"இலங்கை நிர்வாக சேவை ஆள்சேர்ப்பில், தெரிவான 2 முஸ்லிம்கள் ஓரம்கட்டப்பட்டனர்"
இலங்கை நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்கான ஆள்சேர்ப்பில் தெரிவு பெற்ற முஸ்லிம்கள் இருவர் அவர்கள் முஸ்லிம் என்பதற்காகவே ஓரம்கட்டப்பட்டுள்ளதை உலமா கட்சி வண்மையாக கண்டித்துள்ளதுடன் இது விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் தலையிட்டு நியாயம் பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது,
2013 -14 இலங்கை நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட பிரிவுக்கான தேர்வுக்காக ஆயிரக்கணக்கான பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் எழுத்து மூல பரீட்சையில் தோற்ற சித்தியடைந்த 58 பேர் மட்டும் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் இருவர் மட்டுமே முஸ்லிம்களாவர். இந்த 58 பேரில் 46 பேர் தெரிவு செய்யப்படுவர் என்றும் பின்னர் தெரிவு செய்யப்பட்ட 45 பேரின் பெயர் பட்டியல் வெளயாகிய போது மேற்படி இரண்டு முஸ்லிம்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காகவே இவ்வாறு அவர்கள் நீக்கப்பட்டுள்ளமை இனவாதமாகவே உலமா கட்சி காண்கிறது. ஆகக் குறைந்தது இன விகிதாசாரப்படி இந்நியமனம் வழங்கப்பட வேண்டும் என்றிருந்தால்கூட எழுத்துப்பரீட்சையில் தேறிய மேற்படி இரு முஸ்லிம்களும் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள்.
கடந்த மகிந்த ஆட்சியின் இறுதிக்கட்டத்திலும் இவ்வாறு அரச நேர்முக பரீட்சைகளில் இனவாத செயற்பாடே அதிகம் இருந்தது. அந்த ஆட்சியிலும் எமது முஸ்லிம் அமைச்சர்கள் பந்தாக்களுடன் வலம் வந்தார்களே தவிர இவற்றை கட்டுப்படுத்த முடியாத செயற்திறணற்று இருந்தார்கள். தற்போதைய ஐ தே க தலைமையிலான நல்லாட்சியிலும் அதே இனவாதம் தொடர்வதை அனுமதிக்க முடியாது.
ஆகவே மேற்படி பரீட்சையில் வெற்றி பெற்று நேர்முக தேர்வில் ஓரங்கட்டப்பட்ட இரண்டு முஸ்லிம்களையும் மேற்படி பதவிக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என உலமா கட்சி கோருவதுடன் இது விடயத்தில் முஸ்லிம் கட்சித்தலைமைகள், அமைச்சர்கள் தலையிட்டு நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும் வேண்டுகிறது.
Post a Comment