டக்ளஸ், கருணா போன்றவர்களும் கைது செய்யப்பட வேண்டும் - சுமந்திரன்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆயுதக்குழுக்களை சார்ந்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் முதலாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பல ஆயுதக் குழுக்கள் குற்றங்கள் புரிந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கே.என்.டக்லஸ் தேவானந்தா மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிள்ளையான் மற்றும் கருணா போன்றவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவர்களுக்கு எதிரான நடவடிக்கையினை அரசாங்கம் இன்னும் எடுக்கவில்லை.
எப்போது அரசாங்கம் இவர்களுக்கு எதிரான நடவடிக்கையினை எடுக்கும் என்ற கேள்வி இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நேற்று முன்தினம் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆகையினால், ஆயுதக்குழுக்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.
நேரடியாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்பதே எமது கோரிக்கை.
ஆயுதக்குழுக்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் விசாரணை செய்யப்பட வேண்டும். அத்துடன், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment