புலிகளால் முஸ்லிம்கள் துரத்தப்பட்டதை, நான் கதைக்கும்போது எனது வாயை அடைக்கின்றனர் - சுமந்திரன்
புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்ட சம்பவத்தை நான் கதைக்கும் போதெல்லாம் எனது கட்சிக்குள்ளிருக்கும் சிலர் எனது வாயை அடைத்து வருகின்றனர். அதற்காக நான் ஒருபோதும் அஞ்சியதில்லை. அவர்களின் கவலை அப்படிக் கதைத்தால் தமிழர்கள் வாக்களிக்கமாட்டார்கள்,தமது பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்பதே ஆகும். ஆனால் அதற்கெல்லாம் நான் அஞ்சவில்லை.
அது பொய் என்பதை நிரூபித்துள்ளேன். உண்மையை எடுத்துரைத்தேன். அதே தமிழ் மக்கள் என்னை பாராளுமன்றம் வரை அனுப்பியிருக்கிறார்கள்.
உண்மையில் முஸ்லிம்கள் துரத்தப்பட்டமைக்கு தமிழ்அரசியல் தலைவர்களும், ஒவ்வொரு தமிழரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். அதேவேளை தமிழ் மக்களது விடுதலைப் போராட்ட வரலாற்றில் முஸ்லிம் தலைவர்கள் சிலர் செய்த தவறுகளையும் நாம் மறந்து விட முடியாது. அவர்களும் மறந்து விடக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
நல்லிணக்கத்துடன் முன்செல்ல வேண்டு மாயின் முதலில் சில கசப்பான உண்மைகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் முஸ்லிம் தலைமை விட்ட தவறை உணர்ந்து செயற்பட வேண்டும். உண்மைகளை மூடி மறைத்தால் ஒருபோதும் நாம் ஒன்றிணைந்து செயற்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளி யேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்:-
தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக இந்த காரியத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம்களைக் காப்பாற்ற முயற்சித்திருந்தால் அன்று விடுதலைப் புலிகளால் இவ்வாறான தொரு காரியத்தை செய்திருக்க முடியாது. ஆகவே இவ்வாறானதொரு துரதிஷ்டவசமான சம்பவம் நடைபெற்றமைக்கான பொறுப்பை ஒவ்வொரு தமிழரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் இந்த சம்பவத்துக்காக மன்னிப்புக் கோரியிருந்தாலும் கூட வடக்கில் முஸ்லிம் மக்கள் மீண்டும் குடியேறி வாழ்வதற்கான சரியான பங்களிப்பை தமிழ்மக்கள் செய்யவில்லை என்ற ஆதங்கம் முஸ்லிம் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக உள்ளது.அது உண்மையுமாகும்.
நாங்கள் நல்லிணக்கத்தை மேற்கொள்வதானால் அதற்கான முதற்கட்டமாக எமது தவறுகளை உணர்ந்து அவற்றைத்திருத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் நல்லிணக்கத்தின் இரண்டாவது படிக்கு செல்ல முடியும். ஆகவே இப்போது வரையில் இரண்டு தரப்பிலும் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சில முக்கிய காரணங்களும் உள்ளன. தமிழ் மக்களின் எண்ணங்களாக இவை தொடர்ந்தும் பரவிவருகின்றன.
அதாவது முஸ்லிம் மக்களால் எமது மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை முஸ்லிம் தலைவர்கள் கவனத்தில் கொள்ளாதது ஏன் என்ற கேள்வி தமிழர் மத்தியில் உள்ளது.
முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறும் சில விடயங்கள் உள்ள போதிலும் முஸ்லிம் தலைமைத்துவத்துக்கு எதிரான சில விடயங்கள் தமிழ்மக்கள் மத்தியில் உள்ளன. குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற தமிழர் இன அழிப்பை சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் சபையில் நாம் தெரிவித்த சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜெனீவாவில் பேசப்பட்ட சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசாங்க பிரதிநிதியாக அங்கு சென்று விசாரணைகளை தடுக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஆனால் தம்புள்ளை, அளுத்கம பகுதிகளில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது அந்த செயற்பாடுகளுக்கு எதிராக எழுத்துமூல முறைப்பாட்டை அவர் ஐக்கிய நாடுகள் பேரவையில் சமர்ப்பித்திருந்தார். இந்த செயற்பாட்டை தமிழர்கள் ஒரு காட்டிக்கொடுப்பு செயலாகவே கருதுகின்றனர்.
அதேபோல் நல்லாட்சி மலர்த்துள்ளது. நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் முன்னைய அரசாங்கம் தீயது என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த தீய அரசாங்கத்திலும் முஸ்லிம் தலைமைகள் இறுதிவரையில் இருந்து அமைச்சர்களாக செயற்பட்டனரே அவ்வாறு இருக்கையில் இப்போது மாற்றிக் கதைக்கின்றனர் என்ற குழப்பம் மக்கள் மத்தியில் உள்ளது.
ஆகவே இவை அனைத்தும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நான் இந்த கசப்பான உண்மைகளைத் தெரிவிக்க முக்கிய காரணம் என்னவென்றால் நாம் இரண்டு சமூகத்தினருக்கும் நல்லிணக்கத்துடன் முன்செல்ல வேண்டுமாயின் இந்த உண்மைகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். சில உண்மைகள் வெளிவரவேண்டும். அவ்வாறு இவற்றை மறைத்து ஒருபோதும் தமிழ் முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து செயற்பட முடியாது.
ஆகவே தமிழ் மக்கள் விட்ட தவறுகள், அவர்கள் செய்த அநீதிகள் தொடர்பிலும் நான் எப்போதும் பேசுவேன். அதேபோல் முஸ்லிம் தலைமைகளும் தமது தவறுகளை உணர்ந்து செயற்பட வேண்டும். இல்லையேல் இந்த பிரச்சினை 25 ஆண்டுகள் அல்ல தொடர்ந்தும் பல காலம் இருக்கும்.
கசப்பாக இருந்தாலும் உண்மைகளை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
ReplyDeleteAnyone can be a politician of tamil, or Muslim or Sinhalese in this country. But they must give voice to voiceless people and accept the truths at any situation.And the must avoid to work for extremism and terrorism. Otherwise, our country people never enjoy the peace.
ReplyDeleteதனிப்பட்ட அபிமானங்களுக்கு தமது மூளையை அடகுவைத்திருப்பவர்களால் அறிவுபூர்வமாகச் சிந்திக்க முடியாது. அதனால் தமது அறிவு சவாலுக்குள்ளாகும்போது, உண்மையைக் கூறவிழைபவர்கள் மீது பழிபோடுவதைத்தான் தமது தப்பித்தல் உத்தியாகக் கையாளுவார்கள்.
ReplyDeleteஇதை இந்த தளம் முழுவதிலும் நிகழ்ந்த / நிகழும் விவாதங்களில் பார்த்திருக்கலாம் அல்லது பார்க்கலாம்.