முஸ்லிம் பிரதிநிதிகள் தயாரா..?
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் அமைப்பில் இலங்கை தொடர்பாக நிறைவேறிய தீர்மானம் குறித்து இலங்கை பாராளுமன்றம் விவாதிக்கின்றது, LLRC முன்மொழிவுகள், தற்பொழுது முன் மொழியப்பட்டுள்ள உள்ளக பொறிமுறை என பல்வேறு அம்சங்கள் குறித்து ஆளும் மற்றும் எதிர் தரப்புக்கள், தமிழ் தலைமைகள் காரசாரமாக விவாதிக்கவுள்ளன.
எத்தகைய தயார் நிலையில், எவ்வாறான ஆவணங்களுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் விவாதத்தில் கலந்து கொள்ளப் போகின்றார்கள் என்பதனை முஸ்லிம் சமூகம் ஆவலாக எதிர் பார்த்திருக்கிறது.
மேற்படி விவாதத்தை அவதானிக்க ஐ நா அதிகாரிகள் பார்வையாளர்களாக பாரளுமன்றம் வரவுள்ளனர்.
முஸ்லிம் சமூகம் சார்பான காத்திரமான நிலைப்பாடுகளை ஆவணங்களுடன் முன்வைப்பதனை வைத்துவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஏனைய எதிர்த்தரப்பு சிங்களத் தலைமைகளுக்கும் அதிகப் பிரசங்கித்தனமான காட்டமான புத்திமதிகளை சொல்லி முஸ்லிம் சமூகத்தின் எச்சசொச்ச கௌரவத்தையும் கப்பலேற்றும் கைங்கரியத்தை எவரும் செய்ய மாட்டார்கள் என நம்புகின்றோம்.
சர்வதேச மற்றும் உள்ளக பொறிமுறையில் முஸ்லிம்களது விவகாரம் முறையாக உள்வாங்கப்படல் வேண்டும்.
வட கிழக்கு வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 கைச்சாத்திடப்பட்டது முதல் 2009 யுத்தம் நிறைவுறும் வரையும் குறிப்பாக 2002 மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் கைச்சத்தப் படுகின்ற வரையும் பாரிய உயிர் உடமை காணி இழப்புக்களை சந்தித்ததோடு ஒட்டு மொத்த வடபுல முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டனர், வட கிழக்கு எங்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வடபுல முஸ்லிம்களின் காணிகள் விடுதலைப் புலிகளால் தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் முஸ்லிம்களது பூர்வீக் காணிகள் வன பாதுகாப்பு அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன, மறிச்சிக்கட்டி வில்பத்து விவகாரம் இதற்கு சிறந்த உதாரணமாகும். கிழக்கில் புல்மோட்டை முதல் பொத்துவில், தீகவாபிய வரை முஸ்லிம்களது காணிகள் பறிக்கப்பட்டுள்ளன.
மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மூன்று தசாப்தகாலமாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களது விவகாரங்களை ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிந்து நிவாரணம் வழங்குகின்ற தேசிய மற்றும் சர்வதேச கடப்பாடுகளையுடைய ஆணைக்குழு ஒன்றை 1987-2009 வரையிலான காலப்பகுதியை மையப்படுத்தி அமைக்க தவறியுள்ளன.
அவ்வாறான ஒரு ஆணைக்குழுவை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினதும், ஜனாதிபதிகளினதும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த தனித்துவ முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இன்று வரை கோரி நிற்கவுமில்லை, போராட்ட அரசியலை சூதாட்ட அரசியலாக மாற்றி ஈற்றில் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற சரணாகதி அரசியலாக மாற்றிவிடும் கையாளாகா அரசியலையே பலரும் செய்து வருகின்றனர்.
உள்ளக மற்றும் சர்வதேச பொறிமுறை ஒன்றின் கீழ் உருவாக்கப்படும், உண்மை கண்டறியும் ஆணைக்குழு, சட்ட உதவி வழங்கும் ஆணையம், கருணை மன்று, அவற்றின் கீழ் வரும் சகல உப குழுக்களிலும்l உரிய முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.
சர்வதேச தீர்மானங்களை வரவேற்று அறிக்கைகள் விட்ட பின்னர் வெறும் கையுடன் பேச்சுவார்த்தைகளில் காலத்தை கடத்தாது உரிய நிபுனர் குழுக்களை அமைத்து முஸ்லிம் விவகாரங்களை தரவுகளுடன் ஆவணப்படுத்தி முறையாக சர்வதேச மற்றும் உள்ளக பொறிமுறையின் கவனத்திற்கு கொண்டுவருவதனை முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் பதிக்கப்பட்ட வடகிழக்கு முஸ்லிம்களது விவகாரங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை வென்றெடுக்க அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ள முஸ்லிம் அரசியல் வாதிகள் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறான ஒரு ஆணைக்குழுவினை அரசுடன் உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் பெற்றுத்தர தவறின் வடகிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் நவம்பர் மாதமளவில் ஒருநாள் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதன் மூலம் அரசின்மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க சிவில் சமூகதலைமைகள் முன்வருதல் வேண்டும்!
Please SHARE
Post a Comment