Header Ads



அட்டாளைச்சேனை பிரதேச சபையினர், நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணை

– முன்ஸிப் –

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பணியாற்றுகின்ற சில நபர்கள், மேலதிகாரிகளின் அனுமதியின்றி நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், தனக்கு உத்தரவிட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாத் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த விசாரசணை தொடர்பில், அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தன்னைப் பணித்துள்ளதாகவும், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பணியாற்றும் பதில் செயலாளரும், நிதி உதவியாளரும் பிரதேச சபைச் சட்டத்துக்கு முரணான வகையில் செயற்படுகின்றமை தொடர்பில், ஊடகங்களில் சில நாட்களுக்கு முன்னர் செய்தியொன்று வெளியாகியிருந்தது.

இதனையடுத்து, மேற்படி இரண்டு நபர்களும், அட்டாளைச்சேனை பிரதேச சபையிலுள்ள சிலரை துணைக்கு அழைத்துக் கொண்டு, நேற்று வியாழக்கிழமை பிரதேச சபைக் கட்டிடத்துக்கு முன்பாக, சுலோகங்களைத் தூக்கிக்கிக் கொண்டு,  ஊடகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இவ் ஆர்ப்பாட்டம் குறித்து அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாத்திடம் வினவியபோதே, அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

“பிரதேச சபையில் கடமை புரிவோர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதாக அறியக் கிடைத்தது. ஆனால், இவ்வாறான நடவடிக்கையொன்றில் ஈடுபடுவதற்கான அனுமதி எவையும் எம்மிடம் பெறப்படவில்லை. மேலதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், பிரதேச சபையில் கடமையாற்றுவோர் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது.

எனவே, இவ் விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணையொன்றினை நடத்துமாறு, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எனக்கு உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, குறித்த விசாரணையின் அறிக்கையினையும் தனக்கு வழங்குமாறு அவர் கேட்டுள்ளார். இதற்கிணங்க, மேற்படி ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணையொன்றினை நான் நடத்தவுள்ளேன்” என்றார்.

No comments

Powered by Blogger.