Header Ads



அரச பத்திரிகையில் மாட்டிறைச்சி ஆதரவு, கட்டுரை எழுதியவர் பணி நீக்கம்

ஹரியான மாநில அரசின் இந்த நடவடிக்கை குறித்து குறிப்பிட்ட அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் ஷர்மா, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக அதன் ஆசிரியர் நியாயப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இருந்தப்போதும் அரசாங்கத்தின் பத்திரிகையில் இந்த கட்டுரை வெளியானது தவறு என்றும், அதனால் அவர் தற்போதைக்கு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ராம் பிலாஸ் ஷர்மா கூறினார். தேவைப்படும் நடவடிக்கைகளும் அவர் மீது தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் ராம் பிலாஸ் ஷர்மா உறுதி செய்தார்.

இந்த விவகாரம் தொடர்புடைய அந்தக் கட்டுரை, ஹரியான மாநில அரசாங்கத்தின் இருமொழிகளில் வெளியாகும் பத்திரிக்கையில், கடந்த செப்டம்பர் மாத இதழில் வெளியாகியது. ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்டிருந்த அந்தக் கட்டுரை 'இரும்பு சத்து வலிமைக்கு அவசியம்' என்கிற அர்த்தம் கொண்டிருந்த தலைப்பில் எழுதப்பட்டிருந்தது.
Image copyright Reuters

இந்த பத்திரிக்கையை நடத்தும் அமைப்புக்கு ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

"இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழலாம், ஆனால் அவர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட வேண்டும். மாடு என்பது மக்களின் இறை நம்பிக்கை சார்ந்தது" என ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் மனோகர் லால் கட்டார் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரமும், தலித் குடும்பம் ஒன்றை உயிரோடு எரித்துக் கொலை செய்ய நடந்த முயற்சியில் இரண்டு இளம் குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரமும் சர்ச்சையை உண்டாக்கியிருந்தன. இதன் தொடர்ச்சியாக இந்த செய்தியும் இதே மாதத்தில் வெளியாகியுள்ளதால், மீண்டும் பரபரப்பு விமர்சனங்கள் வெளிவர துவங்கியுள்ளன.

ஹரியானா மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொல்வது சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றத்திற்கு தற்போதுள்ள சட்டப்படி 5000 ரூபாய் வரை அபராதமும், 5 வருடம் வரையிலான சிறை தண்டண்டனையும் விதிக்க இயலும். அதே சமயம் வெளிமாநிலங்களிலிருந்து அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிகளுக்கு தடை இல்லாமல் தான் உள்ளது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள உணவு விடுதிகளில் மாட்டிறைச்சி உணவுகள் விற்பனை நடைபெற்று தான் வருகிறது.

முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டத்தை மாற்றி, முழுமையான மாட்டிறைச்சிக்கான தடை விதிக்கும் சட்டத்தை இயற்ற தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஹரியானா மாநில விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சர் ஓம் பிரகாஷ் தன்கர் தெரிவித்துள்ளார். மேலும் குஜராத் மாநிலத்தில் முழுமையான மதுவிலக்கு உள்ளது போல ஹரியானா மாநிலத்தில் முழுமையான இறைச்சி உணவுக்கான தடை ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.