25 ஆயிரம் சிரிய அகதிகளுக்கு அனுமதி வழங்க, கனடா பிரதமர் முடிவு
கனடாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 25 ஆயிரம் அகதிகளுக்கு மீள்குடியேற்றம் வழங்க முடிவு செய்துள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே இந்த ஆண்டு இறுதிக்குள் 25 ஆயிரம் சிரிய அகதிகளுக்கு மீள்குடியேற்றம் வழங்க திட்டமிட்டுள்ளார்.
எனினும் அவரது இந்த திட்டத்தால் கனடாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மேலும் பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பிரதமர் தனது திட்டத்தை கைவிடவேண்டும் என்று Saskatchewan பகுதியின் பிரிமியர் பிராட் வால் தெரிவித்திருந்தார்.
மேலும் நாட்டிற்கு தீங்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளவர்களில் குறைந்த அளவினர் கனடாவுக்குள் நுழைந்தாலும் அகதிகள் மீள்குடியேற்றம் திட்டத்துக்கு பேரழிவு ஏற்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
எனினும் பிரதமர் ட்ரூடே அவரது வேண்டுகோளை நிராகரித்துள்ளார். இதனிடையே இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் கூறியதாவது, பிரதமரின் இந்த திட்டம் ஆபத்து நிறைந்தது தான்.எனினும் சமாளிக்க கூடியது.
ஆகவே, பிரதமர் இந்த திட்டத்தை செயல்படுத்தவதற்காக எந்த அழுத்தமும் தர தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கனடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தின் முன்னாள் தலைவர் பீட்டர் ஷெலர் கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அகதிகளை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்ற இந்த திட்டத்தின் காலத்தை கண்டிப்பாக அதிகாரிகள் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக நான் நம்புகிறேன்.
பின்னர், எப்போது நிறைவேற்ற முடியுமோ அப்போது நிறைவேற்றுவோம் என்று அதிகாரிகள் கூறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
2005 முதல் 2014 ஆம் ஆண்டுக்குள் 2 லட்சத்து 65 ஆயிரம் அகதிகளை கனடா ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment