வாதநோய் எவ்வாறு உருவாகிறது..?
உலக வாதநோய் தினம் நாளை (29ம் தேதி) கடைபிடிக்கப்படுகிறது. வாத நோயால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மூளை நரம்பியல் பேராசிரியர் டாக்டர் அலீம் கூறியதாவது,
வாத நோயால் ஆண்டு தோறும் 1.5 கோடிக்கு அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். 60 லட்சம் மக்கள் வாதநோயால் இறக்கின்றனர். 50 லட்சம் மக்கள் வாதநோயால் பாதிக்கப்பட்டு தனியாக இயங்க முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர். உலகில் வாதநோயால் 5 பெண்களில் ஒருவரும், 6 ஆண்களில் ஒருவரும் வாழ்நாளில் பாதிக்கப்படுகின்றனர். 2 வினாடிக்கு ஒருவர் இந்த நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். 6 வினாடிக்கு ஒருவர் இந்த நோயால் இறக்கின்றனர்.
மூளையில் ரத்த குழாயில் அடைப்பு அல்லது தெரிவு ஏற்பட்டு பாதிக்கப்படுவார்கள். இந்த வாத நோயின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு அக்டோபர் 29ம் தேதி உலக வாத நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.வாத நோயை எப்படி உணரலாம்: ஒருவருக்கு திடீரென உடலில் முகம், கை, கால்கள் செயலிழப்பு அல்லது பேசுவதில் திறன் குறைவு, பார்வை திடீரென குறைந்து போகுதல், திடீர் மயக்கம், திடீர் தள்ளாட்டம், தாங்க முடியாத தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இதை உணர்வது போல் இருந்தால் உடனடியாக 104ஐ தொடர்பு கொண்டு தகுந்த மருத்துவ சிகிச்சைக்கான வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொள்ளுதல், அல்லது 108ஐ தொடர்பு கொண்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.
வாத நோய் ஏற்படுவதற்காக காரணம்: அதிக ரத்த அழுத்தம் (பிபி), புகை பிடித்தல், புகையிலை உபயோகம், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாகுதல், அதிக உடல் எடை, சர்க்கரை நோய், இதய நோய், மது பழக்கம் மற்றும் உடற் பயிற்சி இல்லாத சோம்பேறி வழக்கமுறையாகும்.தடுக்கும் வழிமுறைகள்: ரத்த அழுத்தம் இருந்தால் தகுந்த சிகிச்சை மூலம் மருந்து உட்கொள்ளுதல், சர்க்கரையை தகுந்த சிகிச்சை மூலம் கட்டுக்குள் வைத்து கொள்வது, கொழுப்பின் அளவை குறைப்பது, பீடி, சிகரெட், குட்கா மது போன்றவை உபயோகிக்காமல் இருப்பது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது, தகுந்த உடற்பயிற்சியை மேற்கொள்வது ஆகியவற்றினால் வாத நோயை தடுக்க முடியும். உணவு பழக்கத்தில் உப்பின் அளவு 5 கிராம் அளவிற்கு குறைவாக உபயோகப்படுத்த வேண்டும். ஊறுகாய், பப்படங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பழம், காய்கறிகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். வாத நோய் குறித்த அறிகுறிகளை தெரிந்து கொள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்ஆர்ஐ, அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் உள்ளது. மேலும் வாத நோய் ஏற்படின் அனைத்து மருத்துவமனைகளிலும் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம்.
Post a Comment