இனவாதம் எனும், ஆபத்தான மிருகம்
-மப்றூக்-
இனவாதம் என்பது புத்தியில்லாததோர் ஆபத்தான மிருகமாகும். ஒரு வீட்டு நாயைப் போல அதைப் பழக்கி வைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த மிருகமானது, வசப்படுத்தி வைத்திருந்தவனையே வேட்டையாடிக் கொன்று விடும். இனவாதம் எனும் மிருகத்துக்கு பசி வந்து விட்டால், பின்னர், நம்மாள் - பிறத்தியாள் என்கிற வித்தியாசமெல்லாம் அதற்குத் தெரிவதில்லை. இதற்கு அண்மைய உதாரணம், மஹிந்த ராஜபக்ஷ. இனவாதத்தை வளர்த்து அதனூடாக தனது ஆட்சியைத் தொடரலாம் என்று நினைத்த அந்த மனிதனையே - கடைசியில் இனவாத மிருகம் வேட்டையாடித் தீர்த்து விட்டது. பொதுபலசேனா என்கிற காவிப் பயங்கரவாதத்தை உருவாக்கி, அதனூடாக இனவாதத்தை வளர்த்து விட்டு, அதில் குளிர்காய நினைத்த மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் குடும்பமும் கடைசியில், அந்த இனவாதத் தீயிலேயே கருகிப் போனமைதான் முரண்நகையாகும். இனவாதம் என்பது, வெற்றி பெறுவதற்கான சூத்திரம்போல் தெரிந்தாலும், கடைசியில் அது தோற்றுப் போய்விடும். அரசியலுக்கும் - இனவாதத்துக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன. சும்மா கிடக்கிற இனவாதம் எனும் சங்கை, அடிக்கடி ஊதிக் கெடுப்பவர்கள் அரசியல்வாதிகள்தான். இனவாதம் எனும் மிருகம் ஆடிய வேட்டையின் ரத்தக் கறைகள், இலங்கையின் வரலாறு முழுக்கச் சிதறிக் கிடக்கின்றன. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று எல்லாத் தரப்பினைச் சேர்ந்த அரசியல்வாதிகளும், இனவாதத்தை 'போதும் போதும்' என்கிற அளவுக்குக் கையில் எடுத்திருக்கின்றார்கள். ஆனாலும், இனவாதத்தினைக் கையில் எடுக்கும் இந்த அரசியல்வாதிகள் ஒன்றும், தனது இனத்தின் மீது, தீராத காதல் கொண்டவர்கள் இல்லை. தேவையேற்பட்டால், இந்த வகையாட்கள் தமது அரசியலுக்காக, தாம் சார்ந்த இனத்தினையும் பலி கொடுத்து விடுவார்கள். இவர்களின் அகராதியில், இனவாதம் என்பதற்கு அர்த்தம் வேறாகும். இனவாதம் என்பது, ஆரம்பத்தில் காட்டுத் தீ போல் தனது முகத்தினைக் காட்டுவதில்லை. முதலில் ஒரு சிறு துளியாகத்தான் அது வெளிப்படும். பின்னர்தான், அது கோர முகத்தோடு தனது வேட்டையைத் தொடங்கும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில், முஸ்லிம்களின் கடைகளுக்குக் கல்லெறிவதில்தான் பொதுபலசேனாக்களின் இனவாதச் செயற்பாடுகள் ஆரம்பித்தன. இறுதியில் அளுத்கம மற்றும் பேருவளையில் உயிர்ப்பலிகள் எடுத்து, பல்லாயிரம் கோடி ரூபாய்களை அழிப்பது வரை சென்றது. இதில் இன்னுமொரு முரணும் உள்ளது. இனவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகம், தாம் பெற்றுக் கொண்ட அதே வலியினை, அடுத்த சமூகம் மீது திணிப்பதுதான் அந்த முரணாகும். சிங்கள இனவாதிகளால் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக, ஆயுதம் ஏந்தும் நிலைக்குச் சென்ற தமிழ்ச் சமூகம் ஒரு கட்டத்தில், இனவாத முகம்கொண்டு, முஸ்லிம்களை வேட்டையாடத் தொடங்கியது. முஸ்லிம்களும், தமிழர்கள் மீது அந்த வேட்டையினைப் பரீட்சித்துப் பார்த்தார்கள். உண்மையில், நான் மேலே எழுதியிருக்கும் பந்தியிலுள்ள சில சொற்கள் உறுத்தலானவையாக உங்களுப் படவில்லையா? சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் இனவாதத்தோடு செயற்பட்டார்கள் என்று எழுதியிருப்பது சரிதானா? மேற்சொன்ன சமூகங்களுக்குள் இனவாதத்தை வெறுப்போர் என்று எவருமில்லையா? இருப்பார்களாயின், எனது எழுத்து அவர்களை நோகச் செய்திருக்குமல்லவா? ஒவ்வொரு சமூகத்துக்குள்ளும் இனவாதிகள் இருக்கின்றார்கள் என்பது உண்மைதான். அதுபோலவே, ஒவ்வொரு சமூகத்துக்குள்ளும் இனவாதத்தை வெறுப்போரும் உள்ளனர். மிகச் சரியாகக் சொன்னால், இனவாதத்தை வெறுப்போரின் தொகைதான், ஒவ்வொரு சமூகத்துக்குள்ளும் அதிகமானதாகும். ஆனாலும், இனவாதிகளின் கைகள் உயரும்போது, அவர்கள் பெரும்பான்மையானவர்கள் போலத் தோன்றுகிறது. அது ஒரு பிரமை. அவ்வளவுதான். ஒரு சமூகத்திலுள்ள இனவாதிகள் சத்தமாகப் பேசும்போது, இனவாதத்தினை வெறுப்போர் மௌனமாக ஒதுங்கி விடுகின்றார்கள். அதனால்தான், இனவாதிகள் பெரும்பான்மையானோராகத் தெரிகின்றனர். இனவாதிகளின் குரலை விடவும், இனவாதத்தை வெறுப்போர் உரத்துக் குரல்கொடுப்பார்களாயின், இனவாதிகளின் குரல் அடங்கிப்போய் விடும். ஆனால், இனவாதத்தினை வெறுப்போரில் அதிகமானோர் இதற்குத் துணிவதில்லை. இனவாதிகளை இனவாதிகளாக மட்டுமே நாம் பார்க்கத் தொடங்கினால், அவர்கள் தோற்றுப் போய் விடுவார்கள். இனவாதிகளை நாம் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாதிகள் என்று பார்க்கத் தொடங்குகின்றபோதுதான், உண்மையில், இனவாதிகள் தமது இலக்குகளை அடையத் தொடங்குகின்றனர். ஒரு சமூகத்துக்குள்ளிருந்து எழும் இனவாதக் குரலுக்கு, அதே சமூகத்தைச் சேந்தவர்கள்தான் முதலில் எதிர்ப்புக் காட்ட வேண்டும். அப்போது, குறித்த இனவாதக் குரல்கள் ஆரம்பத்திலேயே நீர்த்துப் போய் விடும். ஆனால், இதனை நம்மில் அதிகமானோர் செய்வதேயில்லை. கொழும்பு 13, பாபர் வீதியிலுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத் தேர்த் திருவிழாவை முஸ்லிம்கள் தடுத்து நிறுத்த முற்படுவதாக ஒரு செய்தி பரவியது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த தேர்த் திருவிழா இறுதியில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது. குறித்த ஆலயத் திருவிழா நடப்பதற்கு, ஒட்டு மொத்த முஸ்லிம்களும் போய் நின்று எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது ஒரு பக்க உண்மையாகும். அதேவேளை, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில நபர்கள்தான் இந்தத் திருவிழா நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என்பது மறுபக்க உண்மையாகும். மேற்படி கோயில் தேர்த் திருவிழாவினை நடத்துவதற்கு, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் எதிர்ப்புக் காண்பித்தமையானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். தமிழர்கள் ஒன்றும் முஸ்லிம் சமூகத்தின் தலையின் மீது தேர் இழுக்கப் போவதில்லை. அடுத்த சமூகத்தவரின் சமய அனுஷ்டானத்தினைத் தடுத்து நிறுத்தும் வகையிலான இந்தச் செயல்கள் இனவாதம் கொண்டவையாகும். ஒரு சமூகத்தவர்கள் தமது சமய, கலாசார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, மற்றைய சமூகத்தவர்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டாலும், அவற்றினைப் போட்டுப் பொறுத்துக் கொள்வதுதான் பெருந்தன்மையாகும். அதேவேளை, அடுத்த சமூகத்தவருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில், மற்றைய சமூகத்தவர், தமது சமய கலாசார நிகழ்வுகளை நடத்துவதையும் முடியுமானவரை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். நமது சமய கலாசார நிகழ்வினைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக, விடிய விடிய ஒலிபெருக்கியில் நமது நிகழ்வுகளைப் போட்டுக் கொண்டிருப்பதென்பதும் நியாயமான செயற்பாடு அல்ல. இந்த உதாரணம், எல்லா சமயத்தவர்களுக்கும் பொருந்தும். பாபர் வீதி ஸ்ரீமுத்துமாரியம்மன் தேர்த் திருவிழா விவகாரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு, பொதுபலசேனா இதில் தலையிடும் நிலை உருவாகியிருப்பதுதான் இங்கு கவலைக்குரிய பகிடியாகும். முஸ்லிம்கள் அவர்கள் விரும்பிய ஹலால் உணவை உண்ணக் கூடாது, அவர்கள் விரும்பிய ஹிஜாப் உடையினை அணியக் கூடாது எனக் கூறி, அவற்றினைத் தடுப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதோடு, முஸ்லிம்களின் தொழுகையினை நிறைவேற்றுவதற்கும் தடங்கல்களை ஏற்படுத்திவரும் பொதுபலசேனா அமைப்பினர், பாபர் வீதி ஸ்ரீமுத்துமாரியம்மன் தேர்த் திருவிழா விவகாரத்தில், தமிழ் தரப்பினருக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதாகக் கூறியிருப்பது, சாத்தான் வேதம் ஓதிய கதைக்கு ஒப்பானதாகும். இன்னொருபுறம், பாபர் வீதி ஸ்ரீமுத்துமாரியம்மன் தேர்த் திருவிழாவை நடத்துவதற்கு, முஸ்லிம் சமூகத்திலுள்ளவர்கள் எதிர்ப்புக் காட்டிக்கொண்டே, 'பொதுபலசேனாவினர் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கின்றார்கள்' என்று குற்றம் சொல்வது எந்தவகையில் நியாயமானதாக இருக்கும் என்பதையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களை, பௌத்த பொதுபலசேனா அமைப்பினர் தடுக்கக் கூடாது. ஆனால், தமிழர்களின் மத நிகழ்வான கோயில் திருவிழாவினை நடத்துவதை நாங்கள் எதிர்ப்போம் என்று, முஸ்லிம் சமூகத்துக்குள் இருப்பவர்கள் நினைப்பார்களாயின், அந்த நினைப்பின் மேல் இடிவிழட்டும். 1915ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கள, முஸ்லிம் கலவரம் எங்கு தொடங்கியது என்பதை, இந்த இடத்தில் ஒரு கணம் நினைத்துப் பார்த்தல் பொருத்தமாகும். கம்பளை பள்ளிவாசலுக்கு முன்னால், சிங்களவர்களின் பெரஹெரா பறை அடித்து மேள தாளங்களுடன் சத்தமாகச் செல்லக் கூடாது என்று, முஸ்லிம்களின் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதைச் சிங்களவர்கள் நிராகரித்தார்கள். விடயம் நீதிமன்றம் சென்றதும், தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சார்பாகக் கிடைத்ததும் வேறுகதை. ஆனால், இந்த விடயம், வரலாற்றில் சிங்கள, முஸ்லிம் கலவரம் நிகழ்வதற்கும், அதனால் பாரிய இழப்புக்கள் ஏற்படுவதற்கும் காரணமாயின. பாபர் வீதி, ஸ்ரீமுத்துமாரியம்மன் தேர்த் திருவிழா விவகாரம், தவிர்க்க முடியாமல், 1915ஆம் ஆண்டின் சிங்கள- முஸ்லிம் கலவரத்துக்குக் காரணமாக விடயத்தினையே நினைவுபடுத்துகிறது. பாபர் வீதியில் மிகப்பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அந்த வீதியானது மிகவும் நெரிசல் மிகுந்தது. எனவே, அந்த வீதியூடாக, தேர் ஊர்வலம் நடத்த வேண்டாம் என்று முஸ்லிம் தரப்பினைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர். உண்மையில், 'இந்த வீதியால் தேர் இழுக்கக் கூடாது' என்று முஸ்லிம் தரப்பிலிருந்து தடைவிதிக்க முடியாது. ஆனால், நிலைமையினைப் புரிந்து கொண்டு வேண்டுமானால், தமிழர் தரப்பு நடந்து கொள்ளலாம். உண்மையில் இதுவொரு பிரச்சினையே அல்ல. இது பிரச்சினையாக்கப்பட்டிருக்கிறது. நமது அரசியல்வாதிகளில் அதிகமானோர், அனைத்துச் சமூகங்களுக்குள்ளும் இனவாத நஞ்சினைக் கலந்து விட்டுள்ளனர். அந்த நஞ்சிலிருந்து எந்தச் சமூகமும் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. அதற்கு ஓர் உதாரணம்தான் பாபர் வீதி ஸ்ரீமுத்துமாரியம்மன் தேர்த் திருவிழா விவகாரமாகும். நல்லிணக்கம் பற்றி நாம் வாய் கிழியப் பேசிக் கொள்கின்றோமே தவிர, நமக்குள் இன்னும், அது - ஆழமாக ஊடுருவவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
Post a Comment