Header Ads



ஜனாதிபதி மைத்திரியுடன் அமைச்சர் றிசாதினால் ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனது ஏன்..?


பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே தவறவிட்டு விட்டு போன பஸ்ஸுக்கு கைகாட்டும் நிலைக்கு அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் அசமந்த போக்கே காரணம் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற தாமதம் சம்பந்தமாக கட்சித்தலைமையகத்தில் நடை பெற்ற  ஆய்வு கூட்டத்திலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டதாவது,

1990ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் தமக்கு விடிவு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்த சூழ்நிலையிலேயே 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அவர்களின் வாழ்வுக்கான விடிவெள்ளியும் தென்பட்டது. அந்த வேளையில் வட மாகாண முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதியான அமைச்சர் ரிசாத் பதியுதீன் மிகப்பெரும் அதிகாரமிக்க அமைச்சராக இருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர் பெசலும் இவரது சட்டைப்பைக்குள் எனுமளவு நெருக்கமாக இருந்தார். அத்துடன் வட மாகாண முஸ்லிம்கள் விடயத்தில் பெசில் ராஜபக்ஸ அப்பழுக்கற்ற அக்கறை கொண்டவராக இருந்ததாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அடிக்கடி பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அரசியல் அதிகாரமும் ஜனாதிபதியின் கடைக்கண்பார்வையும் இருந்தும் ஏன் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் பூரணப்படுத்தப்படவில்லை என்பதற்கு இது வரை அமைச்சர் தரப்பில் சரியான பதில் தரப்படவில்லை. இது விடயத்தில் தமிழ் கூட்டமைப்பு தடையாக இருப்பதாக அமைச்சர் தரப்பில் சொல்லப்படுவதை ஏற்க முடியாது. காரணம் கடந்த ஆட்சியில் தமிழ் கூட்டமைப்பு என்பது அரசின் எதிர் கட்சியாக மட்டுமல்லாது எதிரியாகக்கூட இருந்தது. அவ்வாறான நிலையில் தமிழ் கூட்டமைப்பின் பேச்சை கேட்டு வட மாகாண முஸ்லிம்கள் விடயத்தில் கடந்த அரசு ஒத்துழைக்கவில்லை என்றால் அது அந்த அரசின் தவறா அல்லது அரசுடன் ஒட்டி உறவாடியும் சாதிக்க முடியாமல் போன அமைச்சர் ரிசாதின் கையாலாகாதனமா? அல்லது இப்பிரச்சினையை பிச்சைக்காரன் புண்ணாக வைத்து அரசியல் செய்யும் சந்தர்ப்பவாதமா என கேட்க வேண்டியுள்ளது.

வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் உடனடியாக நடக்க வேண்டும் என்பதை உலமா கட்சி அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளது. மௌலவி சுபியான் தலைமையில் வட மாகாண முஸ்லிம்களை மீள் குடியேற்றும்படி கொழும்பில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கலந்து கொண்ட ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சி மட்டுமேயாகும். ஆனால் இன்று வட மாகாண முஸ்லிம்கள் அதிகார அரசியல் இலாபத்துக்காக ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

கடந்த அரசு இவற்றுக்கு உதவவில்லை என்றால் ஜனாதிபதி தேர்தலின் போது இறுதிக்கட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவளித்த போது வட மாகாண முஸ்லிம்கள் சகல நஷ்ட ஈடுகளும் வழங்கப்பட்டு குறிப்பிட்ட காலத்துள் மீள் குடியேற்றப்பட வேண்டும் என ஏன் அமைச்சர் ரிசாதினாலும் அவரது கட்சியாலும் புதிய ஜனாதிபதியுடன் ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனது என நாம் கேட்கிறோம். அதே போல் அவரின் கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பொதுதேர்தலில் போட்டியிட ஒப்பந்தம் செய்த போது ஏன் இது விடயத்தை ஒப்பந்தம் செய்யாமல் மறக்குமளவு வட மாகாண முஸ்லிம்கள் இவர்களுக்கு மறந்து விட்டதா? அல்லது அம்மக்களை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்களா?

ஆகவே, இனியும் வட மாகாண முஸ்லிம்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதை தவிர்க்குமுகமாகவும் அவர்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும்  சகல முஸ்லிம் கட்சிகளைக்கொண்ட நடவடிக்கை சபை ஒன்றை பிரதமரும் ஜனாதிபதியும் இணைந்து ஏற்படுத்த வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

3 comments:

  1. Yes. This reasonable question. But i can say about the fact. If there is no Muslim refugees in the north, minister bathiuddin can not continue his politics. He expects the muslim refugees's issues will not solved quickly.

    ReplyDelete
  2. உண்மைகள் உறங்குவது இல்லை. நன்றி

    ReplyDelete
  3. Muslim friends are most welcome to Jaffna.

    ReplyDelete

Powered by Blogger.