ஒரு நாளில், ஓர் அவலம்...!
அகதி எனும் பட்டம் பெற்று
கால் நூற்றாண்டு
கடந்து விட்டது
கனவு போல் கலைந்தும் விட்டது
உறையுளை விட்டு நீங்க
ஒரு நாள் அவகாசம்,
ஒப்பாரி வைத்து அழவும்
நேரமில்லை
ஒதுக்குப் புறமாய் இருக்க
உரிமையுமில்லை
அழக் கூடத் தெரியாத
அன்று பிறந்த பிள்ளை,
பிரசவ வலியில் தாய்,
பிரசவித்த தாய்,
குமரியான பெண்,
மரணத் தருவாயில் ஒரு முதியவள்,
இன்னும் பல...
என் மக்கள் அன்று
கால்களை நம்பவில்லை
கடலை நம்பினார்கள்.
காரணம்
கடத்தி விட்டவள் அவள்தான்
கண்ணீரும் கரைந்தது
கடலிலும் மழையிலும்.
படகுதான் அன்று என் மக்களின்
இரண்டாம் கருவறை
காரணம்
கணத்தவள் அவள்தான்
திசையறியா பயணம்
நடுநிசியிலும் கூட,
படகுக்கும் புத்தளத்திற்கும்
அவ்வளவு பாசம்
கரை தட்டியது அங்கேதான்
ஹிஜ்ரத்தின் செயல் வடிவம்
அன்றுதான் உணரப்பட்டது.
அன்சாரியீன்கள்
அழகானவர்கள்
அப்பாவிகள்
அனுசரிக்க அவர்களிடம்
பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
உண்ண உணவில்லை,
உடுத்த உடையில்லை,
உறங்க உறையுளில்லை,
ஆனால்
உணர்விழந்த உடலிருந்தது.
மன்னிக்கவும்,
உடல் மட்டும்தான் இருந்தது.
சமூகத்திற்கோர்
சங்கடமென்றால்
சகோதரத்துவம் சமிக்ஞை
காட்டுமென்பதில்
ஐயமில்லை
ஆனால்
அகதி எனும் முத்திரைதான்
இன்னுமே முள்ளாய்
குத்துகிறது,
அது
வலிகளின் செல்லப் பிள்ளை
வார்த்தைகளில் கேவலம்
கனவுகளில் கூட
கச்சிதமாய் வந்து
காறி உமிழ்கிறது.
துடைத்தெறியக் கூட
முடியவில்லை
அது கறைகளின் தாய்.
வடக்கில் பிறந்த
ஒவ்வொரு ஆண் மகனும்
மனதாலும் தைரியசாலிதான்
ஆம்,
வலிகளை எண்ணி
அடுத்தவன் முன்
அழுது கண்டதில்லை
இன்றுவரை
எனது தாயக்குலம்தான்
சாதனைப் பெண்கள்,
வேதனைகளும்
சோதனைகளும் வாட்டிய போதும்
போதனை போல புன்னகையோடு
வரவேற்று வாழ்க்கை
நடாத்தியவர்கள்.
எங்கள் வாழ்க்கை
வரலாற்றில் கறைபடிந்தவை,
இலங்கை எனும் புத்தகத்தில்
இரத்தங்களால் எழுதப்பட்டு
மறக்கடிக்கப்பட்ட பக்கங்கள் அவை
அரசியலில் இருந்து கொண்டு
அறிக்கை விடக்கூட
என் மக்கள் கணக்கிலில்லை,
இவர்கள் சமூகம் சமூகம்
என்று கூவும் நாடகம்
ஓட்டுகளென்னும் பிச்சைக்காக
மட்டும்தான்
வலிக்கவில்லை,
வலிகள் பழகி விட்டது,
பழக்கியும் விட்டார்கள்.
கருணையுள்ள இறைவன்
கூடவே இருக்கிறான்
அவன் போதும்
ஆனால் ஒன்று மட்டும் உறுதி
என்
இனத்தின்
இறுதி உயிரும் சொல்லும்
“வடக்கு எங்கள் தாயகம்
இலங்கை எங்கள் தாய்நாடு”
என்று
ஏ.எம்.மொஹமட் அனீஸ்.
முகாமைத்துவ மற்றம் வர்த்தக பீடம்,
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.
Excellent Words, Superb
ReplyDelete