முஹர்ரம் மாதத்தை, அடையும் ஒரு முஸ்லிம்..!
-அபூ உமர் அன்வாரி BAமதனீ-
அல்லாஹ் தனது அடியார்கள் மீது கொண்டுள்ள அன்பு கருணை ஆகியவைகளை அளவிடவே முடியாது.தனது அடியார்களை மண்ணித்து அவர்கள் வெற்றியாளர்களாக மாற வேண்டும் என்பதற்காக.அதிகமான சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏற்டுத்தியுள்ளான்.ஒருவர் ஒரு நன்மையை செய்ய நாடினால் அவருக்கு நாடியதற்காக ஒரு நன்மையை எழுதுகின்றான்.அவ்வாறே அதை செய்யும் போது ஒன்றுக்கு பத்தாக அதிகப்படுத்தி கொடுக்கின்றான்.ஒருபாவத்தை ஒருவர் செய்யும் போது ஒருபாவத்தை எழுதுகின்றான்.இவ்வாறு மிகவும் விசாலமான தனது தாராளத்தன்மையை அல்லாஹ் கொண்டுள்ளான். இதை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். 6:160. மேலும் அல்லாஹ் குறிப்பிடும் போது. “இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான். 7:156
அனைத்துக்கும் சொந்தக்காரனாகிய அல்லாஹ் காலங்களில் சிலதை மிகவும் கண்ணியமிக்கதாக ஆக்கியுள்ளான்.இதன் முக்கிய அம்சம் தனது அடியார்கள் நன்மை அடைவது ஆகும்.இதில முஹ்ர்ரம் மாதம் ஒன்று ,இதை அல்லாஹ் -ஷஹ்ருல்லாஹில் முஹர்ரம்- என தன் பால் இதை இணைத்துள்ளான்.பொதுவாக அனைத்தும் அல்லாஹ்வுக்கு சொந்தம் இதன் கண்ணியம்,அந்தஸ்து ஆகிவற்றை பிரத்தியேகப்படுத்துமுகமாக இதை தன் பால் இணைத்துள்ளான் என்பது நோக்க வேண்டிய ஒரு அம்சம்.
இம்மாதம் சங்கை பொறுந்திய நான்கு மாதங்களில் ஒன்று.இஸ்லாமிய வருடத்தின் ஆரம்ப மாதம்.இதில் அநியாயம் இழைப்பது,போர் தொடங்குவது போன்றன தடுக்கப்பட்டவைகளாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும். (நூல் புகாரி, எண்: 3197, அறிவிப்பாளர் அபூ பக்ரா (ரலி) அவர்கள்).
மேலும் நபிகளார் காட்டிய வழிமுறைப்படி வணக்கங்களால் அல்லாஹ்வை நெருங்குவது ஒரு முக்கிய அம்சம்.இதில் ஒன்பதாம் பத்தாம் நாட்களில் நோன்பு வைப்பது முக்கியமான ஒரு நபிவழி அதை பற்றிய சில விடயங்கள்.இதைப்பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷுரா (முஹர்ரம் 10ம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, '(ஆஷுராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! அதைவிட்டுவிட விரும்புகிறவர் அதைவிட்டு விடட்டும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல் புகாரி, எண் 1592.,அறிவிப்பாளர் ஆயிஷா(ரலி) அவர்கள்).
மதீனாவில் நோன்பு வைத்த நபிகளார் மக்களையும் அவ்வாறு நோன்பு வைக்குமாறு ஏவியுள்ளார்கள் என்பதும் யூதர்கள் இந்நாளில் நோன்பு வைப்பதற்கான காரணத்தையும் கேட்டுள்ளார்கள்என்பதும் நோக்க வேண்டிய விடயங்களாகும்.இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிப்படும் போது . நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது யூதர்கள் (முஹர்ரம் 10-ஆம் நாளான) ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்களிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டபோது அவர்கள், 'இந்த நாள் தான் ஃபீர்அவ்னுக்கெதிராக மூஸா(அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். எனவே, நாங்கள் மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்" என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கும்) உத்தரவிட்டார்கள். (நூல்: புகாரி எண் 3943). முடியுமாக இருப்பின் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் முகமாக ஒன்பதாம் நாளும் பத்தாம் நாளும் அல்லது பத்தாம் நாளும் பதினோராம் நாளும் நோன்பு வைப்பது மிகவும் ஏற்றமானது. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.(நூல் முஸ்லிம்,எண் 2088).
இந்த மாதத்தில் நோன்பு நோற்பது மிகச்சிறப்பானது.இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும். (இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல்-முஸ்லிம், எண்2157). மேலும் சென்றவருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாகும்.முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பு வைப்பதானது சென்றவருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாகும் என நான் எண்ணுகிறேன்.என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல் ஸஹீஹுல் அல்ஜாமிஃ, எண் 3853)
இரக்கமிக்க அரசனாகிய அல்லாஹ் வழங்கிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை பயன்படுத்தி அவனின் அன்பையும் அன்பளிப்புகளையும் பெற்றவர்களாக மாற அவன் துணைபுரிய வேண்டும்.
Post a Comment