"இஸ்லாமியமயமாக்கலுக்கு எதிரான உண்மை ஐரோப்பியர்" களின் எதிர்ப்பு
நெதர்லாந்து நாட்டில் அகதிகளுக்குப் புகலிடம் அளிக்கும் விவகாரம் குறித்த சர்ச்சை முற்றி வருகிறது.
அகதிகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த இரு ஆண்டுகளில் சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்ட அகதிகளை படிப்படியாக ஏற்க நெதர்லாந்து ஒப்புக் கொண்டது.
"ஐரோப்பிய, வட - தென் அமெரிக்க நாடுகளின் இஸ்லாமியமயமாக்கலுக்கு எதிரான உண்மை ஐரோப்பியர்கள்' (பெகிடா) என்ற அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் முதல் கட்டமாக 1,200 அகதிகள் நெதர்லாந்தின் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என அந்த நாட்டு சட்டத்துறை இணையமைச்சர் கிளாஸ் டிகூஃப் கடந்த வாரம் அறிவித்தார்.
ஏற்கெனவே திட்டமிட்டதைவிட இது இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெகிடா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"ஆரஞ்சே' என்ற கிராமத்தில் அமைச்சர் கிளாஸ் டிகூஃப் சென்ற காரைத் தடுப்பதற்காக அந்தக் கார் முன்பு பாய்ந்த பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே, "ஓர்டென்' என்ற ஊரில் அகதிகள் முகாம் மீது முகமூடி அணிந்த மர்ம நபர் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நிகழ்த்தினார்.
தாக்குதல் நிகழ்த்தப்பட்டபோது அந்த முகாமில் 51 குழந்தைகள் உள்பட சுமார் 150 அகதிகள் இருந்தனர்.
எனினும் அந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் மார்க் ரூட் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், "உட்ரெச்' நகரில் அகதிகளை அனுமதிப்பதற்கு எதிராக "பெகிடா' அமைப்பினரும், அகதிகளை வரவேற்று மற்றொரு குழுவினரும் ஞாயிற்றுக்கிழமை போட்டி ஊர்வலம் நடத்தினர்.
அப்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் 10 பேரைக் கைது செய்தனர்.
இதற்கிடையே, அகதிகள் முகாம்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நகரங்களின் மேயர்கள் சிலர், தங்களின் விருப்பத்திற்கு எதிராக அரசு அந்த முடிவை எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
Post a Comment