Header Ads



"நியூட்டனின் விதி"

-ஏ.எல்.நிப்றாஸ்-

(தமிழர்களின் கேள்விக்கான முஸ்லிம்களின் நியாயங்கள் பற்றிய கட்டுரை)
ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான எதிர்ச்செயல் உள்ளது. ஒன்றின்மீது பிரயோகிக்கப்படும் ஒவ்வொரு புறவிசைக்கும், அதற்குச் சமமானதும் எதிர்த் திசையில் நிகழ்வதுமான எதிர்விசை ஒன்று இருக்கவே செய்யும் என்று சேர் ஐசாக் நியூட்டன் சொன்னார். நியூட்டனின் 3ஆம் இயக்க விதி என்று அறிவியலாளர்கள் இதனை குறிப்பிடுகின்றனர். 

தமிழர்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் அதிக அழுத்தம் கொடுத்தபோது தமிழர்கள் கொதித்தெழுந்தது, விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான பரஸ்பர மோதுகைகள், தமிழ் ஆயுதக் குழுக்களின் கட்டுங்கடங்கா தன்மையை கண்டு முஸ்லிம்கள் ஆவேசமுற்றது, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்த எதிர்விளைவுகள் என எல்லாமே நியூட்டனின் விதி வேலை செய்வதற்கான சில அத்தாட்சிகளாகும். அவ்வாறு அவ்விதி செயற்படும் இன்னுமொரு புதிய களச்சூழலை இப்போது அவதானிக்க முடிகின்றது. 

அதாவது, தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவது கிட்டத்தட்ட நிச்சயமாகியுள்ள நிலையில் யுத்த காலத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட இழப்புக்கள், மனித உரிமை மீறல்கள், ஆயுதக் குழுக்களின் வன்கொடுமைகள் பற்றியும் விசாரிக்க வேண்டுமென்ற குரல்கள் மேலெழுந்து வருகின்றன. இப்பின்னணியில், 'இவ்வளவு காலமாக முஸ்லிம்கள் எதுவும் செய்யாது இருந்துவிட்டு, நாங்கள் இத்தனை சிரமப்பட்டு பெற்றுக் கொண்ட விசாரணைக்கான வாய்ப்பில் நீங்கள் பங்கு கேட்பது மாத்திரம் எவ்வகையில் நியாயம்' என்று தமிழ் சகோதரர்களின் மனதில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. 'ஜெனிவாவும் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்களும்' என்ற கட்டுரைக்கான பின்னூட்டலாக சில தமிழ் நண்பர்கள் இதை என்னிடம் கேட்டே விட்டனர். 

இந்த நாட்டில் வாழ்கின்ற இரண்டாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் கடந்த முப்பது வருடங்களில் பட்ட சொல்லொண்ணா துயரங்களை தமிழர்கள் நன்கு அறிவார்கள். இந்த சம்பவங்கள் எல்லாம் முஸ்லிம்களின் வாழ்வில் எந்தளவுக்கு தாக்கம் செலுத்தியிருக்கின்றது என்பதும் அவர்களுக்கு தெரியாத விடயமல்ல. 

 அதாவது, 1915 இல் முதலாவது சிங்கள – முஸ்லிம் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டார்கள். அதன் பிறகு 1956 இல் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்கள சட்டத்தின் பின்னரான அதிர்வுகளால் பாதிக்கப்பட்டனர். தென்மாகாணத்தில் ஒரு முஸ்லிம் கிராமத்தை மையமாக வைத்து 1970களின் நடுப்பகுதியில் இடம்பெற்ற கலவரத்தால் இழப்புக்களை சந்தித்தனர். 1983 ஜூலைக் கலவரம் மற்றும் அதன் தொடர்சங்கிலியான நிகழ்வுகள் முஸ்லிம்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிற்பாடு 2012ஆம் ஆண்டு தொடங்கி 2014 இல் உச்ச நிலை அடைந்து, இன்று வரையும் நீண்டு கொண்டிருக்கின்ற இனவாதிகளின் காட்டுமிராண்டித்தனம் எவ்வளவு அழிவுகளை உண்டு பண்ணியிருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். 

இவர்கள் எல்லோரும் மேற்சொன்ன பிரச்சினைகளை, இழப்புக்களுக்கான ஈடேற்றங்களை, அநியாயம் இழைக்கப்பட்டதற்கான நீதி விசாரணையை கோருவதற்கு என்ன காத்திரமான நடவடிக்கையை எடுத்திருக்கின்றார்கள்? என்ற கேள்வியை தமிழர்களோ அல்லது வேறு யாருமோ நம்மிடம் கேட்க வேண்டியதில்லை. மாறாக, முஸ்லிம் மக்களும் அவர்களது தலைவர்களும் தமக்குள்ளேயே சுய விசாரணை செய்ய வேண்டிய கேள்வியே இது. 

ஒரு இனக் குழுமம் இன்னுமொரு இனக் குழுமத்தை பின்தள்ளிவிட்டு, உந்தி மேற்கிளம்பிச் செல்ல வெளிக்கிட்டாலும்... நியூட்டனின் விதி வேலை செய்யத் தொடங்கும். அதை தலைவிதி என்பீர்கள்.  வேறொன்றுமில்லை. 

1 comment:

Powered by Blogger.