Header Ads



இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 63ஆவது அங்கத்தவர் பொதுக் கூட்டம்

 (இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 63ஆவது அங்கத்தவர் பொதுக் கூட்டம் 'கட்டமைப்பைப் பலப்படுத்தும் கூட்டமைப்பின் பண்புகள்' எனும் கருப்பொருளில் 2015.10.31ஆம் திகதி கண்டி, பொல்கொல்லை  NICD மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.)

-அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் (நளீமி)-

இப்பிரபஞ்சத்தையும் அதில் உள்ள அனைத்தையும் சிருஷ்டித்த இறைவன், அவற்றை ஓர் ஒழுங்கான கட்டுக்கோப்பிலும் சீரமைப்பிலும் படைத்துள்ளான். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பரஸ்பரம் இணைந்து, ஓர் ஒழுங்கிற்கும் கட்டுப்பாட்டிற்கும் வரையறைக்கும் உட்பட்டே இயங்குகின்றன.
'அவனே யாவற்றையும் படைத்து, ஒவ்வொன்றிற்கும் ஓர் ஒழுங்கை வழங்கினான்.' (அல்குர்ஆன் 25: 2)
'சூரியன் சந்திரனை அணுக முடியாதுளூ இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே கிரகங்களும் நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் தன்னுடைய வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.' (அல்குர்ஆன் 36: 38,40)

ஒவ்வொரு படைப்பும் அதற்கென வரையறுக்கப்பட்ட பணியை ஓர் ஒழுங்கு முறைக்கேற்ப நிறைவேற்றும் வகையில் சிருஷ்டிக்கப்பட்டிருப்பதால், இயற்கைச் சூழலில் ஓர் ஒழுங்கும் கட்டுப்பாடும் சீரமைப்பும் காணப்படுகின்றது. இது போன்றே மனித சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் பரஸ்பரம் ஒத்துழைத்து செயற்படும்போது அமைதியும் ஒழுங்கும் உருவாகி மனித சமூகம் பலமடைகிறது.
எனவே நாட்டின் சட்டத்தை, ஒழுங்குகளை மதித்து அவற்றுக்கு கட்டுப்பட்டு நடக்கின்ற மனப்பாங்கு எல்லா மட்டங்களிலும் உருவாக்கப்பட வேண்டும். ஒரு நாட்டு மக்கள் தமது நாட்டு சட்டங்களை, ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டுமாயின் அந்நாட்டு மக்களிடம் நாட்டுப்பற்றும் நாட்டை வளப்படுத்துவதில் உண்மையான கரிசனையும் இருக்க வேண்டும்.
ஒரு கட்டடத்தை அதிலுள்ள ஒவ்வொரு செங்கல்லும் பரஸ்பரம் ஒன்றுடன் மற்றொன்று இணைந்து உறுதியும், பலமும் அடையச் செய்வது போன்று சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனும் ஏனையவர்களுடன் இணைந்து, சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் ஆகிய பெறுமானங்களின் அடிப்படையில் செயற்பட வேண்டும்.

இனம், நிறம், வர்க்கம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த ஒரு தனிமனிதனினும் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது என்ற கருத்தை இஸ்லாம் குறிப்பிடுவதோடு, அத்தகைய குறுகிய உணர்வுகளின் அடிப்படையில் செயல்படுவதையும் அது முற்றிலும் தடை செய்துள்ளது.

இஸ்லாமிய ஆட்சியில் கீழ் வாழும், முஸ்லிம் அல்லாதார் அவர்களது மதக் கிரியைகளை நிறைவேற்றுவதிலும் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை போன்ற விடயங்களில் அவர்களது சட்டம், வழக்காறு ஆகியவற்றின் அடிப்படையில் செயல்பட பூரண சுதந்திரம் பெற்றவர்களாவர். நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றதும் அவர்கள் உருவாக்கிய மதீனா சாசனத்தில், அங்கு வாழ்ந்த யூதர்களின் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களுக்குப் பூரண மத சுதந்திரம் வழங்கப்பட்டது. இது போன்றே நபி (ஸல்) அவர்கள் நஜ்ரானின் கிறிஸ்தவர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது.

No comments

Powered by Blogger.