மகிந்த அணியினர், முஜீபுர் ரஹ்மானை தாக்குவதற்கு முயற்சி (நேரடி றிப்போர்ட்)
(பாராளுமன்ற நிருபர்கள்)
ஜெனீவா தீர்மானம் தொடர்பான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது ஐ.ம.சு.மு. வின் மகிந்த ஆதரவு அணியினர் திடீர் களேபரத்தில் ஈடுபட்டு சபைக்கு தலைமை தாங்கிய முஜிபுர் ரஹ்மானையும் உதவிப் படைக்கல சேவிதரையும் தாக்க முற்பட்டதுடன் செங்கோலையும் தூக்க முயன்றதால் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.
ஜெனீவா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் விமல் வீரவன்சவுக்கு உரையாற்ற நேரம் கொடுக்காது அமைச்சர் சுவாமி நாதனுக்கு நேரம் கொடுத்ததாகக் கூறியே மகிந்த அணியினர் களேபரத்தில் ஈடுபட்டனர்.
ஜெனீவா தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நேற்றுக் காலை முதல் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இப் பிரேரணையை சமர்ப்பித்து அஜித்மானப் பெரும, பண்டு பண்டார கொட, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிவசக்தி ஆனந்தன், விஜிதஹேரத், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோர் உரையாற்றிய நிலையில் சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த ஐ.தே.க. எம்.பி. யான முஜிபுர் ரஹ்மான் அமைச்சர் சுவாமிநாதனை பேசுமாறு அழைத்தார்.
அப்போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய விமல் வீரவன்ச அது தனக்குரிய நேரமெனக் கூறினார். ஆனால், சுவாமிநாதனின் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து மகிந்த அணியினர் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதில் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்ட தினேஷ் குணவர்த்தன சபாபீடத்தை நோக்கி ஓடிவந்தார்.
இதனையடுத்து மகிந்த அணியினர் ஆவேசத்துடன் அவர் பின்னால் சபா பீடத்தை நோக்கி வரவே உதவி படைக்கல சேவிதரும் உதவியாளர்களும் ஓடோடி வந்து சபா பீடத்திற்கு பாதுகாப்பு வழங்கினர். படைக்கல சேவிதர் செங்கோலை பாதுகாக்க முற்பட்ட போது அவரை நெஞ்சில் பிடித்து தள்ளிய தினேஸ் குணவர்த்தன செங்கோலை தூக்கிச் சென்றார்.
எனினும் உ தவிப் படைக்கல சேவிதர் தடுத்து விட்டார். இதற்கிடையில் சபையை ஒத்திவைத்த முஜிபுர் ரஹ்மான் ஆசனத்தை விட்டு இறங்கிய போது அவரை சூழ்ந்த மகிந்த அணியினர் தாக்க முயற்சித்தனர்.
இவ்வேளையில் அரச தரப்பினரும் சபைக்கு நடுவே இறங்கியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டதுடன் கூச்சல் குழப்பங்களால் சபை அதிர்ந்தது. முஜிபுர் ரஹ்மானுடன் மகிந்த அணியினர் கடுமையாகத் தர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து அங்கு அமைதியை ஏற்படுத்த முயன்ற அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அமைச்சர்கள் முஜிபுர் ரஹ்மானை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதுடன் தினேஷ் குணவர்த்தனவுடன் உரையாடினார்.
எனினும் விமல் வீரவசன்சவும் இன்னும் சிலரும் ஆவேசத்துடன் கூச்சலிட்டு கொண்டிருந்தனர். அடுத்ததாக விமல் வீரவன்சவை பேச நேரம் கொடுப்பதாக மங்கள சமர வீர கூறியதையடுத்து மகிந்த அணியினர் தமது ஆசனங்களுக்கு திரும்பினர் . பின்னர் ஒரு மணிக்கு சபை மீண்டும் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் கூடியது. அப்போது எழுந்த தினேஷ் குணவர்தன புரிந்துணர்வின்மையால் ஏற்பட்ட நிலைக்கு வருந்துவதாக தெரிவித்ததையடுத்து விமல் வீரவன்ச உரையாற்றினார்.
Post a Comment