"நான் கட்சி மாறவில்லை"
- UL -
‘முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை முக்கியஸ்தரான பத்தாஹ் ஆசிரியர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து விட்டார்’ என்று, ஊடகங்களில் வெளியான செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென்று, செய்தியோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஏ.எல்.ஏ. பத்தாஹ் தெரிவித்தார்.
‘அட்டாளைச்சேனையை முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் நம்ப வைத்து ஏமாற்றி விட்டது’ எனும் தலைப்பில், இன்று புதன்கிழமை ஊடகங்களில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.
குறித்த செய்தியில், ஐ.தே.கட்சி சார்பாக கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த யூ.கே. ஆதம்லெப்பை (லொயிட்ஸ்) என்பவர், முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தரான பத்தாஹ் ஆசிரியர், ஐ.தே.கட்சியில் இணைந்து கொண்டதாகத் தெரிவித்திருந்தார்.
இவ் விடயம் தொடர்பிலேயே, ஆசிரியர் பத்தாஹ் தனது மறுப்பினைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
‘அட்டாளைச்சேனையை முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் நம்ப வைத்து ஏமாற்றி விட்டது’ எனும் செய்தியொன்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியில் என்னைப் பற்றி யூ.கே. ஆதம்லெப்பை தெரிவித்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவையாகும்.
யூ.கே. ஆதம்லெப்பை என்பவர் எனது ஊரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர், எனக்கு உறவு முறையானவர். நேற்று செவ்வாய்கிழமை காலை, என்னைச் சந்திக்க வேண்டுமென்று கூறி, தொலைபேசியில் கேட்டார். வீட்டுக்கு வருமாறு கூறினேன். சில நபர்களுடன் எனது வீட்டுக்கு வந்தார்.
வீட்டுக்கு வந்தவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அரசியல் பற்றியே அதிகம் பேசக் கிடைத்தது. ஒரு கட்டத்தில், ஐ.தே.கட்சியில் இணையுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவரின் கோரிக்கையினை நான் மிகவும் நாகரீகத்துடன் மறுத்து விட்டேன்.
நான் அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளன். தற்போது, சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம் அவர்களின் விடய ஆய்வு இணைப்பாளராகச் செயற்பட்டு வருகிறேன். இந்த நிலையில், முஸ்லிம் காங்கிசை விட்டும், வேறு கட்சியில் இணைவதற்கான எந்தவிதத் தேவையும் எனக்கு இல்லை.
இந்த நிலைப்பாட்டினை ஆதம்லெப்பையிடம் நான் மிகவும் தெளிவாகத் தெரிவித்திருந்தபோதும், பத்தாஹ் ஆசிரியர் ஐ.தே.கட்சியில் இணைந்து விட்டார் என்று, ஆதம்லெப்பை தனது பேஷ்புக் பக்கத்திலும், ஊடகங்களிலும் செய்திகளை வெளியிட்டிருந்தார்.
உண்மையில், நான் கட்சி மாறாத நிலையில், என்னைப் பற்றி இவ்வாறு ஆதம்லெப்பை தெரிவித்திருக்கும் பொய்யான செய்தி குறித்து நான் மிகவும் வருத்தமும், அதிர்ச்சியும் அடைகிறேன். நட்புடன் பழகும் என்னிடம் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க முடியாத ஆதம்லெப்பை, சமூகத்துக்கு எவ்வாறு உண்மையாக இருக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
இதேவேளை, ஊடகங்களையும் மேற்படி ஆதம்லெப்பை என்பவர் ஏமாற்றியிருக்கிறார்.
அட்டாளைச்சேனை பிரதேசம் என்பது மு.காங்கிரசின் கோட்டையாகும். இந்த ஊரில் இருந்து கொண்டு ஐ.தேசியக் கட்சியினூடாக மு.காங்கிரசுக்கு எதிராய் அரசியல் செய்வதற்கு ஆதம்லெப்பை முயற்சித்து வருகிறார். ஆனால், அது ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை. கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்ட ஆதம்லெப்பையைத் தோற்கடித்து, அட்டாளைச்சேனை மக்கள் அவருக்கு நல்லதொரு பாடத்தை புகட்டியுமுள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில், அட்டாளைச்சேனையிலுள்ள முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்கள், ஐ.தே.கட்சியோடு இணைந்து விட்டதாக பொய்ச் செய்திகளைப் பரப்புவதன் மூலம், முஸ்லிம் காங்கிரசை இந்தப் பிரதேசத்தில் சரித்து விடலாம் என்று ஆதம்லெப்பை கனவு காணுகின்றார். அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை.
எனது வீட்டுக்கு வந்த ஆதம்லெப்பை, விடைபெறும்போது புகைப்படம் ஒன்று எடுத்துக்கொள்வோம் என்று நட்புடன் வேண்டினார். நாகரீகம் கருதி சம்மதித்தேன். அந்தப் புகைப்படத்தை வைத்துக் கொண்டுதான், நான் கட்சி மாறி விட்டதாக ஆதம்லெப்பை பிரசாரம் செய்து வருகின்றார்.
மேற்படி ஆதம்லெப்பை, இவ்வாறான பொய்ச் செய்தியைப் பரப்புவதன் மூலமாக அவர் யார் என்பதையும், அவருடைய பண்புகள் என்ன என்பதனையும் நிரூபித்து விட்டார்.
மழை நீர் பட்டு, கல் வெட்டுக்கள் அழிவதில்லை என்பார்கள். அதுபோல, ஆதம்லெப்பை போன்றவர்களின் பொய்யான செய்திகளால், முஸ்லிம் காங்கிரசை விட்டும் என்னைப் பிரித்து விட முடியாது’ என்றார்.
Post a Comment