இலங்கையில் 'நிரோகீ சஹல்' என்ற புதியவகை அரிசி - நீரிழிவு நோயாளர்களுக்கு சிறந்தது
2016ம் ஆண்டு ‘நிரோகீ சஹல்’ என்ற நோயற்ற அரிசி வகை ஒன்றை அறிமுகம் செய்ய விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொகான் விஜேகோன் தெரிவித்தார்.
கண்ணெருவா தாவர கருமூலவள அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற வருடாந்த மகாநாட்டின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜப்பான் அரசின் உதவியுடன் பேராதனை கண்ணொருவாவில் நிறுவப்பட்ட மேற்படி ஆய்வு வள நிலையத்தின் 25வது வருட பூர்த்தி மற்றும் வருடாந்த ஆய்வு வைபவம் என்பன இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு அறிஞர்கள் உட்பட பல்வேறு விவசாயத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர். அவர் அதில் மேலும் தெரிவித்ததாவது:
கருமூலவள மத்திய நிலையத்தினால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் தற்போதைய விவசாயத் தேவைகளை வினைத்திறன் கொண்டதாக மாற்றி அமைக்க மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும். அதாவது எம்மிடம் காணப்படும் எல்லைப்படுத்தப்பட்ட வளங்களைப் கொண்டு அதிக பயனைப் பெறும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்வதாகும்.
நாளுக்கு நாள் மனிதத் தேவைகளும் நுகர்வும் அதிகரித்த போதும் எமது நிலவளத்தில் எதுவித மாற்றமுமில்லை மாறாக கட்டடங்கள் வீதி அமைப்பு உட்பட மற்றும் இன்னோரன்ன நிர்மாணப் பணிகள் காரணமாக நிலவளம் குறுகிக் கொண்டே போனாலும் மனித தேவைகள் அதிகரிக்கின்றன.
எனவே வினைத்திறனை அதிகரிக்க வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் நாம் மேற்கொண்ட ஆய்வின் ஒரு கட்டமே தற்போது நாம் பயன்படுத்தும் ‘அமந்தா’ என்ற கத்தரி இனம். இது இலங்கைக் காடுகளில் காணப்பட்ட ஒருவகை இனமாகும். இதனை எமது சாதாரண கத்தரி உடன் கலப்பு இனமாக மாற்றி உருவாக்கப்பட்டதே இந்த ‘ஹைபிரைட்’ கத்தரி இனமாகும். இது பாரிய விளைச்சளைத் தருகிறது.
அதேபோல் மற்றொரு இனமான “ஆசிரி’ என்ற பீர்க்கு இனமாகும். இதேபோல் ‘ரத்னா’ என்ற பப்பாசி இனம் நன்கு பலன் தந்துள்ளது. இது ‘ரெட் லேடி’யை விட சிறப்பானதாகும். அதேபோல் அடுத்த வருடம் புதிய ரக கறி மிளகாய் இனம் ஒன்றையும் அறிமுகம் செய்ய உள்ளோம்.
இதனை விட 2016ம் ஆண்டு எமது வழிகாட்டலில் அம்பலாந்தோட்டையில் ஆய்வு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட அம்பலாந்தோட்டை சிவப்பு அரிசி இனம் ஒன்றும் உள்ளது.
இது நீரிழிவு நோயாளர்களுக்கு சிறந்தது. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் அதே நேரம் நீரிழிவு நோயாளர்களும் பயமின்றி இதனைப் பயன்படுத்தலாம். சம்பாபோன்ற இனங்கள் நீரிழிவு நோயாளர்களுக்கு உகந்ததல்ல ஆனால் இது அப்படியல்ல.
இவ்வாறு காலத்திற்கேற்ற பல்வேறு கலப்பு இனங்களை உருவாக்க எமக்கு சில அடிப்படை வளங்கள் தேவை அதற்காக அப்படியாக எல்லைப்படுத்தப்ப ட்ட வளங்களைப் பாதுகாத்து வைத்திருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் எதிர் காலத்தில் மூல இனத்தைக் கண்டு பிடிக்க முடியாது போகும். இதனை நாம் தாய்த் தாவரம் என்போம்.
Post a Comment