Header Ads



உள்ளூராட்சி தேர்தலின் பின், தேசிய அரசாங்கத்தில் முறிவு..?

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கத்திற்கான இணக்கப்பாடுகளில் முறிவு ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் ஆரூடம் கூறியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிடுகின்றமையே இந்த நிலைமை உருவாகுவதற்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றியடைவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கவுள்ளார்.

எப்படியிருப்பினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்கு கட்சிகள் பல, மாற்று கூட்டணியாக தேர்தலில் முகம் கொடுக்க ஆயத்தமாகின்ற நிலையில் அவர்கள் எதிர்கட்சியின் பொது முன்னணியாக தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

மாற்று கூட்டணியில் தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய சிறிய கட்சிகள் இணையவுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த நாட்டு அரசியல் முறைமைக்கமைய தேர்தல் மேடைகளில் கூறப்படும் கருத்துகள் காரணமாக தேசிய அரசாங்கத்தில் முறிவு ஏற்படும் ஆபத்துக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் லஞ்ச ஊழல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கடந்த கால அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தவுள்ளமையும் இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாகியுள்ளன.

இந்த நிலைமையினுள் உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் ஒரு கட்சி அரசாங்கம் உருவாகுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்கள் கொண்ட கட்சியாக செயற்படும்.

தேசிய அரசாங்கத்தில் முறிவு ஏற்பட்டாலும், சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு குறைந்த அளவிலான போக்குகளே காணப்படுவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.