"மீண்டும் வருவோம்"
-யாழ் அஸீம்-
வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 2015 ஒக்டோபர் 30 ஆம் திகதியுடன் 25 வருடங்கள் பூர்த்தியாகியது...! யாழ். மண்ணிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு ஒக்டோபர் 30 அன்று ஆறு வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு, 1996 ஆம் ஆண்டு சரிநிகர் பத்திரிகையில் வெளியான இக்கவிதை யாழ்ப்பாணம், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் எழுதப்பட்டதாகும். வட மாகாண முஸ்லிம்கள் தம் தாயக பூமியிலிருந்து வெளியேற்றப்பட்டு கால் நூற்றாண்டாகி விட்டபோதிலும் இரு மணி நேரக் குறுகிய கால அவகாசத்துள், இருநூறு ரூபாவோடு வெளியேற்றப்பட்ட அத்துயர வடுக்கள் என்றும் மறைவதில்லை.
எவ்விதக்காரணமுமின்றி முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக வெளியேற்றப்பட்ட வலிகளை 'மீண்டும் வருவோம்' என்ற ஈமானிய உறுதியுடன் எழுதப்பட்ட இக்கவிதை தமக்கு இழைக்கப்பட்ட சோகத்தை எடுத்துக் கூறும் அதேவேளை இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழ் மக்களுடனான நட்பையும் வேண்டி நிற்கிறது.
அந்த கவிதையின் ஒரு பகுதி
இது கவிதையல்ல;
கற்கள்
இதயத்திலிருந்து
இதயத்திற்கு வீசும்
கவிதைக் கற்கள்
பாலஸ்தீனப் போராளியின்
கையிலுள்ள
கல்லைப் போல்
காயப்படுத்தும்
உடலையல்ல
உள்ளத்தை!
இழந்த மண்ணுக்காய்
ஏங்கும் இதயத்தின்
ஏக்கப் பெருமூச்சுக்கள்!
இப்போது நினைத்தாலும்
இதயம் சுடுகிறது – இல்லை
இதயம் எரிகிறது.
அக்டோபர் முப்பதில்
அன்று வைத்த நெருப்பு
இன்றும் எரிகிறது.
இப்போது நினைத்தாலும்
இதயம் எரிகிறது.
என் பிரிய நண்பர்களே!
அக்டோபர் முப்பது
அன்றைய தினம்
நெஞ்சிலே உள்ளதா?
எம் வாழ்வுச் சிற்பமதை
சிதைத்த சிற்பிகளே!
அன்றைய தினம்
நெஞ்சிலே உள்ளதா?
அக்டோபர் புரட்சியில்
அரிச்சுவடி படித்து
வீரமாய் விளைந்த நீங்கள்
சோரம் போன – அந்த
அக்டோபர் முப்பது
நெஞ்சிலே உள்ளதா?
எங்கள் தலைவிதியை
இருமணி நேரத்தில்
மாற்றி எழுதிய
இரக்கமில்லாத எழுத்தாளர்களே!
ஜின்னா மைதானத்தில்
அன்று நீங்கள்
ஆடிய விளையாட்டு
எங்கள் விதியோடு
ஆடிய விளையாட்டு!
சகுனிக்கே
சவால் விட்ட
சதிகார விளையாட்டு
அன்று கூறிய வார்த்தைகள்
இன்றும் எதிரொலிக்கிறது
“இரு மணி நேரம் தருகிறோம்
உயிருடன் உங்களை
விடுகிறோம்.
எல்லாம் உங்கள் நன்மைக்கே
எடுப்பதை எடுத்துப்
புறப்படுங்கள்
எல்லாம் நாமே காத்திடுவோம்
இனியொரு நாளில்
அழைத்திடுவோம்”
நாவிலே பூங்கொத்து
நெஞ்சிலே நச்சு விதை…
எப்படி முடிகிறது?
உங்களால்…..!
இரு மணி நேரத்தில்
எங்கள் பயணம்
இதயத்தில் பாரத்தோடு
கைகளிலே பாரமின்றி
ஆரம்பமானது…
அந்த இடியும் வீழ்ந்தது.
இப்போது நினைத்தாலும்
இதயம் சுடுகிறது.
இப்போது நினைத்தாலும்
இதயம் எரிகிறது…
வழியனுப்பிவைத்த நீங்கள்
வழிமறித்து நின்றீர்கள்!
Post a Comment