Header Ads



இன்னும் தொடருமா இந்த பரிதாப வாழ்வு..?

-சுஹைப் .எம்.காசிம் -

வட புலமுஸ்லிம்கள் சொந்த மண்ணிலிருந்து புலிகளால் விரட்டப்பட்டு 25 ஆண்டுகளாகின்றன. இடப்பெயர்வுக்கு முற்பட்ட காலத்திலே இந்த முஸ்லிம்கள் தமிழ் மக்களோடு மிக அந்நியோன் யமாகவும் ஒற்றுமை, சகோதர உணர்வுடனும் வாழ்ந்த வரலாறு மீட்டிப்பார்க்க வேண்டியதாகும்.

இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் 90 ஒக்டோபர் கடைசிப் பகுதியில் உடனடியாக முஸ்லிம்கள் வெளியேறவேண்டுமெனப் பணிக்கப்பட்டனர். இத்தகைய தர்மசங்கடமான நிலையை முஸ்லிம் சமூகம் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. ஏகப் பெருவெளியிலே, இருள் சூழ்ந்த கடலிலே, குந்துவதற்கு பற்றுக்துகோடு அற்ற பறவைகள் போல முஸ்லிம்கள் தத்தளித்தனர். ஒரு வாரமோ ஒரு மாதமோ வெளியேற அவகாசம் கிடைத்திருப்பின் வேண்டிய பொருட்களோடு வெளிச்செல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கும். அவ்வாறு நடைபெற வில்லை. வெளியேறும் போது மக்களை கர்ண கடூரமாக சோதனையிட்டே விரட்டினர். நகைகள், பணம் கொண்டு சென்றவர்களிடம் இவை தமிழ் மண்ணில் உழைத்தவை, உங்களுக்கு அவை சொந்தமில்லை என அவைகளை அபகரித்தனர். முஸ்லிம்களை விரட்டியபோது இவ்வாறான காட்டு தர்பார் நடவடிக்கைகளையே புலிகள் கையாண்டனர்.

அவை மண்ணோடு மண்ணாகி விட்டதேயொழிய மீளப் பெற முடியவில்லை. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் கால்நடைகளும் வீட்டிலுள்ள தளபாடங்களும் விற்பனைக்குள்ளாகியதாக பின்னர் அறிய முடிந்தது. ஐப்பசியில் வெளியேறியதால் வயல்கள் அனைத்திலும் பயிர்கள் செழித்துக் காணப்பட்டன. அவையும் கைவிடப்பட்டன. முஸ்லிம் கல்விமான்கள், ஆசிரியர்களின் வீடுகளில் இருந்த அறிவுக்களஞ்சியமான நூல்களும் இழக்கப்பட்டன.

பாடசாலைகள், பள்ளிவாசல்கள் அனைத்தும் நாசம் செய்யப்பட்டு பெறுமதிமிக்க பொருட்கள் சூறையாடப்பட்டன. இடப்பெயர்வால் கட்டுக் கோப்பான கல்விப் போதனை இல்லாதொழிந்து மாணவ சமூகம் சிதறடிக்கப்பட்டது. இப்பாடசா லைகளில் கற்பித்த நல்லாசிரியர்கள் வௌ;வேறிடங்களில் முகாமில் வாழ நேர்ந்ததால் ஆசிரிய மாணவ தொடர்பு அற்றுப்போனது.

பாரம்பரியமாக செய்து வந்த காணிகளும் தொழில் மையங்களும் கைவிடப்பட்டதால் இந்த மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். இடம்பெயரும் போது சுமார் ஓர் இலட்சமாகவிருந்த அகதிகளின் தொகை 25 ஆண்டுகளிலும் பல்கிப் பெருகியது.

இதனால் வீட்டு வசதிக்குறைபாடு, தொழில் இன்மை, செய்யும் கூலித் தொழிலினால் பெறப்படும் ஊதியம் போதாமை, பிள்ளைகளின் கல்விச் செலவு, வளர்ந்த பிள்ளைகளின் வாழ்க்கை அமைப்புக்கான பணத்தேவை எனப்பல்வேறு நெருக்கடிகள் அகதி மக்களுக்கு விரக்தியை ஏற்ப டுத்தின.

வாழ்க்கையில் சபலத்தையும் சலனத்தையும் ஏற்படுத்தின. அதனால் இந்த மக்கள் பணத்தேவைக்கு தாம் முன்னர் வாழ்ந்த பாரம்பரிய பிரதேசத்திலுள்ள வீடுகள், காணிகள், வயல் நிலங்கள் ஆகிய அசையாத சொத்துக்களை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவங்களும் நிறைய உண்டு.

துரதிர்ஷ்ட வசமாக வடபுல முஸ்லிம்களின் பொன்கொழிக்கும் வயல்கள் விற்பனைக்குள்ளாகின. வடபுல முஸ்லிம்கள் மீது கட்டவிழ்ந்து விடப்பட்ட இந்நாசகார நடவடிக்கையை சர்வதேச சமூகம் கூடக் கண்டிக்கவில்லை. மனித நேய ஆர்வலர்கள் என்று கூறப்படும் அனைவருமே மௌனம் காத்தனர். ஜெனீவாவோ, ஐ.நாவோ, இந்த மக்கள் பற்றி எந்தக் கரிசனையும் கொள்ளவில்லை.

இந்நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமான துரோகத்தனமாகவே அமைந்தது. புண்பட்ட உள்ளத்தோடு புத்தளம் மற்றும் தென்னிலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் வந்த முஸ்லிம்கள் முகாம்களில் குடியமர்த்தப்பட்டனர். தென்னிலங்கை முஸ்லிம்களும் குறிப்பாக புத்தளம் முஸ்லிம்களும் அகதிகளை அன்புடன் ஆதரித்தனர். வரவேற்றனர். பசிக்குணவளித்து, வளங்களில் பங்களித்து பராமரித்தனர். முகாம் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை அகதிகள் அனுபவித்தனர். அனுபவித்தும் வருகின்றனர்.

போர் முடிவுற்றது. இடம்பெயர்ந்து அகதி நிலையடைந்த மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள். அகதி மக்கள் இரு வகையினர். 1990இல் புலிகளால் விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்கள் முதல்வகை. போரில் அகப்பட்டு மடிந்து விடாமல், பாதுகாப்புத்தேடி வெளியேறியோர் இரண்டாம் வகையினர். முதல்வகையினர் 25 ஆண்டுகளாக மீள்குடியேற்றம் செய்யப்படாமல் பல்வேறு மாவட்டங்களில் வாழ்கின்றனர். இரண்டாம் வகையினர் போர் உக்கிரமடைந்த வௌ;வேறு காலப்பகுதியில் வெளியேறியோர்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணியை அரசு யுத்தம் முடிந்த உடனே ஆரம்பித்து. கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் படிப்படியாக மீள்குடியேற்றம் இடம்பெற்றன. மீள்குடியேற்றச் செயற்பாடுகளில் திருப்தி இல்லையென்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க புலம்பெயர் தமிழர்களும் தமிழ்க்கட்சிகள் சிலவும் இதனை அரசியல் ஆயுதமாகப் பாவித்தும் வருகின்றன. முந்திய வகையினரான வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எவருமே கவனஞ்செலுத்தவில்லை. போர் முடிவுற்ற பின்னர் சொந்த மண்ணை மிதித்த முஸ்லிம்கள் தம் இடங்களைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர். வீடுகள் தரைமட்டம், பள்ளிகள், பாடசாலைகள், பொதுக்கட்டங்கள் அனைத்துமே அழிந்து கிடந்தன. உயர்ந்த மரங்கள் வளர்ந்த காடாகக் கிராமங்கள் காட்சி தந்தன. கண்கள் குளமாகிப் பிரமித்துப் போன மக்கள் காடுகளை அழிக்க முயன்றனர்.

அதன் பின்னர் சில கிராமங்களில் மக்கள் ஆங்காங்கே குடியேறி வாழ்கின்றபோதும் அது இன்னும் பூரண வெற்றியளிக்கவில்லை. காரணம் அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. மீள்குடியேற்றத்துக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்க மறுக்கின்றனர். அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியில்லை. சர்வதேசம் இந்த மக்கள் பற்றி பாராமுகமாக இருக்கின்றது. மீள்குடியேற்றம் திட்டமிட்டு தடுக்கப்படுகின்றது. குடியேறியுள்ள ஒரு சில குடும்பங்கள் பெரும் அவதிப்படுகின்றன.

முஸ்லிம்களுடன் ஏற்கனவே இருந்த அந்நியோன்ய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, முஸ்லிம்களை வடபுலத்தில் அந்திய இனமாக நோக்கும் அல்லது பார்க்கும் மனநிலையைச் சிலரிடம் காணமுடிவதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் உடனிருந்து வாழவேண்டியவர்கள், முஸ்லிம் இனம் எதிர்கொண்ட கஷ்டங்களை மீளப்பார்த்து அவர்கள் மீது அனுதாபம் கொண்டு உதவ வேண்டியது. தமிழ்ச் சகோதரர்களின் கடமையாகும்.

No comments

Powered by Blogger.