முஸ்லிம் அரசியல்வாதிகளின் "பொறுப்புக்கூறல்"
- ஏ.எல்.நிப்றாஸ்-
பொறுப்புக்கூறல் பற்றிய பயம் இருந்தால் மட்டுமே பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். யாரேனும் பொறுப்புக்களை ஒழுங்காக நிறைவேற்றியிருந்தால் பொறுப்புக்கூறல் மிக இலகுவானதாக இருக்கும். ஆனால் பொறுப்புக்கூறல் பற்றிய பயம் இல்லாத காரணத்தினாலேயே சமூகம் சார்ந்த பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் அக்கறையற்ற பேர்வழிகளாக முஸ்லிம் அரசியல்வாதிகள் இருக்கின்றனர் என்றால் அது பொய்யில்லை.
முஸ்லிம் சமூகம் பதவி, பட்டங்களுக்கான போராட்டத்தை தவிர வேறு எதற்காகவும் அண்மைக்காலத்தில் போராடியதாக ஞாபகம் இல்லை. முன்னொரு காலத்தில் தொப்பிக்காக, துருக்கித்தொப்பி போராட்டத்தை முன்னெடுத்த ஒரு சமூகம் பின்வந்த காலத்தில் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட போதும், நிலங்கள் அபகரிக்கப்பட்டபோதும், சொந்த இடத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட போதும், பள்ளிவாசலுக்குள் கொன்று குவிக்கப்பட்ட போதும் குரலெழுப்பி பேசக்கூட திராணியற்று இருந்தது என்றால் அது முஸ்லிம் சமூகமே.
நமது சமூகத்தில் உண்மையான போராட்ட குணம் கொண்டவர்கள், அரசியல் விடுதலைக்காக உயிரை பணயம் வைத்தவர்கள் இருக்கின்றார்கள்தான். ஆனால் அவர்கள் எல்லோரும் இன்று எவ்வித அதிகாரமும் அற்றவர்களாக புறமொதுக்கப்பட்டு ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கின்றனர். தங்களை போராளிகள் என்று அவர்கள் எக்காலத்திலும் அடையாளப்படுத்தி பெருமைப்பட்டுக் கொள்வதில்லை. ஆனால் சமூக விடுதலை வேட்கை என்றால் என்னவென்று தெரியாத அரசியல்வாதிகளே தமது சொந்த நிகழ்ச்சி நிரலை போராட்டம் என்று சொல்லி மக்களை திரும்பத்திரும்ப ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். தமது பொறுப்புக்களை நிறைவேற்றாது விடுவதற்கு அதனை பராக்குக்காட்டுகின்றனர் என்பதே நிதர்சனம். இவர்கள் தமது பொறுப்புக்களை தட்டிக்களிப்பது மட்டுமன்றி அதற்கான பொறுப்புக்கூறலையும் மேற்கொள்ளாதிருக்கின்றனர்.
ஆனால் அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளுக்காகவும், தேசியப் பட்டியலுக்காகவும், அதிசொகுசு வாகனங்களுக்காகவும், இரகசிய பணக் கொடுக்கல் வாங்கல்களுக்காகவும், உயிர்ப்பயத்திற்காகவும் தமது பிள்ளைகள், சகோதரர்கள் குடும்பத்தினரை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகவும் தம்முடைய அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டவர்களை எவ்வாறு போராளிகள் என்று சொல்ல முடியாதோ அதுபோலவே, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் தேனிலவு கொண்டாடிக் கொண்டிருந்தோர், பள்ளிவாசல் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கொழும்புக்கு ஓடியவர்கள், முஸ்லிம்கள் இனவழிப்பு செய்யப்பட்ட நேரத்தில் இனந்தெரியா நபர்களின் தலையில் பாரத்தை போட்டுவிட்டு பராமுகமாக இருந்தவர்கள், இனவாதம் தலைவிரித்தாடிய போது மஹிந்தவின் சால்வையே சரணமென கிடந்தவர்கள், மக்கள் எல்லோரும் மைத்திரியை ஆதரிக்கும் முடிவை எடுத்த பிறகும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் வரைக்கும் மதில்மேல் பூனையாக இருந்தவர்கள் என்ற வகுதிக்குள் வருகின்ற எந்த முஸ்லிம் அரசியல்வாதிக்கும் பொறுப்புள்ளவர்கள் என்ற மதிப்பெண் போட முடியாது. தம்முடைய பொறுப்புக்களை நிறைவேற்றாமல் விட்டதற்கு,
.
இலங்கையில் தமிழர்களே அதிக இழப்புக்களை சந்தித்திருக்கின்றனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்கள்தான் சர்வதேச விசாரணை ஒன்றை கோரியவர்கள் என்ற அடிப்படையில் அதன் பலன் அவர்களுக்கு கிடைத்தே ஆக வேண்டும். ஆனால் மறுபுறத்தில் இருக்கின்ற யதார்த்தங்களை தமிழ் சகோதரர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்களவர்களும் முஸ்லிம்களும் கூட கணிசமான இழப்புக்களை சந்தித்திருக்கின்றார்கள் என்பதையும் அதற்காகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நியாயபூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
முஸ்லிம் அரசியல் கட்சிகளிடமே ஜனாதிபதி ஆலோசனைகளை கோரியிருக்கின்றார் என்பதற்காக, இது தனியே முஸ்லிம் கட்சித் தலைவர்களிற்கு மட்டுமே உரித்தான பொறுப்பல்ல. மாறாக, தேசிய கட்சிகளுக்குள் நேரடியாக சங்கமமாகி இருக்கின்ற ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள், ஓய்வுநிலை அரசியல்வாதிகள், முன்னாள் அரசியல்வாதிகள், ஜம் இய்யத்துல் உலமா மற்றும் சமூக அமைப்புக்கள் எல்லோரும் தமது ஆலோசனைகள், கருத்துக்களை முஸ்லிம் கட்சிகள் ஊடாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது.
அந்த வகையில், 1990ஆம் ஆண்டு வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை முக்கியமானது. சில மணிநேர அவகாசத்தில் உடுத்த உடையோடு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் கணிசமானோர் இன்னும் தமது சொந்த மண்ணுக்கு திரும்பவில்லை. இதற்கு முன்னர் ஒருசமயம் அகதிகள் மீள் குடியேற்றப்பட்ட போது சர்வதேச அமைப்புக்கள் பழைய அகதிகள், புதிய அகதிகள் என்ற எழுதப்படாத விதி ஒன்றை கடைப்பிடித்ததாக கூறப்பட்டது. அதன்படி இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெயர்ந்த அகதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதில் தவறில்லை. ஏனென்றால் அந்த மீளகுடியேற்ற திட்டத்தின் நோக்கம் அதுவாக இருந்தது. ஆயினும், அதற்கு முன்னர் இடம்பெயர்ந்த யாழ் முஸ்லிம்கள் போன்ற மக்களை மீள் குடியேற்ற கோர வேண்டும்.
அதேவேளை, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி மற்றும் அதன் அண்டிய பிரதேச முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை, அழிஞ்சிப்பொத்தானை இனப்படுகொலை, அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் வயல்களிலும் பொது இடங்களிலும் காவுகொள்ளப்பட்ட உயிர்கள், குருக்கள்மடத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்டமை, பொத்துவில் படுகொலைகள், ஊறுகாமம் படுகொலை, அக்போபுர படுகொலை போன்றவற்றின் இழப்புகள், மீறல்கள் அக்குவேறு ஆணிவேறாக பட்டியலிடப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் இறுதிக்கட்ட யுத்தத்தின் தொடக்கத்தில் மூதூரில் முஸ்லிம்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டமையும் அகதிகளாக வெளியேற்றப்பட்டமையும் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
இவ்வாறான ஆவணங்களையும் ஆலோசனைகளையும் அரசாங்கத்திடம் சமர்ப்பித்தால் மாத்திரமே முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக சமகாலத்தில் விசாரணை நடாத்தப்பட்டு நீதி கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. முஸ்லிம் சமூகத்தை மூலதனமாக வைத்து அரசியல் செய்கின்ற எல்லா கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இப்பணியைச் செய்ய வேண்டிய தார்மீக கடமையிருக்கின்றது. அதனைச் செய்யாமல் விட்டுவிட்டு, மேடையில் வீராப்பு பேசுவதும் எல்லாம் கைமீறிப் போன பிற்பாடு நீலிக்கண்ணீர் வடிப்பதும் உண்மையான பொறுப்புக்கூறலாக அமையாது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த சமூகத்திற்கு கொஞ்சமேனும் நன்றியுடையவர்களாக இருந்து, அவர்கள்தம் பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், பொறுப்புக்கூறல் பற்றிய இக்கட்டுரை தேவைப்பட்டிருக்காது.
Post a Comment