Header Ads



சவூதியிலிருந்து வந்த பணத்தை, உறவினரிடமிருந்து கொள்ளையடிக்க முயன்ற பெண் கைது (படங்கள்)

தனது சித்தப்பாவை (தாயின் சகோதரியின் கணவனை) கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில்செய்துவரும் தனது சகோதரி அனுப்பிய பணத்தை வங்கியிலிருந்து எடுத்து, அட்டன் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, குறித்த பெண், அந்நபரை கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதோடு, அவரிடம் இருந்த பணத்தையும் கொள்ளையிடப்பட்டுள்ளார்.

உடலை முழுமையாக மூடும் வகையிலான கறுப்பு நிற ஆடை ஒன்றை அணிந்துவந்த நபரே பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக வெலிஓயா மேல்பிரிவைச் சேர்ந்த காயமடைந்த நபரின் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து விரைவாக செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபரை மடக்கிப் பிடித்த போது அவர் 31 வயதுடைய யுவதி என தெரிய வந்ததுடன், காயமடைந்த நபரின் மனைவியின் சகோதரியுடைய மகள் என தெரியவந்துள்ளது.

இதன்போது, கொள்ளையிட்ட பணத்தையும் அவரிடமிருந்து மீட்டுள்ளனர்.

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த நபர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான யுவதியிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துகொண்டிருந்த வேளையில், அவர் பொலிஸ் நிலையத்தில் அமைதியின்மையை தோற்றுவித்ததோடு, பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் 6 மாத காலம் வீட்டுப் பணிப்பெண்ணான சவூதி அரேபியாவில் தொழில்செய்துள்ளதோடு, சுகவீனம் காரணமாக கடந்த வருடம் நாடு திரும்பியுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த யுவதி, மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தான் அதிகளவான கடன்சுமைக்கு முகங்கொடுத்திருப்பதால் இந்த பணத்தை கொள்ளையிட திட்டமிட்டதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.

தாங்கள் அடகு வைத்திருக்கும் அதிகளவான நகைகளை மீட்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இந்த பணத்தை வங்கியிலிருந்து எடுத்ததாக காயமடைந்த நபரின் மனைவி கூறியுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவரும் அட்டன் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(பட உதவி - க.கிஷாந்தன்)


No comments

Powered by Blogger.