"தமிழ் அரசியல் கைதிகள் பற்றி முழு கவனத்தையும், கரிசணையினையும் கொண்டிருக்கிறோம்"
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
அரசாங்கத்தினால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித கால தாமதமும் இன்றி உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை தொடக்கியிருக்கின்றார்கள். இதுவிடயமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தன்னுடய முழுமையான கவனத்தையும் கரிசணையினையும் கொண்டிருக்கின்றது. ஒரு தேசத்தில் அரசியல் நோக்கங்களுக்காக அகிம்சை ரீதியாக, அறிவு ரீதியாக, ஆயுத ரீதியாக போராட்டங்கள் இடம்பெறுகின்றபோது அங்கே குறித்த தேசத்தின் அரசினால் கைதுசெய்யப்படுகின்ற குறித்த கிளர்ச்சியாளர்கள் அரசியல் கைதிகள் என அழைக்கப்படுவார்கள்.
எமது நாட்டிலும் கடந்த 30 வருடங்களாக தமிழ் ஈழக்கோரிக்கையினை முன்வைத்து பல ஆயுதக் குழுக்கள் ஆயுதமேந்திப் போராடியிருக்கின்றன. வன்முறையான வழிமுறைகளின் மூலம் மக்களின் உரிமைகளை வென்றடுக்க முடியாது என்பது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடிப்படை நிலைப்பாடாகும். இதனடிப்படையில் கடந்த கால வன்முறைப் போராட்டங்களை நாம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம். இருப்பினும் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் மக்கள் மத்தியில் சமாதானமும் சகவாழ்வும் கட்டியெழுப்பப்படவேண்டும். கடந்த மஹிந்த அரசாங்கத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 12000 போராளிகள் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது வரவேற்கத்தக்க ஒரு விடயம்.
போரின் ஆரம்ப காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களோடு தொடர்புடைய சந்தேக நபர்கள் என ஒரு தொகுதி கைதிகள் மிக நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் ஒரு சிலர் 20வருடங்களையும் தாண்டி இவ்வாறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள், பலர் உரிய விசாரணைகள் எதுவுமின்றியும், இன்னும் சிலர் சாட்சியங்கள் இன்றியும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது எமது நாட்டின் நீதி வழங்கும் வழிமுறைக்கு முரணானது. எமது நாட்டில் கடந்த காலங்களில் இவ்வாறு வன்முறைகளில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் என பல நூறுபேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இப்போது யுத்தம் நிறைவடைந்திருக்கின்றது, நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஜெனீவா மனித உரிமை ஆணையகத்தில் நம்பிக்கை தரக்கூடிய பிரேரணை முன்மொழியப்பட்டு அது இலங்கையின் இனமுரண்பாட்டைத் தவிர்ப்பதற்கான பொறிமுறையாக முன்வைக்கப்படவிருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் சுமார் 270ற்கும் அதிகமானவர்கள் அரசியல் கைதிகள் என்ற போர்வையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற ஒரு நடவடிக்கை என்றே எமக்குத் தோன்றுகின்றது. அண்மையில் விடுதலை செய்யப்பட்ட திருமதி சர்மா அவர்கள் 16 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் நீதிமன்றினால் கடந்த வாரம் நிரபராதி என்று தெரிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார், அவர் 16 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர் நிரபராதி என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது, ஆனால் அவரது 16வருட சிறைவாழ்வு அவரின் இயல்பான வாழ்வை சின்னாபின்னபடுத்தியிருக்கின்றது, இதற்கு யார் பதில் சொல்வது. இவ்வாறு குற்றங்களோடு தொடர்பில்லாத பலரும் குறித்த அரசியல் கைதிகளுள் இருக்கின்றார்கள்.
அதே நேரம் யுத்தத்தில் நேரடியாகப் பங்கு கொண்டு யுத்தத்தை தலைமை தாங்கி நடத்திய பலர் எத்தகைய விசாசாரனைகளும் இன்றி மிகவும் சுதந்திரமாக நடமாடுவதுடன் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக, மாகண சபை அங்கத்தவர்களாகக் கூட இருந்ததை நாம் அவதானித்தோம்.
மேலும் சந்தேகத்தின் பேரில் சிறைக் கைதிகளாக இருப்பவர்கள் சரியான முறையில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கியிருந்தால் கூட இவ்வளவு காலம் அவர்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
எனவே ஜனாதிபதி அவர்கள் இதுவிடயத்தில் உடனடியாகத் தலையிட்டு இவ்வரசியல் கைதிகளின் மனிதாபிமானக் கோரிக்கையினை கவனத்தில் எடுத்து அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்ககைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ந.தே.மு வேண்டுகோள் விடுக்கின்றது.
Post a Comment