அட்டாளைச்சேனையில் தொழிற்பயிற்சி நிலையத்தை, மீள திறப்பதற்கு நடவடிக்கை
(ஏ.எல்.நிப்றாஸ்)
இளைஞர், யுவதிகளின் நலன் கருதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் தொழிற்பயிற்சி நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு நிந்தவூரில் உள்ள மாவட்ட அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்குப் பொருத்தமான கட்டிட வசதி கிடைக்கப் பெற்றதும் பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் 1998ஆம் ஆண்டு கிராமிய தொழிற்பயிற்சி நிலையம் திறக்கப்;பட்டது. ஆரம்பத்தில் வெற்றிகரமான ஒரு பயிற்சி நிலையமாக இது இயங்கிய போதிலும் காலப்போக்கில் மாணவர்கள் கற்கைகளுக்கு இணைந்து கொள்வது குறைவடைந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி 2009ஆம் ஆண்டில் இந்த பயிற்சிநிலையம் மூடப்பட்டது.
தற்போது தொழிற்பயிற்சி நிலையமொன்றை கொண்டிராத பிரதேசங்களுள் அட்டாளைச்சேனை முக்கியமானதாகும். இது மிகப் பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கிய பிரதேசம் என்பதாலும் பல சிறிய கிராமங்கள் அப் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ளமையாலும் அங்கு தொழிற்பயிற்சி நிலையத்தை மீள திறக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இருப்பினும் முன்னைய இடத்தில்; அல்லாமல் போக்குவரத்து வசதி மற்றும் சனப் புழக்கமுள்ள ஒரு இடத்தில் பயிற்சி நிலையம் அமைவது சிறந்தது என கருதப்படுகின்றது. எனவேதான் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் மற்றுமுள்ள அயற் கிராமங்களின் இளைஞர், யுவதிகள் இலகுவாக வந்து பயிற்சி பெறக் கூடிய இடத்தில் உள்ள கட்டிடம் ஒன்றை மாவட்ட அலுவலகம் தேடிக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர்களினால் இரு கட்டிடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு கட்டிடம் அல்லது பொருத்தமான வேறொரு இடம் கிடைக்குமிடத்து இப் பிரதேசத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்க உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
Post a Comment