Header Ads



வடக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு, அவர்களை புறக்கணிப்பது நல்லிணக்கம் அல்ல - ரவூப் ஹக்கீம்

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு வெள்ளிக்கிழமை (30)  முற்பகல் கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம். 
 
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதற்கு இந்த வட்ட மேசைக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதி அங்கிருந்து முழு முஸ்லிம் சமூகத்தினரும் விடுதலை புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட எல்லா மக்களினதும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு பற்றி பேசப்படுகின்ற இக்காலகட்டத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் கடந்த 25 ஆண்டு காலப்பகுதியில் அனுபவித்து வரும் துன்ப துயரங்களைப்பற்றியும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவை இன்றியமையாதது. 

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி எல்லா தீமைகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டதாக அநேகர்; ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், நல்லவை இன்னும் ஆரம்பமாக வேண்டி இருக்கின்றது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கொள்கை வகுப்பானவர்களான எங்களை பொறுத்தவரை காலம் விரயமாகி விட்டது. கடந்த அரசாங்கத்தின் இழுத்தடிப்பும், ஈடுபாடின்மையும் எமது இடம்பெயர்ந்த மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. 

உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களின் அவல நிலையை நன்கறிந்தவர்களும் உணர்ந்தவர்களும் இந்த கூட்டத்துள் அநேகர் உள்ளனர்.  இங்கு வந்திருக்கும் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் அனுபவிக்கும் துயரங்களையும், அவர்களுக்கு தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் தடைகளையும் தங்களுக்குள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இங்கு வருகை தந்துள்ள வளவாலர்கள், அமைச்சர்கள் மற்றும் இராஜ தந்திரிகள் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இந்நிகழ்வை ஆங்கிலத்தில் நடாத்துவதே சால பொருத்தமானது என்பதால் தமிழில் இதனை நடாத்துவதற்கு இயலவில்லை. வட்ட மேசை கலந்துரையாடலாக இதனை ஏற்பாடு செய்திருந்தாலும், இதைத் தொடர்ந்து பதவியேற்றுள்ள புதிய அரசாங்கம், ஜெனிவா பிரேரணையின் பின்னரான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக வடகிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைத்த சமூகங்களையும் சேர்ந்த எல்லா அகதிகளும் தங்களது பூர்வீக இடங்களில் மீண்டும் சென்று குடியேறுவதற்கான ஒரு நிதித்திரட்டல் மாநாடொன்றை நடாத்துவதற்காக தயாராகி வருகின்றது. 

வட மாகாணத்தின் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள்; மீள் குடியேற்றத்துக்கான தாகத்தினால் 25 ஆண்டுகள் தவித்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் கண்ட பயன் ஒன்றுமில்லை. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். வறுமையால் வாடுகின்றார்கள். மறக்கப்பட்ட மக்களாக ஆகிவிட்டார்கள். யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அடையாளமில்லாத மக்களாக அவர்கள் கருதப்படம் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.  வடகிலிருந்து 60000க்கும் மேற்பட்ட மக்கள் வீடற்றவர்களாகவும், உடமைகளை பரிகொடுத்தவர்களாகவும் வெளியேற்றப்பட்ட பொழுது, அதனை விடுதலை புலிகளின் தத்துவ ஆசிரியரான எண்டன் பாலசிங்கம் பின்னர் பெருந்தவறு எனக் குறிப்பிட்டதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அவர் குறிப்பிட்டது ஒரு போர்க்குற்றம் என்பதில் சந்தேகமில்லை. 

இலங்கை தேசம் இப்பொழுது ஒரு புதிய யதார்த்தத்தை நோக்கி விழித்தெழுந்து விட்டது. இது யுத்தத்தின் பின்னரான மீள் எழுச்சியின் வெளிப்பாட்டை காட்டி நிற்கின்றது. அது ஒரு தவறை செப்பனிடுவதாகவும், புண்ணை ஆற்றும் முயற்சியாகவும், சிதைந்து போன சமூகத்தை மீண்டும் செம்மைப்படுத்துவதாகவும் உள்ளது.  வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை அவர்கள் தமது முன்னைய பூர்வீக வதிவிடங்களுக்கு மீளச் செல்வது பல சிக்கல்களை தோற்றுவித்துதான் இருக்கிறது. அவர்கள் திரும்பச் செல்வதில் தயக்கமும், தாமதமும் காட்டுவதற்கு உரிய காரணங்கள் உள்ளன. அவர்கள் ஒட்டுமொத்தமாக 1990 ஒக்டோபரில் விடுதலை புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள். ஒலிபெருக்கி மூலம் வெளியேறுமாறு விடுதலை புலிகளால் அறிவிக்கப்பட்டது. அதனை மீறுபவர்களுக்கு மரணம்தான் பரிசு என்று தெரிவிக்கப்பட்டது.  மணிநேரங்களுக்குள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டது. 

அங்கிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து தமது சொந்த நாட்டிலேயே புதிய பரம்பரையொன்றும் அகதிகள் என்ற அந்தஸ்த்தில் வளர்ந்து வந்தது. யுத்தத்தின் முடிவு அவனுக்கு விடிவை கொண்டுவரவில்லை. வடங்கில் பூர்வீக வதிவிடங்களுக்கு திரும்பிச் சென்ற சிலர் அங்கு தமக்குச் சொந்தமான இடங்களில் வேறு மக்கள் குடியமர்ந்து வாழ்வதை கண்டார்கள். அவர்களில் அங்கு வந்து சேர்ந்த அகதிகளாகவே காணப்பட்டார்கள். 

இந்த சூழ்நிலையில் வீடற்ற, அடிப்படை வசதிகள் அற்ற நிலைமையில் வளரும் குழந்தைகளின் கதி என்ன? பிறப்புச் சான்றிதழ்கள் அவர்களை அகதிகளாக அடையாளப் படுத்துகின்றன. அவர்கள் தங்களது சொந்த மக்களாலேயே அநீதிக்குள்ளாகின்றார்கள்.  இடம்பெயர்ந்து மீளச்செல்லும் மக்கள் பலவிதமான பாரதூரமான நெருக்குதல்களுக்கு உள்ளாகின்றார்கள். கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்ற வற்றில் அவர்கள் நெருக்கடிகளை சந்திக்கின்றார்கள்.  அவர்கள் மனித உரிமை பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். மீண்டு செல்வதற்கான உரிமை மறுக்கப்படுவதற்கான நிலைமைக்குள்ளாகின்றார்கள். அவர்கள் தஞ்சம் அடைந்த இடத்திலோ, சொந்த பிறப்பிடத்திலோ உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக அல்லலுறுகிறார்கள். இவை எல்லாம் பாராதூரமான மனித அவலங்கள்.! 

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பல்வேறு தொழில் துறைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களது புறநகர் கிராம வாழ்விடங்களில் அவர்கள் விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஈடுபட்டு இருந்தார்கள். முஸ்லிம்களது காணிகள் அவர்கள் நடாத்திய பண்ணைகள் வேறு நபர்களால் கையக படுத்தப்பட்டிருந்தன. இதனை விடுதலைப்புலிகள் செயல்பாட்டாளர்களும், அவர்களது அனுதாபிகளும் கையாண்டதாக கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு அறிக்கை குறிப்பிட்டிருந்தது.  யாழ்ப்பாண மக்கள் முஸ்லிம்களின் மீள் வருகையை வரவேற்பதாக இல்லை என்றும் அதில் காணப்பட்டது. அதன்படி தனியொரு சமூதாயத்துக்குரிய இடமாக அதன் மாறியிருந்தது. திரும்பிச்சென்ற முஸ்லிம்களிடம் அங்கிருந்த அவர்களது அயல்வாசிகள் 'ஏன் நீங்கள் திரும்பி வந்தீர்கள்?' என்று கேட்டார்கள் என அந்த அறிக்கை கூறுகின்றது. அந்த அறிக்கை வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் சாட்சியங்களை தொகுத்து வழங்கியிருக்கின்றது. அரசாங்கம் முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி செல்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும்அதில் குறிப்பிட்டிருக்கிறது. 

இப்பொழுது திரும்பிச் செல்வதா அல்லது முன்னர் சென்று குடியேறிய இடத்தில் வாழ்க்கையை தொடருவதா என்ற சிக்கலான நிலைமைக்கு இடம்பெயர்ந்த முஸ்லிம் சமூகம் ஆளாகியிருக்கின்றது. வதிவிட உதவி, பொருளாதார வசதி என்பதை ஏற்படுத்தி கொடுப்பது முறையான அரச கொள்கையினால் அன்றி சாத்தியமாகும் சூழ்நிலை இல்லை. இந்த எரியும் பிரச்சினை அதனை மையப்படுத்துகிறது. 
யுத்தம் முடிந்து 6ஆண்டுகள் ஆகிவிட்டன. புண்கள் சீழ் கட்டி இருப்பதால் ஆறும் நிலை தென்படவில்லை. இது உயர்வாழும் ஒரு இனத்தின் அவலக்குரலாக ஒலிக்கின்றது. இதனை ஒரு கவிஞர் கவிதையாக்கியிருக்கின்றார். 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் யுத்தம் முடிந்த பின்னர் யாழ்ப்பாணத்தில்; மீள் குடியேற விரும்பினால் இன்று 600க்கும் குறைந்த குடும்பங்களே யாழ்நகரில் மீள்குடியேறியுள்ளன. நான் யாழ்ப்பாணத்தை மட்டும்தான் இங்கு சுட்டி காட்டியிருக்கின்றேன். சமூகபொருளாதார காரணிகளும் ஏனைய இடையூறுகளும் அவர்களுக்கு உள்ளன. 

உலகம் அசைந்து செல்கிறது. வடக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு, அவர்களை புறக்கணிப்பது அல்ல. நல்லிணக்கம் முக்கியமானது. வார்ப்புகளால் பாலங்களை அமைப்பதைவிட உள்ளங்கள் இணைவினால் அமைக்கப்படும் பாலம் உறுதியானது. உண்மையும் நீதியும், மன்னிப்பும் நல்லிணக்க நடைமுறைக்கு இன்றியமையாதவை.  நேற்று ஜனாதிபதி ஒரு சர்வசமய மாநாட்டை கூட்டியிருக்கிறார். அதனூடாக ஜெனீவா பிரேரணையின் அடிப்படையில் ஒரு கருணை மன்றத்தின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார். 

2 comments:

  1. வட மாகான இடம் பெயர்ந்த மக்கள் சம்பந்தமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு ஒரு நல்ல ஆரம்பம். இத்துடன் நின்று விடாமல் மிகவும் உத்வேகத்துடன் தற்போதைய அரசியல் சூழ்னிலையை பயன்படுத்தி இந்த மக்களின் பிரச்சினைக்கு நிவாரணம் பெற்றுக்கொள்ள வேண்டும். மிகவும் கடுமையான உழைப்பு தேவை. இதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டு இதன் பணிகள் மிகவும் அர்பணிப்புடன் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும். முடிந்தால் வெளிநாட்டின் உதவியையும் பெற்றுக் கொள்ள முடியும் ஆனால் சுனாமி வீட்டுத்திட்டம் போல் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். தயவு செய்து இந்த விடயத்தை வைத்து அரசியல் இலாபம் பெற முயற்சிக்க வேண்டாம் என ரிசாத் அவர்களையும் ஹக்கீம் அவர்களையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete
  2. கடந்த இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் வடமாகான முஸ்லிம்கள் பாசிச புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு தற்போது அகதி அந்தஸ்தோடு வாழும் சகோதர முஸ்லிம்களை நாட்டில் சமாதான் என்று oஒன்று உருவாகி இருக்கும் இச்சந்தர்ப்பத்திலும் தனது சொந்த பூமியில் குடியேற விடக்கூடாது என்ற நோக்கோடு இரவு பகலாக சிந்திக்கும் மற்றுமொரு இனமான தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்லும் சில அரசியல்வாதிகள் இன்னும் அவர்களிடத்தில் இருக்கும் இன வெறியை தன் உள்ளத்தில் இருந்து களையவில்லை என்பதுமட்டும் உண்மை.

    வடக்கில் சிங்கள மக்களும் குடியேறக்கூடாது முஸ்லிம்களும் குடியேறக்கூடாது என்று கூறும் இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டியுள்ளது.கணிசமான அளவு ஏனைய இரண்டு இனமும் குடியேறினால் நம்முடைய எதிர்கால இலச்சியத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று இவர்கள் சிந்திக்கிறார்கள்.

    இங்கு நாம் பல விடயங்களை கவனிக்க வேண்டியுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ மற்றும் முன்னாள் பதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போன்றோர் கூறுகின்றார்கள் புலிகள் முழுமையாக அழிக்கப்படவில்லை அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிநாடுகளில் நடக்கிறது ஆகவே புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பது அவர்களின் கருத்து.

    அதே போன்று அமரிக்காவின் கருத்தும் அதுவாகவே உள்ளது.அண்மையில் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு வந்தகையோடு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா அவர்கள் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் புலிகள் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை அவர்களின் தாக்கம் இன்னும் வெளிநாடுகளில் உள்ளது என்றார்.

    இதுவல்லாம் இவ்வாறு இருக்க நம்மவர்கள் வடக்கில் குடியேறும் விடயங்கள் பற்றி மட்டும் பேசுவதில் பல விடயங்களை சிந்திக்க வேண்டும். அங்கு குடியேற வேண்டும் அதில் மாற்றுக்கருத்து இல்லாவிட்டாலும்,எதிர்காலத்தில் எதோ ஒருவகையில் வடக்கில் மீண்டும் ஒரு பிரச்சினை உருவாகினால் அங்குள்ளவர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்.அதுவல்லாம் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.அதிகமான தமிழ் மக்களின் உள்ளத்தில் தமிழ் ஈழம்தான் முடிவு என்ற கோரிக்கையில் இருப்பது நன்றாக தெரிகின்றது..அவ்வாறான பிரச்சினை எதிர்காலத்தில் வருமாக இருந்தால் வெளியேறுங்கள் என்று சொல்லுவதும் சந்தேகம்தான் ஏன் நாங்கள் முன்கூட்டியே உங்களை வரவேண்டாம் என்று சொன்னோம் ஏன் வந்தீர்கள் என்றுகூட சொல்லலாம்.
    யுத்தம் முடிந்து விட்டது என்று சொல்லும் அரசும் சந்தேகப்படுகின்றது என்றால் ஏன் நாம் சந்தேகிக்க கூடாது? அகவே குடியேறும் முஸ்லிம்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட உறுதியளிக்கப்பட வேண்டும்.பெரும்பான்மையின மக்களும் தங்களின் இடங்களுக்கு குடியமர்த்தப்பட வேண்டும் அப்போதுதான் முஸ்லிம்களின் பாதுகாப்பை நம்பிக்கையோடு எடுத்துச்செல்ல வழிகிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.