாங்கியிருந்தனர். எனினும், இந்த அமைப்புக்கள் தொடர்பின் தற்போதைய உண்மை நிலைவரங்கள் தொடர்பில் நாங்கள் கூடி ஆராயவுள்ளோம்.
நாட்டின் நலனில் கரிசனையுள்ளவர்களுக்கு இலங்கை வருவதற்கும் போவதற்கும் அனுமதி உள்ளது. அந்த நிலைப்பாடே உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் என்பவர் தொடர்பிலும் உள்ளது" - என்று கூறினார்.
Post a Comment