முன்னாள் அமைச்சர்களை, கைதுசெய்ய உத்தரவு
மகிந்த தரப்பினர் ஐ.நா. தீர்மானம் தொடர்பில் தெளிவாகத் தெரியாமல் நாட்டு மக்களைக் குழப்ப முற்படுகின்றனர், முற்று முழுதாக இலங்கையின் தேசிய விசாரணையே நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தி்ல் இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
உண்மையில் மகிந்த தரப்பினர் என்ன செய்வது என்று தெரியாமல் அரசியலில் வங்குரோத்து நிலையடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் எதைப் பேசுவது என்று தெரியாமலேயே பேசுகின்றார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக முழுமையாக தெரியாமல் இவர்கள் பேசுகின்றார்கள். நாட்டு மக்களை குழப்பவே இவ்வாறு இவர்கள் பேசுகின்றார்கள்.
ஆனால் இலங்கையின் உள்நாட்டு தேசிய விசாரணையே நடைபெறவுள்ளது. இதனால் மக்கள் குழப்பமடைய வேண்டிய தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, "முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை இன்னமும் அரசிடம் கையளிக்கவில்லை. இவ்வாறு வாகனங்களைக் கையளிக்காதவர்களைக் கைதுசெய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது" - என்று இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment