"அக்கரைப்பற்று மக்களை பந்தாடுகிறார்கள்"
-அஸ்மத் சலா-
அக்கரைப்பற்று என்னும் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் எமது ஊரின் மக்களுக்கே உரிய அடிப்படை உரிமையை சில சுயநலம் கொண்டவர்கள் இன்னும் இன்னும் தடுத்துக்கொண்டும், எம்மை சிதைத்துக்கொண்டும் சுகம் காண்பது ஏனோ தெரியவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்னர் எந்த அரசியல் அதிகாரமும் அற்று எம் மண் காணப்பட்டபோது அயலூரில் அதிகாரம் கொண்டு காணப்பட்ட ஓர் அரசியல்வாதி திட்டமிட்டு செய்த ஒரு சதி இதுவென்பது அனைவருக்கும் தெரியும். அதுதான் அம்பாறை மாவட்டத்திற்கான தொகுதி பிரிப்பு. இங்கு நான்கு தொகுதிகள், அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில்.
இங்கு அக்கரைப்பற்று என்னும் எமது ஊரை ஊருக்கு நடுவால் செல்லும் வீதியின் மூலம் இரண்டாகப்பிரித்து, ஊரில் கிழக்கு பக்கம் பொத்துவில் தொகுதியாகவும், மேற்கு பக்கம் சம்மாந்துறைத் தொகுதியாகவும் ஆக்கி எங்கள் ஊரின் வாக்குகளை மட்டுமன்றி மக்களின் உரிமையையும் சிதறடித்து தட்டிக்கழித்துவிட்டார்கள். இது அரசியல்வாதிகளின் சூழ்ச்சி.
இது இப்படி இருக்க..
கடந்த வாரம் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்போது தேர்தல் தொகுதிமுறையிலேயே நடைபெறும் என்றும், எமது தொகுதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவு, பொத்துவில் பிரதேச செயலகப்பிரிவு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவு, நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவு என்பன அமையுமாறும் பிரித்து, தேர்தலுக்கான அறிவிப்பும் விடுக்கப்பட்டது. தேர்தலில் ஆர்வம் காட்டிய இளைஞர்கழக வாலிபர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் செய்து முடித்துவிட்ட வேளையில் இன்று சில உள்ளூர் அரச உத்தியோகத்தர்களின் ஊர்வாதம் மீண்டும் ஓங்கியுள்ளது.
அனைத்தும் முடிந்துவிட்ட இவ்வேளையில் தேர்தலை வழமையான தொகுதி முறையிலேயே நடாத்தவேண்டும் என முயற்சி செய்து, அதற்கு எமது மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியும் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.
அக்கரைப்பற்று இளைஞர் கழகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து வாக்களிக்க முடியாத நிலை. தன் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினருக்கு கூட கழகத்தில் அங்கம் வகிக்கும் வாக்காளர் வாக்களிக்க முடியாத நிலை. அக்கரைப்பற்றின் மொத்த கழகங்களில் 15 கழகங்கள் ஒரு தொகுதியினிலும், 13 கழகங்கள் வேறு ஒரு தொகுதியினிலும் பிரிந்துகொண்டால் எப்படி இது முறையான தேர்தல் ஆகும்?? ஒரே கழகத்தில் கூட இரு பிரிவு. அது இருக்கட்டும்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட வேளையில் சொன்ன தேர்தல் முறைக்கு மாற்றமாக வேட்புமனு தாக்கலும் முடிந்து, தேர்தலுக்கான அனைத்து வேலைகளையும் முடித்த கையோடு இன்னும் சில நாட்களே இருக்க, இன்று எப்படி இவ்வாறான திடீர் முடிவுகள் அறிவிக்கப்படும்? இது மனித உரிமையை மீறும் செயல் அல்லவா?
அதேநேரம் அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக ஒரு இளைஞர் சேவை அதிகாரி நியமிக்கப்படவில்லை. இன்றைய இவர்களின் முடிவு அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி இல்லாத நேரத்தில் திடீர் என எடுக்கப்பட்டதாகும். ஏற்கெனவே எடுக்கப்பட்டு தேர்தலுக்கு அறிவிக்கப்பட்ட முடிவை மறந்து, கழகங்களுக்கு அளித்த வாக்குறுதியை மறந்து திடீர் என வேட்புமனுத்தாக்கலின் பின்னர் இன்று இவர்கள் கூடி தங்களது பிரதேசத்து நலனை மாத்திரம் கருத்தில்கொண்டு எடுத்த முடிவானது மீண்டும் இவர்களின் பிரதேசவாதத்தை கக்கியுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளரே நீங்கள் நியாயமாக நடந்துகொள்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்.. அக்கரைப்பற்றை உங்கள் ஊரைப்போன்று எண்ணுங்கள். நீங்கள் தேர்தலுக்கு முன்னர் அறிவித்த முறையில் தேர்தலை நடாத்துங்கள். நிமிடத்துக்கு நிமிடம் நினைத்தவாறு முடிவுகள் எடுத்து எங்கள் வாலிபர்களின் உரிமையில் யாரையும் விளையாட விடாதீர்கள்.
இந்த விடயத்திற்கு சிறந்த தீர்வு கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் மனித உரிமை ஆணைக்குழு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், தேசிய இளைஞர் விவகார அமைச்சு, இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி, இலங்கையின் அதிமேதகு பிரதமர் ஆகியோரிடம் இது தொடர்பாக தீர்வு பெற்றுத்தர முன் வாருங்கள்.
Post a Comment