ஜமாஅத்தே இஸ்லாமியின் மாநாட்டில், நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்..!
2015 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றின் மூலம் ஒரு ஆட்சி மாற்றம் நடைபெற்றிருக்கும் வேளையில்;... சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயர் மீண்டும் உறுதிசெய்யப்பட்டிருக்கும் தருணத்தில்.... இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடருவதற்கும் நல்லாட்சியொன்றின் மூலம் மக்கள் எதிர்பார்த்த உன்னத நோக்கங்கள் நிறைவேறுவதற்கும் இன, மத, கட்சி பேதங்களை மறந்து அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
அத்தகைய ஒன்றிணைகின்ற கூட்டு வாழ்க்கையின் பண்புகள் பற்றியே 2015இன் வருடாந்த தேசிய அங்கத்தவர் மாநாடு கலந்துரையாடுகிறது என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தெரிவித்தார்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 63வது வருடாந்த தேசிய அங்கத்தவர் மாநாடு இன்று (31.10.2015) காலை 8.30 இரவு 8.30 மணி வரை முதல் கண்டி, பொல்கொல்லை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், ஜமாஅத்தே இஸ்லாமியின் பகுதிகள் மற்றும் துணை அமைப்புகளின் கடந்த வருட செயற்பாடுகள் குறித்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்தோடு, வெளிநாட்டுப் பிரமுகர் சொற்பொழிவு, கூட்டு வாழ்க்கையை விருத்தி செய்யும் வகையிலான நிகழ்ச்சிகள் மற்றும் பிரமுகர் அமர்வு, கலை, சலாசார நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றன. இந்நிகழ்வில், மாநாட்டுப் பிரகடனம் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1. இனப் பிரச்சினை விடயத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் அகன்ற இடைவெளிகளைக் குறைத்து பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதோடு மூவினங்களும் புரிந்துணர்வோடு வாழும் சூழலை உருவாக்க அனைத்து தரப்பினரும் அர்ப்பணத்தோடும் விட்டுக் கொடுப்புகளுடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும்
2. புதிய அரசிடம் மக்கள் எதிர்பார்க்கும் தகவல் அறியும் சட்ட மூலம் மத நிந்தனைக் கெதிரான சட்ட மூலம் என்பவற்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதை துரிதப் படுத்தல் வேண்டும் எனவும்
3. பொலிஸ் குற்றத்தடுப்புப் பகுதியின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் மற்றும் கவலைக்கிடமான அண்மைய நிகழ்வுகள் பலவும் தருகின்ற தகவல்களின் பிரகாரம் நாட்டில் குற்றச் செயல்கள் பெருமளவில் அதிகரித்துச் செல்கின்றன. சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைகள், கொலை, கொள்ளைகள், தற்கொலைகள், போதைவஸ்துப் பாவனைகள், விபத்துக்கள், மரணங்கள் என இவற்றின் பட்டியல் நீண்டு செல்கின்றன. இவற்றிற்கான காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்திக்கவும் ஒரு தூய இலங்கையைக் கட்டியnழுப்புவுதற்கான திட்டங்களை வகுத்து ஒருங்கிணைத்து செயல்படவும் அரசாங்கம் உட்பட சகல சமூகங்கள், சமூக நல அமைப்புகளும் ஆவன செய்ய வேண்டும் எனவும்
4. இஸ்லாம் அமைதியையும் சுபீட்சத்தையும் நிலைநாட்ட வந்த மார்க்கம். இது மனித நேயம் மற்றும் அன்பு சகோதரத்துவம் என்பவற்றின் அடிப்படையிலும், நல்லிணக்கம் கூட்டுறவு ஆகியவற்றின் அடிபப்படையிலும் மனித சமூகத்தை கட்டமைக்க விரும்புகிறது. எனினும் உலகளாவிய முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு, மற்றும் யுத்தம் போன்ற கெடுபிடிகளின் எதிர் விளைவுகளாக பல்வேறு வன்முறைக்குழுக்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன. அந்த வன்முறைக் குழுக்களை நிராகரிக்கும் அதேவேளை முஸ்லிம் நாடுகளின் உள்விவகாரங்களில் வல்லரசுகள் தலையிடாமல் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க வேண்டும் எனவும்
5. இஸ்ரேலின் அடாவடித்தனங்கள் குத்ஸிலும் பலஸ்தீனிலும் மீண்டும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இதனை மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன் அந்தப் புனித பூமியில் போராடுகின்ற தியாகிகளுக்கு அல்லாஹ் உலகிலும் மறுமையிலும் அதி உயர்ந்த நற்பேறுகளை வழங்க வேண்டும் என நாம் பிரார்திப்பதோடு அனைவரும் பிரார்த்திக்குமாறும்
6. முஸ்லிம் சமூகம் பல்வேறு இயக்கங்களாகவும், கட்சிகளாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதே நேரம் ஒவ்வெரு கட்சியும் அமைப்பும் தனக்கெனத் தனியான வேலைத் திட்டங்களையும் கொண்டிருக்கின்றன. இதனால் இவ்வமைப்புகள் தாம் வாழும் சமூகத்தையும் நாட்டையும் பலபோது மறந்துவிடுகின்றன. இந்நிலை தொடராதிருக்கும் வகையில் நாட்டுக்கும் சமூகத்திற்கும் பயன்படுத்துகின்ற ஒரு பொது வேலைத்திட்டத்தின் அவசியத்தை சமூகத்தின் அனைத்து தரப்பினரும் உணர்ந்து அதன்பால் கவனம் செலுத்தி செயல்பட முன்வர வேண்டும் எனவும்
7. இஸ்லாத்தின் சிறப்பியல்பான நடுநிலைத் தன்மையின் அடிப்படையிலேயே முஸ்லிம் சமூகம் வழிநடத்தப்பட வேண்டும் என்றவகையில் ஆன்மீக மற்றும் அரசியல் தலைமைகளுக்கு பாரியதொரு பொறுப்பு இருப்பதனை சுட்டிக்காட்டி அன்பு, சகோதரத்துவம், கலந்தாலோசனை, கட்டுப்பாடு, ஆக்கபூர்வ விமர்சனம் ஆகிய கூட்டு வாழ்க்கையின் பண்புகளை அனைத்து மட்டங்களிலும் மேலோங்கச் செய்;வதற்கு அவர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் எனவும் மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
தேசிய மாநாட்டின் ஒர் அங்கமாக நடைபெற்ற பிரமுகர் அமர்வில் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஆகியோரும் மற்றும் பல ஊர்ப் பிரமுகர்களும் பங்கேற்றனர். அமைச்சர்களான ரஊப் ஹகீம், றிஷாத் பதியுத்தீன், அப்துல் ஹலீம் ஆகியோர் தவிர்க்க முடியாத காரணங்களால் மாநாட்டில் பங்கேற்க கிடைக்காமைக்கு வருந்துவதாக தெரிவித்ததோடு மாநாடு பற்றிய அவர்களது கருத்துக்களையும் வாழ்த்துச் செய்திகளையும் கடிதம் மூலமாகவும் வட்ஸ்அப் மூலமாகவும் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment