Header Ads



எவ்வளவு பெரிய விசயங்கள செய்யிற அரசாங்கம், எனது மகள் பற்றி எதுவும் சொல்லல்ல

1996ம் ஆண்டு 10மாதம் 10ம் திகதி ஜோர்தான் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற ஜெயராணி என்ற பெண் இன்னும் வீடு திரும்பாத சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்ப்படுத்தியுள்ளது. 19 வருடங்களில் 7 கடிதங்கள் மாத்திரமே உறவினர்களுக்கு கிடைத்துள்ளமையானது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.  மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடியில் இருக்ககூடிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக ஜோர்தான் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றவர் குறித்து, அரசாங்கமும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், இதுவரையில் எவ்வித முடிவுகளும் எடுக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணின் தாய் கறுவல் செல்லத்தங்கம் இது தொடர்பாக கூறுகையில்,

கடந்த 1996.10.10ஆந் திகதி ஒட்டமாவடியைச் சேர்ந்த சப் ஏஜன்ஸ் மூலம் கொழும்பு எயா போட்டிலிருந்து ஜோர்தான் நாட்டுக்கு வீட்டு பணிப்பெண் வேலைக்காக எனது மகளான செல்வி.கறுவல் ஜெயராணி (சசி) போனாள்.

இவரை கிரானைச் சேர்ந்த தங்கேஸ் எனும் பெண் ஊடாக ஓட்டமாவடியில் இருக்கும் இஸ்மாயில் எனும் சப் ஏஜன்ஸ் கொழும்புக்கு கூட்டிச் சென்று அவரே வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்தார்

எனது மகள் ஜெயராணி வெளிநாடு சென்று ஒரு மாதத்தின்பின் முதலாவது கடிதம் வந்தது. பின் சில நாட்களில் இன்னுமொரு கடிதம் வந்தது.

அதற்கு பிறகு கொஞ்ச நாளையால இரண்டு கடிதங்கள் ஒரே நேரத்தில் வந்தது. பிறகு ஏழு மாதமளவில் இரண்டு கடிதங்கள் ஒரே நேரத்தில் வந்தது.

அவ போய் ஏழு மாதத்தில் ஆறு கடிதங்கள் வந்தது.

அந்த ஆறு கடிதங்களிலும் பெரும்பாலும் ஒரே விசயங்களைத் தான் எழுதியிருந்தாள். அதில, சம்பளம் தாராங்கல்ல என்றும் நான் இங்க வந்து ஏழு மாதங்கள் ஆகித்து. ஆனால் வீட்டுக்காரர் சொல்லுறார், ஏழு மாதமில்ல நீ இங்க வந்தது ஆறு மாதம்தான்' என்று சொல்லுராங்க.

வீட்டுல என்னுடன் சேர்த்து நாலுபேர் இருக்கம், உடுப்பு எல்லாம் வாங்கி தந்திருக்காங்க என்ன நல்லா பார்க்கிறாங்க மோதிரம் ஒன்று வாங்கி தந்தவங்க. வீட்டுக்காரருக்கு ஒரு வயது பிள்ளை இருக்கு. என்றெல்லாம் எழுதியிருந்தாள்.

சம்பளம் பற்றி கேட்டேன் சம்பளத்தை தாராங்கல்ல. என்று எழுதியிருந்தா.

ஒருக்கா நாங்க அனுப்புன கடிதத்தில யூனியன் (கூப்பங்கட) நம்பர் அனுப்பினோம். அதற்கு ஆவ எழுதியிருந்தா 'அந்த நம்பர் பிழை என்டு வீட்டுக்காரர் சொல்லுறாங்க' என.

அதே நேரம் இங்க இருக்கிற தங்கேஸ் எனும் பெண்ணுக்கும் கடிதம் போட்டிருந்தவ அதில எழுதியிருந்தா என்ன வேற இடத்துக்கு மாத்துங்க சம்பளம் தாராங்கல்ல வீடு நல்லமில்ல என எழுதியிருந்தவ.

அதற்கு பிறகு சரி என நினைத்து, நாங்கள் கடிதம் போட்டால் அதற்கு பதில் வருவதில்லை.

பிறகு நாங்க ஒருவரின் உதவியுடன் கொழும்பிற்கு சென்று ஓட்டமாவடி சப்ஏஜன்ஸ் ஸ்மாயிலை சந்தித்தோம். பிறகு சப்ஏஜன்ஸ் ஸ்மாயில் எங்களையும் கூட்டிக் கொண்டு பெரிய (மெயின்) ஏஜன்சை சந்திக்கச் செய்தார்.

அவரிடம் நான் நடந்ததையெல்லாம் சொன்னேன். அதைக் கேட்ட அவர், அவருடைய டெலிபோன் இலக்கமாம் என்டு ஒரு இலக்கம் தந்து சொன்னார்,

நான் இன்னும் சில நாளையால ஜோர்தானுக்கு போக இருக்கன் போனவுடன் உங்கட மகளப்பற்றி விசாரிச்சி முடிவு சொல்லுவன்' என்றார்.

பிறகு நாங்க வீட்ட வந்து, ரெட்டு கிழமைக்கு பிறகு அந்த இலக்கத்துக்கு கோல் எடுத்தம். அவர் சொன்னார் 'நான் இப்ப போக இருக்கன் போய்து முடிவு சொல்லுறன்' என்றார்.

வெளிநாட்டு எஜமான் குடும்பம் அதுக்குப் பிறகு நாங்க அவருக்கு ரெண்டு கிழமைக்குப்பிறகு கோல் எடுத்தம். ஆந்த நம்பர் வேல செய்யல்ல பிறகு அடிக்கடி 2,3 மாதத்திற்குப்பிறகும் எடுத்தம் அந்த நம்பர் வேலைசெய்யல்ல.

பிறகு நாங்க ஏறாவூர் பொலிசுக்கு முறைப்பாடு செய்தோம். அதுக்குப்பிறகு மனித உரிமை ஆணைக்குழுவுக்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு கந்தோர் போன்ற பல இடங்களுக்கு அறிவிச்சோம். எல்லாம் செஞ்சிதாரம் எண்டு சொல்லுவாங்க கடைசியா எதுவும் நடந்ததில்ல.

அந்த காலத்தில சரியான கலவரம். நாட்டு பிரச்சனை காலம். இதையெல்லாம் பார்க்காம என் மகளப்பற்றி தகவல் அறியனும் என்டுதான் ஓடிச் திரிஞ்சன். இப்படி வருசக்கணக்கில ஓடியும் இன்றுவரை எனக்கு பலன் கிடைக்கல்ல.

எவ்வளவு பெரிய பெரிய விசயங்கள எல்லாய் செய்யிற அரசாங்கம் எனது மகள் பற்றி, அவள் இருக்காளா இல்லையா என்று எந்த முடிவும் சொல்லல்ல. என்ட மகள நான் எப்ப காணப்போறேனோ...?

என கண்ணீர் வடிய தாயார் செல்லத்தங்கம் தெரிவித்தார்.

1 comment:

  1. ஆட்சியாளரகளுக்கு இது சின்ன விடயமாக இருக்கலாம் ஆனால் இந்த அம்மாவுக்கு இது இந்த உலகத்தைவிட பெரிய விடயம்.

    ReplyDelete

Powered by Blogger.