நீண்டநேரம் தொலைக்காட்சி பார்த்தால்...!
நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் ‘நுரையீரலும் பாதிக்கப்படும்’ என்கிறார்கள் ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழக ஆய்வாளர்கள். சுமார் 86 ஆயிரம் நபர்களின் அன்றாட நடவடிக்கைகளை ஆய்வு செய்ததில் 5 மணி நேரத்துக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கிறவர்களுக்கு Pulmonary embolism என்ற நுரையீரல் நோய் ஏற்படுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் காலில் ஏற்படும் ரத்தக்கட்டு, காலிலிருந்து நகர்ந்து நுரையீரலுக்கு இடம்பெயர்கிறது. இதனால் நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், இதயத் துடிப்பு அதிகமாவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
பல்மனரி எம்பாலிஸம் தீவிரமடைந்தால் ரத்த அழுத்தம் கடுமையாகக் குறைந்து உயிரையே பறிக்கலாம் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வுக்குழுவினர். “நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படாமல் தடுக்க, இடையிடையே எழுந்து, வேறு வேலைகளில் ஈடுபடுவது, தண்ணீர் அருந்துவது, இடைவேளை விட்டு பார்ப்பது போன்றவை தேவையான இடைவேளையை அளிக்கும்” என்று ஆலோசனை வழங்குகிறார் ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான ஷிராகவா.
‘குறைந்த நேரம் தூங்குகிறவர்களுக்கு ஜலதோஷம் வரும் வாய்ப்பு அதிகம்’ என்று ஏற்கனவே ஓர் ஆய்வு கூறியிருந்தது. தனிப்பட்ட நோயாளிகளின் அனுபவங்களைக் கேட்டதன் அடிப்படையிலேயே அந்த ஆய்வு அமைந்திருந்தது. இந்த விஷயத்தை அதிகாரப்பூர்வமாக தெரிந்துகொள்ளும் வகையில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்.கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தினரால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆரோக்கியமான 164 பேர் பங்கேற்றனர்.
சிறிய கைக்கடிகாரம் போன்ற ஃபிட்னஸ் டிராக்கர் கருவியை இவர்களின் கையில் கட்டிவிட்டார்கள். இதன்மூலம் ஒரு வாரம் அவர்களின் தூங்கும் பழக்கத்தைக் கண்காணித்தார்கள். 5 நாட்களுக்குப் பிறகு அவர்களை ஆய்வு செய்ததில் 6 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு ஜலதோஷ ரிஸ்க் 4 மடங்கு அதிகமாக இருப்பது தெரிய வந்தது. ‘போதுமான தூக்கமின்மையால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். எதிர்கால ஆய்வுகளில் இதற்கான நுட்பமான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும்’ என்கிறார் இந்த ஆய்வை நடத்திய பேராசிரியரான ஆரிக் ஃப்ரதர்.
Post a Comment