ஜனாதிபதியும், பிரதமரும் சம்பிக்கவுக்கு வழங்கியுள்ள பொறுப்பு
போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தை காப்பாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
போரின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் இலங்கை இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய கலப்பு விசாரணைப் பொறிமுறையை உருவாக்க ஐ.நா அழுத்தம் கொடுத்தாலும் இன்னும் அது எவ்வாறான பொறிமுறையாக இருக்க வேண்டும், யாரை உள்ளடக்குவது என்ற தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.
அரசாங்கம் இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. இறுதிப் போரில் மோசமான மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை என்பதே உண்மையாகும்.
எனினும் ஒருசில சந்தர்ப்பங்களில் ஏதேனும் நடந்திருந்தால் என்ற தர்க்கத்துக்கு அமையவே சிறிலங்கா அரசாங்கம் இந்த விசாரணைகளை மேற்கொள்கிறது.
அதேபோல் எமது இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் எமது இராணுவத்தை நியாயப்படுத்த வேண்டும். இந்த பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளில் தத்தமது தரப்பை நியாயப்படுத்த ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றனர். எனினும் இராணுவத்தை பாதுகாக்கவும் இராணுவத்தை நியாயப்படுத்தவும் நாம் மட்டுமே உள்ளோம்.
ஆகவே எமது தரப்பை பலப்படுத்த வேண்டியது எமது கடமையாகும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
அந்த வகையில் போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இராணுவ தரப்பிற்கான சட்ட உதவிகளை வழங்கவும், அதற்கான செலவுகள் அனைத்தையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளது.
அதேபோல் எமது சட்ட வல்லுனர்களை இந்த செயற்பாடுகளுக்கு பயன்படுத்தவும் தயாராக உள்ளோம். ஆகவே இந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் இராணுவ தரப்பினர் எந்த சந்தர்ப்பத்திலும் எம்மை நாட முடியும்.
ஜெனிவாவில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பிற்கு தெளிவூட்டும் பொறுப்பை சிறிலங்கா அதிபரும் பிரதமரும் எனக்கு கொடுத்துள்ளனர்.
அதற்கமைய நான் இராணுவ அதிகாரிகளுடனும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடனும் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.
இந்த விடயங்களை சமாளித்து எமது இராணுவத்தை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
மேலும் இப்போது எதிர்கொள்ளும் சிக்கல் போர்க்குற்றம் அல்ல. அதையும் தாண்டி நாட்டில் நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் பலப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
உமது கூற்றுப்படி இலங்கை இராணுவம் எந்த போர்க்குற்றமும் புரிய வில்லை என்கின்றீர் பொது மக்களை கொன்றது கற்பழித்துக் கொலைசெய்தது சரணடைந்தவர்களை கொண்றது எல்லாம் பொய் என்றா சொல்கின்றீர் நீர் படித்த என் ஜினியர் படிப்பு என்னவாயிற்று
ReplyDelete