Header Ads



பேஸ்புக்கில் உலாவரும், பிரதான கொலை சந்தேக நபர் (படங்கள்)

அநுரதபுரத்தைச் சேர்ந்த கராத்தே வீரரை மனிதாபினமற்ற முறையில் அடித்து துன்புறுத்தி கொலை செய்ததோடு, மேலும் இருவரை மிக மோசமாக தாக்கி காயப்படுத்தி, விடுதிக்கும் சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர், இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இரோன் ரணசிங்க (26) மற்றும் அவரது தம்பி அசித ரணசிங்கவின் (24) கடவுச்சீட்டை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு இன்று (29) அநுராதபுர பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமாகிய உமேஷ் சானக முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளித்த அநுராதபுர பொலிஸ் மத்தியநிலைய, வழக்கு செயற்பாட்டுப் பிரிவு, இவ்வழக்கு தொடர்பில் தேடப்படும் பிரதான சந்தேகநபர்கள் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற கோப்ரல் மற்றும் அவரது தம்பி ஆகியோர் தலைமறைவாகி இருப்பதாகவும், வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் இரகசியமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தது.

இதனை அடுத்தே, அவர்களது கடவுச்சீட்டை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளதோடு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை விமானநிலையங்களின் கட்டுப்பாட்டாளர்களுக்கு இதனை அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

ஆயினும் இரோன் ரணசிங்க எனும் பெயரில் உள்ள பேஸ்புக் கணக்கில் குறித்த பிரதான சந்தேகநபரான இராணுவ கோப்ரல் தமது இடுகைகளை இட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.